எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி.  நாகராஜன் தொகுப்பாக – ’மிகையின் தூரிகை’ ஒரு பார்வை 

 

             எஸ்ஸார்சி

’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி.  நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள்.  இருவருமே பாவண்ணன் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட  இலக்கிய விரும்பிகள். . பெருமைக்குரிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

பாவண்ணன்  தமிழ் எழுத்துலகில் பேசப்படுகின்ற படைப்பாளி. சிறந்த மொழிபெயர்ப்பாளர். பல்வேறு பெருமைக்குறிய நிறுவனங்களின் விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றவர். இதுவரை  இருபத்தொரு சிறுகதைத்தொகுப்புக்களையும், இருபத்தியாறு கட்டுரைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார். கன்னட இலக்கியத்திலிருந்து தமிழுக்கு இருபத்தியாறு படைப்புக்களை கொண்டு வந்திருக்கிறார். இப்படி  இப்பட்டியல் தொடரும் விஷயமே.

பைரப்பாவின் பருவம் நாவலை கன்னடத்திலிருந்து தமிழாக்கியமைக்காக 2005 ல் சாகித்ய அகாடெமி விருது பாவண்ணனுக்கு வழங்கப்பட்டது. பெருமைமிகு விளக்கு விருது பாவண்ணனுக்கு 2019 ல் வழங்கப்பட்டது.

தொகுப்புக்குள் புகுவோம்.

 புகுவதற்கு முன்பாக எஸ்.ஜெயஸ்ரீ அவர்கள் எழுதிய முன்னுரையைப்பார்க்கலாம் .பாவண்ணன் எழுத்துக்களால் இலக்கியப்புரிதலை வளர்த்துக்கொண்டவர் ஜெயஸ்ரீ என்பதை நம்மால்  அவதானிக்க முடிகிறது. கடலூர் வளவதுரையன், அன்னாரின் இலக்கியப்பணிகள் என அவருக்குத்துணையாக இருத்தலைப்பெருமையோடு குறிப்பிடுகிறார். தன்னுடைய கணவர் ரகு ஆழ்ந்த இலக்கிய வாசகர்  என்பதையும் அவர் பிள்ளைகள் அவருக்கு உதவியாக இருந்ததையும்  முன்னுரையில் அன்போடு பகிர்ந்துகொள்கிறார்…

 மதுரை நடந்த பாவண்ணன் விளக்கு பரிசளிப்பு விழாவில் கே. பி நாகராஜன் அவர்களைச் சந்தித்ததையும் அதுவே இத்தொகுப்பு கொண்டுவர உதவிகரமாக இருந்ததையும் மறக்காமல் பதிவு செய்கிறார்.

ஜெயஸ்ரீ  முன்னுரையில் இப்படிச்[ சொல்கிறார், ‘பாவண்ணனின் படைப்புகளில் எது பிடிக்கும்? என்று கேட்டால் எதைச்சொல்வேன்?… அவருடைய சிறுகதைகளில் புராணம் இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்’’ இத்தொகுப்பு வெளிவர  இதுவே ஆதார விஷயமாகி இருக்கிறது.

இன்னும் ஒரு கணம் என்னும் படைப்பில். கிருஷ்ணையை தன்னுடையவள் ஆக்கிக்கொள்ள ப்போட்டி நடக்கிறது. கிருஷ்ணை ரத்தின மேடையில் ஒய்யாரியாய் மிளிர்கிறாள். அரசகுல திலகங்கள் அவளை அடைய போட்டிபோடுகிறார்கள். துரியோதனன் வெகு ஆவலோடு அங்கே காட்சி தருகிறான்.

சுழலுகிறது சக்கரம் அதன் மீது மச்ச இலக்கு அதனை எய்தத் தயாராய் நிற்கும் கிந்துரம் என்னும் நாமமுடைய சுந்தரவில்.

சிசுபாலன்,  ஜராசந்தன் சல்லியன்  என எல்லோரும் வந்து வந்து தோற்றுப்போகிறார்கள். துரியோதனன் வருகிறான்.கர்ணன் துரியோதனனை வாழ்த்தி அனுப்புகிறான்.

