எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்

Spread the love

முனைவர் என்.பத்ரி

          ’ஒரு சமுதாயத்தின் ஆன்ம வெளிப்பாடு அது குழந்தைகளைஎப்படி நடத்துகிறது’ என்பதில் தெரிந்து விடும் என்கிறார் நெல்சன் மண்டேலா.         14 வயதினை பூர்த்தி செய்யும் வரை ஒவ்வொரு தனி மனிதனும் குழந்தையெனவே கருதப்படுகிறான்.சமீபத்தில் தொடர்ந்து மூன்றாவதாக பெண்குழந்தை பிறந்ததால், அதை  ஒரு லட்சம் ரூபாய்க்கு தாயே விற்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்து நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தைகள்அடிக்கடி கடத்தப்படுவதும் அதில் சில குழந்தைகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக அந்தந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திரும்ப பெறப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. குழந்தையும் தெய்வமும் ஒன்று. அவர்களை மழலைச்செல்வம் என்றுவள்ளுவனே பாராட்டுகிறான்.ஆனால் சமீபத்தில்திருச்செங்கோடு உட்கோட்டத்திற்குட்பட்ட முத்துகாபட்டி, படைவீடு, பெருமாபட்டி பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்லில் வளரிளம் பருவத்தை சேர்ந்த பெண், ஆண்கள் பணி புரிவதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் வருவாய்த்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், சைல்டு லைன் உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் சோதனை மேற்கொண்டனர்.அங்கு 13 வயதுடைய 2 பெண் குழந்தைகள், 16 வயதுடைய 7 ஆண், 20 பெண் வளரிளம் பருவத்தினர், என 29 பேரை மீட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மீக்கப்பட்ட குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில் செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள், ஸ்பின்னிங் மில்ஸ், உணவு நிறுவனங்கள் உட்பட தொழில் இடங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளபடும் மேலும் குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் ரூ.20,000 விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

               குழந்தைகள் இல்லை எனில் உலகமே இயங்கமுடியாது.  குழந்தைகள்கருணைக்குரியவர்கள். மகிழ்ச்சியுடன்காணப்படும் குழந்தைகள் குடும்பங்களின் வரமாக உணரப்படுகிறார்கள்.எந்த குழந்தையும் எந்த பெற்றோருக்கும் தானாக விரும்பிப்பிறப்பதில்லை.காலம் காலமாக குழந்தைகளை இறைவன் கொடுத்த வரமாகவே நாம் பார்த்து வருகிறோம். குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் குழந்தைப்பாக்கியத்துக்காக நேர்த்திக்கடன், மருத்துவ சிகிச்சை போன்ற முயற்சிகளிலும் ஈடுபட்டும் வருகின்றனர். இதற்கென வணிகரீதியில் மருத்துவமனைகளும் வாடகைத்தாய்களும் சமூகத்தில் இருப்பதை நாம் அறிவோம்.

       பல குழந்தைகள்  தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு சரியானஉயிர்ப்பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை.மனைவி இறந்தால்  குழந்தையை காரணம் காட்டி மறுமணம் செய்துக் கொள்ளும் ஆடவர்களின் இயல்பு தொடர்ந்து வரும் காலங்களில் தலை கீழாக மாறிவிடுகிறது.ஆனால் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் போக்கு  சமூகத்தால் இன்னும் வெகுவாக அங்கீகரிக்கப்படவில்லை.ஆனால் அவர்களால் கணவன் இல்லாமலேயே குழந்தைகளை மிகச்சிறப்பாக வளர்க்க முடிகிறது.

                குழந்தைகள்நாட்டின் எதிர்காலத்தலைவர்கள்.எதிர்கால நம்பிக்கைகள்.முன்னுரிமை கொடுக்கப்பட்டு கவனமுடன்  ஒவ்வொரு குழந்தையையும்சிறப்பாக வளர்த்து எடுப்பதில் சார்ந்த பெற்றோருக்கு மட்டுமல்ல,நம் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது.அவர்கள் எந்த பின்புலத்திலிருந்து வந்தாலும் கல்வி மற்றும் அடிப்படைத்தேவைகளை பெறுவதற்கானஅனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள்.மகிழ்ச்சியாகவும் கவுரவமாகவும் வாழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள்.அவர்களின் வறுமையைகாட்டி அவர்களை புதைக் குழியில் தள்ளும் ஈனர்களைநடைமுறையில் உள்ள சட்டங்கள் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்கவேண்டும்.கோவில்வாசல்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் குழந்தைகள் பிச்சை எடுப்பது சாதாரணமாக காணப்படுகிறது.இது ஒரு  சமூகக் கொடுமை ஆகும்.

