எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 21 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com)
கிண்ணியா மண்ணில் தங்களது நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களான ஏ.ஏ.எம். அலி, கிண்ணியா நஸ்புல்லாஹ், ஜே. பிரோஸ்கான், ஏ.கே. முஜாராத், ஏ.ஏ. அமீர் அலி, பாயிஸா அலி, ஜெனிரா கைருள் அமான் போன்றோர்கள் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியினூடாக கவிஞர் எம்.சி. சபருள்ளாவும் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். முஹம்மது காஸிம் வெளியீட்டகத்தினூடாக, 110 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 46 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நூலாசிரியர் இந்த நூலை காலா காலமாக அரசியலில் அநாதரவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருமலை மாவட்ட முஸ்லிம்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். வீடு செல்லும் வழியில் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தலைப்பிட்டு நூலாசிரியர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ”வெயில்பட்டுத் தெரிக்கும் ஒரு கண்ணாடியில் விமரிசையாக வந்துவிழுகின்றன வார்த்தைகள். அதிகூடிய பிடிவாதத்துடன் கவிதையை உணர்வுகளின் விரல்கொண்டு தடவிக் கொடுக்கின்றேன். இப்படித்தான் கவிதையுடனான எனது கட்டில்பந்தம் பருவம் முளைவிடத் தொடங்கும்முன் ஆனால், அறிவு துளிர்விடத் தொடங்கிய காலத்தில் கால்கோளாகியது. முடிவிலியாகத் தொடரும் பயணம் இனி மரணத்துடன் தான் முற்றுப்பெறுமோ?” என்று ஆதங்கப்படுகின்றார்.
நூலாசிரியர் பற்றி கிண்ணியா ஏ. நஸ்புள்ளா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஷஷசபருள்ளா ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர், சிறந்த மேடைப் பேச்சாளர், ஒரு பாடகர் என பன்முகத்தளத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். தவிரவும் தற்போது தீவிர மற்றும் மாற்று அரசியல் பற்றி சமூகத் தளத்தில் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் கிண்ணியா சபருள்ளா இன்னுமோர் அஷ்ரப் எனும் ஆளுமை மீண்டும் வரலாம். ஆனால் அவர் ஒரு கவிஞராக இருப்பாரா என்று எழுகின்ற சமகாலத்து ஆதங்கங்களுக்கு மத்தியில் இவர் நம்பிக்கையூட்டுகிறார்.
மேலும் இந்நூலில் உள்ள கவிதைகள் குறித்து அத்தனை கவிதைகளும் முஸ்லிம் தேசத்தின் ஆவணக் காப்பகம். கடந்து சென்ற போர்க் சூழலின் கருணையற்ற காட்சிப்படுத்தல், கற்பனையின் ஒப்பனையிலிருந்து விடுபட்டு காலத்தின் கொடுமைகளை அப்பாவிச் சமூகஙகள் எல்லா திசைகளிலிருந்தும் எதிர்கொண்ட வரலாற்றின் அதர்மத்தை எரித்திருக்கிறார். சத்தியம் உரைக்கும் அவரது கவிதைகள் அடுத்துவரும் பரம்பரைக்கும் முன்னோரின் துயரத்தை முதுசமாக சுமந்து செல்லும் என்று குறிப்பிடுகிறார்.
பால்ய காலத்தில் தந்திரமாகத் திரியும் ஏழைச் சிறார்கள் வறுமையின் கொடுமையை உணரும் தருணத்தை வாசிக்கும்போதே படம்பிடித்துக் காட்டுகிறது முறை தவறிய நியாயம் என்ற கவிதை (பக்கம் 50). வறுமையை உணரும் மனிதநேயக் கவிதை இது.
சகதிக்குள் புரண்டு சொர்க்கிக்கும்
சேரிப்புறத்து சிறுசுகளின் சின்ன மனசுக்கு
காலத்தின் கொடுமை
கட்டாயம் தெரியவரும் ஒரு நாளில்..
முழுசாய் உசிரை விழுங்கி ஏப்பமிட்ட
முதலைகளின் இரைப்பையில்
ஒரு இனத்தின் சுத்திகரிப்புக்கான
குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன..
தூக்கம் தொலைவாகிப்போன விடிகாலை பொழுது கண் முன் நிழலாடும் காட்சி கவிதையாக இருக்கிறது. துயரத்தைப் பூசிக்கொண்டுள்ள இந்தக் கவிதை யுத்த காலத்தை என்னில் ஞாபகப்படுத்தியது. அதிகாலைக் குளிருக்கு ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால் இந்தக் கவிதையிலும், அதன் தலைப்பிலும் அதிகாலையிலேயே, அதுவும் மழைப்பொழுதில் வியர்த்தொழுகுகின்றது. இதயத்தில் மகிழ்ச்சியிருந்தால் வியர்க்காது. அதே இதயத்தில் பாரமிருந்தால் ஏற்படும் மனப்போராட்டத்தை வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற கவிதை தாங்கியிருக்கிறது (பக்கம் 90)
மழைக்காற்று சில்லிட்ட
ஒரு விடிகாலைப் பொழுதில்
குளிரைப் போத்திக் கொண்டு
உறங்கிய வீடுகளில்
நான் மாத்திரம் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.
காத்திரமான கவிதைத் தொகுதியொன்றைத் தந்த நூலாசிரியர் கிண்ணியா சபருள்ளாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்; – வியரத்தொழுகும் மழைப்பொழுது
நூலாசிரியர் – கிண்ணியா சபருள்ளா
முகவரி – பெருந்தெரு, கிண்ணியா – 06.
விலை – 250/=
Series Navigationஅவர் நாண நன்னயம்பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *