பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)

This entry is part 2 of 29 in the series 20 மே 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

உழவரை மறக்காத உழவுக் கவிஞராக மக்கள் கவிஞர் விளங்கினார். உழவன் வாழ்வு உன்னத வாழ்வு என்று எழுதினார். அதனால்தான்,

‘‘நல்லவர் செய்த செயல்களிலே – பயிர்

நாட்டியமாடுது வயல்களிலே’’

என்று உலகத்தாருக்கு உணவிடும் உழவனே, மற்றவருக்கு உதவும் பண்பு கொண்ட உழவனே நல்லவன் என்று உலகத்திற்குப் பறைசாற்றுகின்றார்.

நடிப்பிற்காகக்கூட உழவர்களை இழிவாக நடத்தத்தெரியாதவர் மக்கள் கவிஞர். ‘‘1954-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் கண்ணின் மணிகள் நாடகம் நடிக்கப்பட்டது. இதில் மக்கள் கவிஞர் ஒரு போலீஸ்காரராக நடித்தார். போலீஸ் வேடத்துடன் மேடைக்கு வந்தார். ஒரு விவசாயியை அடித்துக் கைது செய்ய வேண்டிய காட்சி.

கவிஞரோ தடியைக் கீழே போட்டுவிட்டு விவசாயியின்மேல் கையை வைத்து லேசாகத் தள்ளினார். திரைக்கு உள்ள இருந்து நாடக இயக்குநர் அடி!அடி! என்று கத்துகிறார். கவிஞர் அடிக்காமல் சிரிக்கிறார்கள். ரசிகர்கள் கூட்டமே இதைக் கண்டு சிரித்தது.

நாடகம் முடிந்தபின், ‘ஏன் நீங்கள் அவரை அடிக்கவில்லை?’’ என்று அவரை நாடக இயக்குந் ஏ.வீரப்பன் கேட்டார். நான் அடித்தால் நாடகமே நடக்காமல் போய்விடும். அதனால் அடிக்கவில்லை என்றார் மக்கள் கவிஞர்’’ என்று தோழர் மாயாண்டி பாரதி குறிப்பிடுவது மக்கள் கவிஞரின் உளக்கிடக்கையையும் அவரது தூய எண்ணத்தையும் காட்டுவதாக உள்ளது. (மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், பொன்விழா வெளியீடு பக்.,406). பாரதி உழவிற்கும், உழவருக்கும் வணக்கம் செலுத்த மக்கள் கவிஞரோ ஒருபடி மேலேசென்று அவ்வுழவரை அனைவரும் வழிபடும் கடவுளர்களாகக் காண்கிறார்.

கவலை வென்ற கவிஞர்கள்

இரு கவிஞர்களின் வாழ்க்கை வறுமையும் வெறுமையும் நிறைந்ததாக விளங்கியது. பாரதி வறுமையில் உழன்று வறுமையில் மடிந்தார். ஆனால் பட்டுக்கோட்டையார் வறுமையில் உழன்று சற்று வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டபோது மறைந்தார். ஆனால் கவிஞர் இருவரும் வறுமையில் உழன்றாலும் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாது அனைவருக்கும் நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் கவிதைகளைப் படைத்தனர்.

வீட்டில் வறுமை தாண்டவமாடிய போதும் பாரதி மனந்தளராது மனவெழுச்சி தரக்கூடிய பாடல்களையே பாடினார். தன் மனதினைப் பார்த்து,

‘‘நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி!

வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ’’ (ப.,101)

‘‘வையகத்தில் எதற்கம் இனக்வலை வேண்டா

வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்’’(ப.,267)

‘‘சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!’’(ப.,200)

‘‘நொந்தது சாகும்’’ (புதிய ஆத்திசூடி)

என்று பலவாறு கவலைப்படாதே என்று பாடி தனக்கும் தான் சார்ந்த சமுதாயமக்களுக்கும் நம்பிக்கை என்ற விதையை மனதில் ஆழ ஊன்றினார்.