            ஆதரவற்ற குழந்தைகளை கண்காணிக்கவும் அவர்களுக்கு கல்வியும் அடிப்படை வசதிகளும் கிடைக்கச்செய்வதற்கெனவும் பல அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நம்மிடையே இயங்குகின்றன.இருந்தும் அவர்களின் நிலை மாறவில்லை என்றால் நமது சமூக கட்டமைப்பில் எங்கோகுறை உள்ளது. அதை தேடிக்கண்டுபிடித்து, அவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் பொறுப்பை சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.அவர்களின் ஆராய்ச்சிகளின் பரிந்துரைகள் அரசால் செயல் வடிவம் பெற வேண்டும்.இல்லையெனில் அவர்கள் ஒரு காலக்கட்டத்தில் சமூகத்திற்கு சுமையாக மட்டுமல்ல, அன்றாட பிழைப்புக்காக திருடுதல் போன்ற சமூகக்குற்றங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளாகவும் தாதாக்களாகவும் மாறிவிடலாம் ஆதரவற்ற ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளின் நிலைமை மிகவும் சிக்கலானது.அப்பாவியான அவர்கள் கயவர்கள் கைகளில் சிக்கினால் அவர்கள் வாழ்வு சின்னாப்பின்னமாகி விடுகிறது. இப்படிப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் மற்றுமொரு பிரச்சினை படிக்க வேண்டிய வயதில்கொத்தடிமைகளாகவும்,குழந்தைதொழிலாளர்களாகவும் மாறுவதும், மாற்றப்படுவதும்தான்.

              உலகம் முழுவதும் 10 வயது முதல் 19 வயது வரை 1.2 பில்லியன் குழந்தைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இதில் 186 மில்லியன் குழந்தைத்தொழிலாளர்கள் அடங்குவர்.2001 வருடத்திய தேசியமக்கள் தொகைக்கணக்கு இந்தியாவில் 5வயது வரை முதல் 14 வயது வரை உள்ள குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை 12.6 மில்லியன்  எனக்கூறுகிறது.இந்திய அரசியலமைப்பு 6 முதல் 14 வயது வரை அனைத்துக்குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ,மற்றும்குழந்தைத்தொழிலாளர்  தடைச்சட்டம் போன்றவற்றை உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் பள்ளியில் படிக்கவேண்டிய குழந்தைகள் ஆபத்தான சூழ்நிலைகளில் பல இடங்களில்  பணிபுரிந்து வருவது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல.பல குழந்தைகள் முறை சாரா தொழில்களில் எந்தஎதிர்கால பணிபாதுகாப்போ பொருளாதார உத்தரவாதமோ இல்லாமல் வாழ்வை கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழ்வது வேதனைக்குரியது.இதற்கு கூறப்படும் காரணங்கள்  வறுமையும்  படிப்பறிவின்மையும்ஆகும்.

                 குழந்தைத்தொழிலாளர் முறை சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு ஷரத்து12ன்படி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.வளர்ந்து வரும் நாடுகளில்  மூன்றில் ஒரு குழந்தை தொடக்க கல்வியில் நான்காம் வகுப்பு படிப்பைக்கூட முடிப்பதில்லை.இந்தியக்குழந்தைகளில் 17.5 மில்லியன் குழந்தைகள் விவசாயம்,தீக்குச்சி செய்தல்,தோல் பதனிடுதல்,கால்நடை வளர்ப்பு மற்றும் சுரங்கத் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். காரணம் இவர்களுக்கு பெரிய ஆட்களுக்கான ஊதியத்தை விட  குறைவான ஊதியத்தை கொடுக்கலாம்.குடும்பம் இல்லாததால் குறைந்த தேவைகள் இருக்கும்.வாரத்தின் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு 15 முதல் 16 மணி நேரம் உழைக்கவும் செய்வார்கள்.ஆக மொத்தத்தில் அவர்களை சுலபமாக ஏமாற்ற முடியும்ஆனால்,இவர்கள் குறைந்த பட்சஅடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மனதளவிலும் உடலளவிலும் படும் துன்பங்கள் ஏராளம்.மேலும் மாற்றுத்திறனாளியாக  இருந்து விட்டால் அவர்கள் படும் துயரங்களை பட்டியலிடமுடியாது. பல குழந்தைத்தொழிலாளர்கள் தூக்கமின்மை,அஜீரணம்,சுவாசப்பிரச்சனை,தோல் வியாதி ,மன அழுத்தம் போன்றவற்றால் அவதிப்படுவதாக ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. சரியான பெற்றோரோ,பாதுகாவலரோ இல்லாத நிலையில் தெருக்களில்வாழும் இவர்கள் நிலைகள் மேம்பட அரசும் சமூகமும்தான் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

          உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது ஒரு உலகளாவிய பிரச்சனை.5 முதல் 14 வயது வரையிலானகுழந்தைத்தொழிலாளர்கள் 32விழுக்காடு ஆப்பிரிக்காவிலும் 7விழுக்காடு லத்தீன் அமெரிக்காவிலும்மற்றும் 61விழுக்காடு ஆசிய நாடுகளிலும் காணப்படுகின்றனர்.

             குழந்தைத்தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் பலவற்றை நாம் இயற்றியிருக்கிறோம்.ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்  சுணக்கம் காணப்படுகிறது.நாம் அனைவரும் ஒரு காலத்தில்  குழந்தைகளாக இருந்து சோகத்தையோ சுகத்தையோ அனுபவித்திருப்போம். அந்த சோகங்கள் தற்கால குழந்தைகள் பெறுவதைத்தவிர்த்து சுகங்களை அவர்கள் பெறுவதற்கான கூட்டு முயற்சியில் இறங்குவோம்.                  

                        அனைத்துக்குழந்தைகளும் கல்வியறிவும் அடிப்படை வசதிகளும் பெற்று  வாழும் நாள்தான் விடுதலை பெற்ற இந்தியா விடிவெள்ளி காணும் நாளாகும்.அந்த நன்னாளைக் காண நாம் யாவரும் இன்றே நம் பங்களிப்பை அளிக்கத் தொடங்கலாமே.

Series Navigationவீரமறவன்இலக்கியப்பூக்கள் 268