எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை.

“மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு தளம் உண்டா? உண்டெனில் அது என்னவாக இருக்கிறது? ” தொடர்ந்து பல கேள்விகளை இதச் சுற்றியே பின்னுகிறார் பாரவி.

“இங்கு இன்று நான் எதுவாக இருக்கிறேன். நீ என்னவாக உள்ளாய்? எதன் அர்த்தம்/ பொருள் இயங்கு தளங்களாக நாம் பயணப் படுகிறோம். தேடலின்றியே உழைப்பின்றியே ஆயாசம், அலுப்பு, உள்ளே இறந்த காலம் பிணம் தான் என்றா?” என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பிச் செல்கிறர் பாரவி.

இது பிரச்சினைக்குரிய முன்வைப்பு. மரபை ஒரு உயிருள்ள வஸ்துவாகக் கற்பனை பண்ணினால் தான் அதன் இறப்பு பற்றிப் பேச முடியும். மரபு என்பது ஓர்  ஆலமரம் போன்றது என்று சொல்லலாம். அதன் இலைகள் மருகி விழுகின்றன. விழுதுகள் ஒரு திசைக்குச் செல்கின்றன. மற்றொரு திசையில் ஊன்றிய விழுதுகள் பரவிப் பெருகுகின்றன இன்னொரு திசையில் பரவிய விழுதுகள் வாடிச் சிதைந்து விழுகின்றன. ஒரு தலைமுறையில் மரபின் தோற்றம் மாறிப் புது உருவம் கொள்கிறது.

இயல்பான் வளர்ச்சி இருக்கும் ஒரு சமூகம் இந்த மரபு மாறுதல்களை இயல்பாக ஏற்றுக் கொண்டு நகர்கிறது. ஆனால் மிக வன்முறையாக இந்த மாறுதல்கள் வெளியிலிருந்து ஆக்கிரமிக்கும் சக்திகளினால் சுமத்தப் படும்போது மரபுகள் அருகி, வாடி வதங்கி மறைந்து போகின்றன. காலனியாதிக்கமும், ஏகாதிபத்தியமும், மதம் சார்ந்த படையெடுப்புகளும் இந்த மரபுச் சிதைவை மிக வெற்றிகரமாக நிகழ்த்தி வெற்றியும் பெற்றிருக்கின்றன.

இதன் போராட்டங்கள் பல விதங்களில் வெளிப்படுகின்றன.

இதற்கும் அர்த்தம் இயங்கும் தளங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழலாம். அர்த்தம் இயங்கும் தளம் மரபுக் கலாசாரத்தின் மாறுதல்களினால் பெறும் மாற்றங்கள் ஏராளமானவை.

வணக்கம், காலை வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே என்ற விளிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். காலை வணக்கம் என்பது நம் மரபில் முன்பில்லாதது. ஆனால் ஆங்கிலமயமாக்கப் பட்ட உலகில் காலை வணக்கம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகி விடுகிறது. நமஸ்காரம், நமஸ்தே என்பவை ஒரு கலாசார/ அரசியல் இயக்கத்தால் வழக்கொழிந்து போக முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒரு தலைமுறையில் மாற்றங்கள் ஒரு சாதரண விளிப்புக்கு பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. நமஸ்காரம் என்பது தவிர்க்க வேண்டியது என்றும், வணக்கம் தக்க வைக்க வேண்டியது என்பதும் மரபின் எதிர்காலத்தை செதுக்கும் செயலாகி விடுகிறது.

இதன் நீட்சியாக இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

நான் வணக்கம் சொல்லும் போது, சில நண்பர்கள் அவர்கள் மதத்திற்கேற்ப “அஸ்ஸ்லாமு அலைக்கும்”, ” சர்வேஸ்வரனுக்கு தோத்திரம்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மரபை தன் மதத்திற்கேற்ப மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக நான் இதனைப் பார்க்கிறேன்.

பாரம்பரிய மரபினை உதற  முடியாத ஒரு காலகட்டத்தில் வலிந்து திணிக்கப்படும் இந்த மரபுகள் மெல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு போக்கிலேயே அடையாளத்தையும் மாற்றியமைக்க முயல்கின்றன.

Series Navigationகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )