எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

author
1 minute, 21 seconds Read
This entry is part 6 of 8 in the series 28 ஆகஸ்ட் 2022

 

அழகியசிங்கர்

 

சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்.

 

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது. 

 

240 பக்கங்கள் கொண்ட  இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க  வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.

 

‘சொற்களின் கூடுகையில் எழும் திவ்யம்’ என்ற தலைப்பில் எம்.டி.முத்துக்குமாரசாமி இந்தப் புத்தகத்தில் அவர் கவிதைகளைக் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

‘நான் என் மனதைச் சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாகக் கவிதை எழுதுதலை, பெருந்தொற்று  காலத்தில் வீடடைந்து வேலை செய்யும் லயம் தப்பிய கடந்த இரண்டு வருடங்களில் கண்டுகொண்டேன்.’

 

‘கவிதையை எனக்குரிய வடிவமாக மீட்டெடுத்தும் உறுதி செய்து கொண்டதும் சமீபத்தில்தான்’ என்கிறார்.

 

இவர் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்பதை இவர் தொகுதியை முழுவதும் படிக்கும்போது தெரிந்து விடுகிறது.

 

இன்னொரு இடத்தில், ‘கவிதை சிந்தனைக்குமான ஒரு வடிவம்’  என்பதைக் கற்றுக் கொண்டேன் என்று குறிப்பிடுகிறார்.

 

இந்தக் கட்டுரையில் ஒரு கேள்வி எழுப்புகிறார்

 

‘அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?’

 

என்னுடைய கேள்வி கவிதை அறிவார்ந்த முறையில் செயல்படுமா?

 

செயல்படும் என்பதற்கு எம்.டிஎம். கவிதைகளே சாட்சி.

 

அறிவார்ந்த நிலையில் ஆரம்பத்தில் கவிதைகளை எழுதியவர் க.நா.சு.  அதைத் தொடர்ந்து, புதுமைப்பித்தன், பிரமிள், சுந்தர ராமசாமி. இப்போது எம்.டி. முத்துக்குமாரசாமி. 

 

அப்படி என்றால் என்ன என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.  உதாரணம் காட்டித்தான் இதை விளக்க முடியும்.

 

          பிரமிள் கவிதை ஒன்றை எடுத்துக்கொள்வோம்.

 

                    வழி

 

          வயிற்றுப் பசி தீர்க்க

          வராதா என்றேங்கி

          மழைக்கு அண்ணாந்த

          கண்கள்

          கண்டு கொண்டன

          வானம் எல்லையில்லாதது.

 

          இக்கவிதையில் எந்தவித உணர்ச்சிப் போராட்டத்தையும் சொல்லாமல் பசியைப் பற்றி அறிவார்ந்த நிலையில் பிரமிள் எழுதியிருக்கிறார்.

 

இக் கவிதை மூலம் எதாவது பிரச்சாரம் செய்திருக்கலாம்.  அப்படிச் செய்திருந்தால் கவிதை வரிகள் வீணாகப் போயிருக்கும். பிரசாரத்தன்மை எதுவுமில்லாமல், பிரகடனத் தன்மை எதுவுமில்லாமல், அறிவுரைத் தன்மை எதுவுமில்லாமல் கவிதையை ரசிக்கும்படி அறிவார்ந்த நிலையில் எழுதி உள்ளார்.

 

இதுமாதிரி கவிதைகளை எம்.டி. முத்துக்குமாரசாமியும் எழுதி உள்ளார்.

உதாரணமாக,

 

‘எனக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.

 

எனக்கு இப்போது

தேவைப்படுவதெல்லாம்

என் இடமூச்சை சந்திரனுக்கும்

என் வலமூச்சை சூரியனுக்கும்

தரும் ஒரு நூதன சமத்துவம்

அதை ஏன் இந்த மூக்குக்கண்ணாடிப் பெண்கள்

எடுத்துப் போய் விடுகிறார்கள்

 

கவிதை சிந்தனைக்குத்தான் ஒரு வடிவம் என்பதுபோல் எம்.டி முத்துக்குமாரசாமி மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதையில் தெரிவித்திருக்கிறார்.

 

‘காலம் தாழ்ந்தபின் வந்தவன்’ என்ற க.நா.சு கவிதையில் கவிதை அறிவார்ந்த செயல் என்பதை நிரூபிக்கிறது.

 

நாடகம் பார்க்கக் கிளம்பியவன்

நாடகம் முடிந்தபின்

நாடகக் கொட்டகையில் புகுந்தேன்

எல்லா நாற்காலிகளும்

காலியாகக் கிடக்கின்றன

எந்த நாற்காலியில் உட்காரலாம் என்று

யோசித்துக் கொண்டே

நான் நிற்கும்போதும்

பொழுது 

விடிந்து  விட்டது.

 

                    ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை இன்னும் ஆராய வேண்டும்.

 

                                                        (இன்னும் தொடரும்)

28.08.2022   

Series Navigationகாதலும்கவிதையும்நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *