என் அருமைச் சகோதரியே ரிசானா..!

-ஜே.பிரோஸ்கான் –
என் அருமைச் சகோதரியே ரிசானா
உனது மரணம் உலக மக்களின்
பேரிழப்பு.
நேற்று நீ உறங்கிப் போன பின்
அந்த அரேபியாவில் ~ரீஆ
சட்டமும் தடுமாறி நின்றதாம்
சரியா செய்யாததால்.

பதினேழு வயசு குழந்தை நீ
பக்குவம் அறியா இளசு நீ
மொழியும் தெரியா பறவை நீ
இதையறிந்தும் அந்த அரேபியா
தாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே
சரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது
அவள் செயல் கண்டு.

நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது.
ரிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்து விடுவாய் என்று.

அது என்னவோ உண்மைதான்
நீ மைய்யத்தாகி வருவாயென்று
யாரும் சொல்லவே இல்லையே.

இப்போ நான் எப்படிச் சொல்வேன்
நீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு
மார்க்கம் கற்ற குர்ஆன் மத்ரஸாவுக்கு
அந்த அடுப்பங்கறைக்கும்
ஆட்டுப் பட்டிக்கும் எப்படிச் சொல்வேன்
நீ இனி வரவே மாட்டாயென்று.

நீயும் சகோதரியுமாய்
ஊஞ்சல் ஆடிய புளியமரமும்
தும்பி பிடித்து விளையாடிய
அந்தக் கவளப் பற்றைகளும்
உன்னைத் தேடுமே.

சகோதரி உன் மரணம் பற்றி
இன்று கரடு முரடான
மனசுகள் கூட கரைந்து போனதை
நாம் கண்டோம்..
குருதித் தொடர்புகளை விட
உன்னை நேசித்த மனிசத் தொடர்புகள்
உனக்காக வருந்திய பொழுதுகளில்
அந்த அரேபியாவின் உம்மாவுக்கு
அசிங்க அசிங்கமாய்
அசுசியான வார்த்தைகள் கொண்டு
ஆறுதலாகினதையும் கண்டு நாங்கள்
இன்னும் இளைப்பாறவில்லை.

இத்தனைக்கும் மத்தியில்
உனக்கொரு பிடிச்சோறு
உருண்டையாக்கித் தந்து
பசி மறக்கடிக்கச் செய்த
தாயின் கைகள் ஒவ்வொரு
உணவு வேளையிலும் உன்னைத்
தேடுமே..
உன் தாய் என்னதான்
சொல்லப் போகிறாலோ.?

சகோதரியே..
நீ அந்த அரேபிய மண்ணில்
அறியாமை அரேபிகளின் ஆத்திரத்தில்
மௌத்தாகிப் போனதை எண்ணி
கவலையாகி விடாதே..!

நாளை உனக்கான வாழ்க்கை
மிக மிக விசாலமான உல்லாசமான
வாழ்க்கை காத்திருக்கின்றது..
களிப்படைந்து உறங்கு நீ.

தினம் தினம் நாம்
கையேந்திக் கொண்டே இருப்போம்
இறைவனிடம் உன்
ஈடேற்றத்திற்காக..!!

-ஜே.பிரோஸ்கான் –

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’