மக்கள் கவிஞர் பாரதியைப் போன்றே ஒரு வேளை உணவிற்குப் பட்டபாடு சொல்ல இயலாததாகும். அவ்வாறிருந்தும் அவர் எதனைக் குறித்தும் கவலைப்படவில்லை. பாரதியைப் போன்று,

‘‘நெடுங்கவலை தீர்ந்ததென்று

நெஞ்சில் எழுதி ஒட்டிவை’’ (ப.,297)

‘‘போனது போட்டும் தோடாதே!

ஆனது ஆகட்டும் தேடாதே!

தோடாதே!வாடதே!’’ (ப.,288)

என்று கவலை தீர்ந்துவிட்டது என்று மக்கள் கவிஞர் பாடினார். ‘போனது போகட்டும் தேடாதே’ என்ற மக்கள் கவிஞரின் பாடல் வரிகள் பாரதியாரின் ‘‘சென்றதினி மீளாது மூடரே’’ என்ற பாடலை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலரும் கவலை குறித்து அச்சப்படுவர். அதனால் அவர்கள் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்வர். ஆனால் மக்கள் கவிஞரும் விடுதலைக் கவிஞரும் எதனைக் குறித்தும் அச்சப்படவில்லை. மாறாக அச்சத்தை அச்சப்பட வைத்தனர். பாரதி அஞ்சிய மக்களைப் பார்த்து,

‘‘அச்சம் தவிர்’’(புதிய ஆத்திசூடி,1)

‘‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’’ (ப.,186)

‘‘தேம்புவதில் பயனில்லை தேம்பித் தேம்பி

இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி

எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்’’ (ப.,268)

என்று வாய்ப்பு நேரும்போதெல்லாம் பாடி மக்களுக்கு அச்சத்தைப் போக்கி அவர்களை வீரர்களாக மாற்றுகிறார்.

மக்கள் கவிஞரும்,

‘‘கொடுமையையும் வறுமையையும்

கூடையிலே வெட்டிவை!

கொஞ்ச நஞ்ச பயமிருந்தால்

மூலையிலே கட்டிவை’’ (ப.297)

‘‘கலங்காதே கவலைப்படாதே

கவனித்துக் கேளடி தங்கமே

உறங்காதே பயந்து விடாதே

உலகத்தைப் பாரடி தங்கமே’’ (ப.,299)

என்று பாடி மக்களின் அச்சத்தைப் போக்குகின்றார். மேலும், அச்சத்தைவிட்டு அனைத்து மக்களையும்,

‘‘பொறுப்புடன் உழைத்து உழைத்து

வெறுப்படைந் திருப்பவனே!

வரப்பெடுத்து வயமைத்து

வானம் பார்த்து நிற்பவனே!

புறப்படடா உடனே புறப்படடா!’’ (ப.,296)

என்று கொடுமைக்கு எதிராகப் போராட மக்கள் கவிஞர் அழைக்கின்றார். பாரதி பாரத நாட்டைச் சுரண்டிய வெள்ளையரை வெளியேற்ற அறைகூவல் விடுத்தார். ஆனால் உழைக்கும் மக்களின் உழைப்பினைச் சுரண்டி வாழும் வர்க்கத்திற்கு எதிராகப் போராட மக்களை ஒன்று திரட்டுகின்றார் மக்கள் கவிஞர். சுதந்திரம் பெற்றும் மக்கள் வாழ்வு மேன்மையடையவில்லை என்ற மனக்குறை மக்கள் கவிஞரின் பாடல்களில் காணப்படுவது நோக்கத்தக்கது. அதனால்தான்,

‘‘எனக்கொரு மனக்குறை அகற்றிடல் வேண்டும்

எதிர்த்தவர் சிரத்தினை அறுத்திடல் வேண்டும்!