‘கிருஷ்ணை அளிக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையாக இந்த உலகில் எதுவுமே இல்லை.அவள் தரும் முத்தங்களுக்கும் உடலுடன் அவள் தழுவி அவள் உணர்த்துகின்ற களிப்புக்கும் மாற்றாக எதையுமே இந்த உலகில் முன் வைக்கமுடியாது. அவள் ஒருத்தியைமட்டும் தந்துவிட்டு அஸ்தினாபுரத்தையே அபகரித்துக்கொண்டாலும் மனதுக்கு எந்த இழப்புணர்ச்சியும் எழாதளவுக்குத்தன்னை அவள் பாதித்துவிட்டதை துரியோதனன் உணர்கிறான். இப்படியே சொல்லிப்போகிறார் பாவண்ணன்.

கணப்போதில் அங்கே தோற்று வீழ்கிறான் துரியோதனன்.

அடுத்து சுழல் என்னும் கதை..  அரண்மனைத் தேரில் ஏறி  அமர்கிறாள்   அயோத்தி அரசி சீதை.  அவளைக் காட்டில் வாழும் வால்மீகி முனிவரிடம் கொண்டுபோய்  விட்ட அந்த  சோகக்கதை தொடர்ந்து வருகிறது. அயோத்தி மாநகரத்து. வண்ணானும் வண்ணாத்தியும்  கேலி பேசிய  அந்த விஷயத்துக்கு ஒரு பிரளயம் வாய்க்கிறது. வால்மீகி சொல்கிறார், ஏன் பாவண்ணன் சொல்கிறார் என்றாலும் சரியே.

‘வாழ்வு கோடி கோடி தற்செயல்களின் தொகுப்பு ,மணிகளைக்கோர்க்கின்ற கயிறு போல எல்லாவற்றையும் கோர்த்தெடுத்தபடி ஒரு சரடு கண்ணுக்குத்தெரியாமலே நீள்கிறது’  இப்படி சீதைக்கு முனிவர் சொல்வதாய்ச் சொல்லும் வைர வரிகளால் பாவண்ணன் இமயம் தொடுகிறார். வாசகன் வணங்கி மகிழ்கிறான்.

ஏழு லட்சம் வரிகள் என்னும் கதைக்கு வருவோம். பைசாச மொழியில் எழுதப்பட்ட து ஒரு இலக்கியக்காவியம். ஏழு லட்சம் வரிகள் உடைத்துஅது. . குணாட்யர் எழுதியதே அப்பெருங்காவியம்.  அது  ஒரு மகோன்னதப் படைப்பு.  தேவ பாஷையான வடமொழியில்  எழுதப்படாததால் அது அரசவைப் பண்டிதர்களால் புறக்கணிக்கப்படுகிறது. தீக்கிரை ஆகிறது. குணாட்யர் வினா வைக்கிறார்?  வினா நமக்கும் கூடத்தான்.

‘ பூவின் மணத்தை நரிகள் எப்படி உணரும்?..

 அடுத்து அன்னை என்னும் ஒரு மாபாரதக்கதை தாய்மையின் சால்பு பற்றிப் பேசுவதைப்பார்க்கிறோம். அசுவத்தாமனை கொல்ல உலகமே கூடி நிற்கிறது. பாஞ்சாலியின் ஒரு வார்த்தையைச் செவிமடுத்து அர்ஜுனன் அவனை உயிரோடு விடுகிறான். தாய்மையின்  பாசப்பிழிவினை பாவண்ணன் இங்கே வாசகனுக்குக்கொண்டு தருகிறார்.

’ எதுவும் வேண்டாம் அர்ஜுனரே, இந்தப்பூமியில் அன்னைக்கு எஞ்சிய பிள்ளையாக இவனாவது இருக்கட்டும். இவன் அன்னையின் பெற்ற வயிறாவது குளிர்ந்திருக்கட்டும். இவனை மன்னித்து விட்டு விடுங்கள்’

பாஞ்சாலியின் வார்த்தைகள் இவை.  ஒரு அன்னையின் வார்த்தைகள் இவை. மனித  மனத்தைச்சுண்டிப்பேசும் தருணங்கள்.இவை.

