எவர்சில்வர்

Spread the love

 

 

வளவ. துரையன்

 

காலையிலே வந்திருந்து

ஊரெல்லாம் சுற்றி வந்து

 

கடைகோடி ஆலமரத்தில்

கடைபோடுவார் ஈயம் பூசுபவர்

 

பழைய புதிய

பாத்திரங்களின்

படையெடுப்பு நடக்க

புதுப்பிக்கும் ராஜ்யம்

பூபாளம் பாடும்

 

உறங்கிக் குறட்டைவிடும்

மாமாவின் தொந்திபோல

ஏறி ஏறி இறங்கும்

அத்துருத்தியைக் காண

எங்களுக்கு ஆசை

 

காலைக் காப்பியும்

அல்லது கஞ்சியும்

இலவச நிவாரணங்கள்

 

மதியச் சிறு சோறும்

மகிழ்ச்சியானதொரு

மன நிறைவுதான்

 

கொடுப்பதை வாங்கிக்கொண்டு

கும்பிடு போட்டுப் போகும்

 

அவரை இப்போது

கிராமத்து எல்லையிலேயே

வழிமறித்து வராதேயென

இளிக்கிறது எவர்சில்வர்

Series Navigationநடந்தாய் வாழி, காவேரி – 36.ஔவையாரும் பேயும்