நினைத்தவை முடித்திடும் உடல் திறன் வேண்டும்

நெருப்பென எரித்திடும் செருக்குணம் வேண்டும்!’’ (ப.,271)

என்று தன்மனக் கருத்தை வெளியிடுகின்றார். பாரதி,

‘‘……………என்தன்

பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்” (ப.,115)

என்று பராசக்தியிடம் வேண்டுவதைப் போன்றுள்ளது நோக்கத்தக்கது. இவ்விரு கவிஞர்களின் வெளிப்பாடும் காலவெள்ளத்திற்கு ஏற்றாற் போன்று அமைந்துள்ளது. கவலையை வென்ற கவிஞர்களின் பாடல்வரிகள் என்றென்றும் மக்களின் கவலையைப் போக்கும் அருமருந்தாய் அமைந்திலங்குகிறது.

சுதந்திரம்

பாரதியார் சுதந்திரத்திற்காகப் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வாழ்ந்தார். பாரதி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை எனலாம். எப்பாடு பட்டேனும் சுதந்திரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று கருதிய பாரதி,

‘‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’’ (ப.,55)

‘‘விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திரதேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே!’’ (பக்.,55-56)

என்று பாடி மக்களைச் சுதந்திரப் போராட்டத்திற்குத் தூண்டினார். மேலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே,

‘‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்மோமென்று’’ (ப.,58)

என்று சுதந்திரம் பெற்றுவிட்டதாகப் பாடினார். பெற்ற சுதந்திரத்தை எப்படிப் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பதை,

‘‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?’’ (ப.,54)

என்று பாரதி மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். ஆனாலும் பாரதி உயிரோடு இருந்தவரை பாரதம் சுதந்திரம் பெறவில்லை. பாரதி இறந்தபின்னர் தான் பாரதம் சுதந்திரம் பெற்றது.

பாரதியின் வழிவந்த பட்டுக்கோட்டையார் சுதந்திர நாட்டில் வாழ்ந்தவர். மக்கள் நாட்டின் சுதந்திர வரலாற்றை மறக்காது சுதந்திர நாட்டினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு,

‘‘சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாள் இந்தியத் தாய்!

சொல்லொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று

தூங்காமல் இரவு பகல் பாடுபட்ட

தோழர்களே! தாய்மாரே! தந்தைமாரே!

சிறை வாழ்க்கை வேற்றாரின் கொடிய சட்டம்

சித்ரவதைக் குண்டடிகள் யாவும் தாங்கித்

தேகமெலாம் தியாகவடுப் பெற்றுநின்ற

சிங்கங்காள்! செக்கிழுத்த சிதம்பரமே!’’

‘‘………………………. ………………………….. ………………………… ………………………….

இதுவரை நீ மகிழ்ந்திருப்பாய் என்ற எண்ணம்

என்போன்றோர்க் கில்லை இனியேனும் அந்தப்

புதுவாழ்வும் ஒற்றுமையும் புனிதத் தொண்டும்

பொலிக என வணங்குகின்றோம் அன்னையே நீ!

பூரிக்கும் அன்னாளை எதிர்பார்க்கின்றோம்’’ (ப.,222)

என்று பாடுகின்றார்.

மேலும் கொத்தடிமை முறை நாட்டில் இருப்பதைக் கண்டு மனம் நொந்த மக்கள் கவிஞர்,

‘‘நிரந்தரமா சகலருமே

சொதந்திரமா வாழணும்!’’ (ப., 274)

என்று மீண்டும் சுதந்திரத்தை வலியுறுத்திப் பாடுகின்றார்.

சுதந்திர நாட்டில் ஒற்றுமையுடனும், சுயநலமின்றியும் புனிதத் தொண்டு செய்யும் மனப்பான்மையுடனும் மக்கள் வாழ வேண்டும். அப்போதுதான் இந்தியத் தாய் மகிழ்வாள் என மக்கள் கவிஞர் அறிவுறுத்துகின்றார். இருவரது நோக்கமும் ஒன்றாக இருப்பதற்குச் சான்றுகளாக மேற்குறிப்பிட்ட பாடல்கள் விளங்குகின்றன. சுதந்திரம் பெற்றவுடன் மக்களின் கடமை என்ன என்பதை இருபெருங்கவிஞர்களின் பாடல்களும் வலியுறுத்துகின்றன.(தொடரும்………)

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *