என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 32 of 36 in the series 30 செப்டம்பர் 2012

[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட  சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது]

 

பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும், எந்த அளவிலும் உண்டாகலாம். பார்வையின்மையின் அளவையும், வாழ்வில் அது உண்டாகும் காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதனை நான்கு பெருங்கூறுகளாகப் பகுக்கலாம். அவையாவன: 1] பிறப்பிலேயே உண்டாகும் முழு பார்வையின்மை, 2] பிறப்பிலேயே உண்டாகும் பகுதி பார்வையின்மை 3] வளர்ந்த பின் உண்டாகும் முழு பார்வையின்மை 4] வளர்ந்த பின் உண்டாகும் பகுதி பார்வையின்மை

 

இந்த நான்கு பார்வையின்மை நிலைகளும் பல்வேறு வித்தியாசங்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்றாலும், எல்லோருக்கும் பொதுவாகச் சில தடைகள் பார்வையின்மையால் உண்டாகிறது. அவை அனுபவம் பெறுதல், அனுபவ வெளிப்பாடு, வெளிப்பாட்டை எழுத்தில் வடித்தல், எண்ணியதை எண்ணிய உடனேயே எழுத முடியாமை போன்றவ் ஐயாகும்.

 

தன்னுள்ளே பொங்கும் கடலாக, சீறும் ஊற்றாகத் தாக்கும் உணர்ச்சி அலைகளை வெளிப்படுத்த ஒரு படைப்பாளி பயன்படுத்தும் சாதனங்களில் எழுத்தும் ஒன்று. அந்த எழுத்து வர்ணனை, வாதம், உணர்ச்சி ஆகிய மூன்றில் ஒரு முறையிலேயே அல்லது, அந்த மூன்றில் எல்லாமே வெவ்வேறு அளவில் கலந்து படைக்கப்படுகிரது. ஆதிமனிதன் வாய்மொழி யாக வெளிப்படுத்திய இதை காலத்தையும், இடத்தையும் வென்று, அவற்றைக் கடந்து, கொண்டுசெல்ல உருவானதே வரிவடிவம். இந்த வரிவடிவம் பார்வையை அடிப்படையாகக்கொண்டிருப்பதால் அதுவே பார்வையற்றவர்களின் படைப்புகள் வெளிப்படுவதற்கு ஒரு தடையாக விளங்குகிறது. பெருங்கவிஞன் மில்ட்டன் கூட இந்தத் தடைக்கு உட்பட்டே தன் பெருங்காப்பியத்தைப் படைக்கவேண்டியிருந்தது. ஆனால், இக்காலத்தில் புள்ளி எழுத்தும்[ப்ரெய்ல்] ஒலிநாடாவும், தட்டச்சும், கணினியும் இப்பிரச்னையை ஓரளவுக்குக் குறைக்கின்றன.

 

வர்ணனைகளுக்கு ஆதாரம் அனுபவம். ஊர்க்குட்டையைக் கண்டவுடன் கண்டவன் கடலைக் கற்பனை செய்யலாம். ஆயினும், அந்தக் கடல் உண்மையான கடலின் வேகத்தையும், ஆழத்தையும், ஆற்றலையும் முற்றிலுமாகக் காட்டுமா? எல்லாவிதமான கற்பனைகளுக்கும் அடிப்படைக் கூறுகள் அனுபவத்திற்கு உட்பட்டுத்தான் இருக்கின்றன. எனவே, அனுபவக்குறை பார்வையற்றோர் படைப்புகளில் ஒரு தடைக்கல்லாகவே அமைகிறது.

 

’நான் இதை உலகிற்குச் சொல்லியே ஆகவேண்டும்’ என்ற உந்துதல் பெருகும்போது படைப்பாளி அதற்கான சொற்களை, கருத்தோவ்யங்களைத் தானாகவே படைத்துக்கொள்கிறார். இத்தகைய சொல்லாட்சிகள் மொழியை வளப்படுத்துகின்றன. பார்வையற்ற படைப்பாளிகள் சில வேளைகளில் இத்தகைய அருஞ்சொற்கள் உருவாகக் காரணமாகலாம்.

 

வாதங்கள் அறிவின் அடிப்படையில் நடைபெறுகின்றன. [அப்படித்தான் நம்பப்படுகிறது]. அவற்றுக்கு புத்தியின் தெளிவே அதிக முக்கியத்துவம் பெறக்கூடியது. அதில் பார்வையின்மை எந்தத் தடையையும் விதிக்கத் தேவையில்லை. பார்வையற்றவர்கள் அதிகம் உணர்ச்சிகளை அனுபவிப் பார்கள். வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு அளவுகளில் உணர்ச்சியால் தாக்கப்படுபவர்கள் அவர்கள். எனவே, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் அவர்களுக்கு அதிகமான  தடைகள் இருக்கத் தேவையில்லை.

 

ஐந்து வயதுக்கு மேல் பார்வையிழப்பு உண்டானால், அது இடையில் வந்த பார்வையிழப்பாகவே கொள்ளப்படுகிறது. இதை ‘பார்வை உள்ளவனின் மரணம், பார்வையற்றவனின் பிறப்பு’ என்று அறிஞர்கள் கொள்கின்றனர். பிறப்பும் இறப்புமே மனிதனின் அடிப்படையான அனுபவங்கள். ஆனால், இதனைப் பற்றி சொல்லக்கூடியவர்கள் யாருமில்லை. இரண்டு நிலைகளில் பேச்சுக்கோ, எழுத்துக்கோ வழியில்லை. ஆனால், அந்த அனுபவங்களை வாழ்வில் [ஏறக்குறைய] அனுபவித்தவர்கள் தங்களது புனர்ஜென்மத்தின் இயல்பைப் பற்றி பேசமுடிந்தால் அது தனித்தன்மை கொண்ட ஓர் அனுபவமாக அமையும்.

Series Navigationகதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
author

Similar Posts

Comments

  1. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,

    இந்த ‘என்னுரை’ பேராசிரியர் ஜெயராமன் அவர்களால் எழுதப்பட்டது. ஊற்றுக்கண்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலே என்னுடைய பெயர் தரப்பட்டிருப்பது தேவையில்லை. நீக்கிவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    தோழமையுடன்
    லதா ராமகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *