என் முகம் தேடி….

சிவப்பும் மஞ்சளுமாய்

பழுத்த இலைகள்

பாதையோரத்தில்

பாதங்களைத் தொடும்

தூரத்தில்

ரொம்ப தூரம் நடந்துவிட்டேன்

ஒவ்வொரு விடியலும்

வெவ்வேறு முகங்களுடன்

தனியாகவே நடக்கின்றன

என்னைத் தொலைத்தப்

பாதையில்.

ஒவ்வொரு முகத்திலும்

என் முகத்தின் சாயலைத் தேடி

களைத்துப் போய்விட்டேன்

எங்காவது தாகத்துடன்

என் முகம்

தவித்துக் கொண்டிருக்கலாம்.

வழிப்போக்கன் சிந்திய

எச்சில் பருக்கையைத்

எடுத்து தின்று

விக்கிக்கொண்டிருக்கலாம்.

மஞ்சள் கயிற்றோடு

மாங்கல்ய பெருமையை

பேசிக் கொண்டிருக்கலாம்.

எது எனக்கான முகம்

என் முகம்

காட்டுவதோ உன் கண்ணாடி

காண்பதோ உன் கண்கள்

என் முகம்

என் முகம்

கதறி அழுகிறது

நீ எழுதிய உன் மொழியில்.

தீயாகச் சுடும் கண்ணீரில்

சப்தங்கள் மரணித்த

மவுனத்தில்

காற்று உயிர்ச்சுருளைத் தீண்டி

முத்தமிடுகிறது.

கணநேரம் கண்மூடி

இருள் போர்த்திய

நட்சத்திரக் கூட்டத்தில்

கைகளை நீட்டி

காற்றைத் தழுவ

வெறிகொண்ட

காமுகியாய் விழித்துக் கொள்கிறேன்.

காற்று காதலனைப் போலவே

கை அசைத்து

கைவிட்டு செல்கிறது.

என் முகம்

அவனிடமும் இல்லையென

காற்றும் சொன்னது

அது கதையல்ல, நிஜம்தான்.

பதிவு செய்யும் கண்ணாடி

.

Series Navigationமலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்