அடுத்து ‘ ரணம்’ என்னும் கதைக்குச்செல்லலாம். பாரதக்கதைதான் இதுவுமே. கர்ணன் தான் ஒரு பார்ப்பனன் என்று பொய்சொல்லி பரசுராமனிடம்  போர்வித்தை கற்கிறான்.   அவனது தொடையில் வண்டு துளைத்து ரத்தம் பொங்குகிறது. கண்அயர்ந்த குரு எழுந்து கர்ணனைப் பார்த்து ‘ நீ  ஒரு அந்தணனா?’ என்கிறார். தான் பொய்சொல்லி வித்தை கற்றது வெளிப்படுகிறது.’   பொய்சொல்லிக்கற்ற இந்த வித்தை உனக்கு தகு நேரத்தில் உதவாதுபோ’ என்று பரசுராமர் சாபமிடுகிறார்.

கர்ணன் முனிவரைக்  கேட்கிறான் ’ என்னைப் பெற்ற தாயே   நான்  இப்படி எல்லாம்  அவமானப்படக்காரணமாகலாமா?’.

‘ நீ பொய்சொல்லி என்னிடம்  வித்தை கற்றாய் உனக்கு ஒரு காரணம் இருந்துதானே இருக்கிறது. அப்படியே உன் தாய் உன்னை  ப்பெற்று அனாதையாய்  ஒரு ஆற்றில் வீட்டு விட்டு ச்செல்வதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். அது அவளுக்குத்தானே தெரியும்’  அழகாய்ச்சொல்கிறார் முனிவர்..

’சாபம்’ என்னும் கதை. சீதை சரயு நதிக்கு நீராடப்போன கதை. மக்கள் கூட்டம். திமிலோகப்படுகிறது  அயோத்தி அரண்மனைப் பட்டத்து ராணி ஆற்றில் நீராட வருகிறார்களே. ஆக  மக்களின் கும்பல்.  ஒரு எளியவன்  தன்   உடம்பு முடியாத தந்தையை   அதே சரயு நதிக்கு  புனித நீராட அழைத்துச்செல்கிறான்.  அந்தக்கூட்ட நெரிசலில் மிதிபட்டு தந்தை இறக்கிறான்.  அயோத்தி அரசு சார்பில் லட்சுமணர் அவ்விரப்பிற்கு வருத்தம்  தெரிவிக்கிறார் மகனுக்கு ஆறுதல் சொல்கிறார்.

தந்தையை இழந்த மகன் லட்சுமணரிடம் கேட்கிறான்

‘செத்துக்கொண்டே இருக்க ஒரு மக்கள் கூட்டம். வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க ஓர் அரசு அரசியலில் கற்றுக்கொண்டது இது தானா லட்சுமணரே.

மேலும் சொல்கிறான்,

‘ நேர்மை உங்களிடம் இருந்ததில்லை உங்கள் அண்ணனிடமும் இருந்ததில்லை.வாலி வதை ஒன்றே போதும் உங்கள் தகுதியைப்பறை சாற்ற. அசோகவனத்துச்சிறையில்  அந்தச்சீதையிடம் இருந்த நீதி அரண்மனைக்கு வந்ததும் அடியோடு போயிற்று’

அயோத்தி ராணிசீதையை  அல்லவா  ஒருவன் அவமானப்படுத்திவிட்டான் . அரசு காவலர்கள் அவனைக்கொன்றுமுடிக்கிறார்கள். ஆனால் அவனோ பிடி சாபம் என்கிறான். பின்னரே மரணிக்கிறான் ’

‘’தந்தை முகமே காணக்கிடைக்காத அனாதைகளாக -சீதையின் பிள்ளைகள்- வளரட்டும். அரியாசனமும் மணிமுடியும்  சீதைக்கு இல்லாமல் போகட்டும்’

அவனிட்ட இந்த சாபத்தின் சாரமே சீதையை வதைக்கிறது.

தமிழ் நிலத்தில் அரசியல் களத்தில்  இது யார் யாருக்கோ எது எதையோ பழசுகளை நினைவுபடுத்தலாம்தான்.

பதிநான்கு கதைகள்  கொண்டது  மிகையின் தூரிகை எனும் இத்தொகுப்பு. அவை மணிமணியாய்  வந்துள்ளன. வாசியுங்கள் வாசக அன்பர்களே. அவை நல்லன.  தேருங்கள். தெளியுங்கள்.

இப்படி அழகழாய்த்தொன்மத்தை ஆய்ந்து  அதனுள் புதைந்துள்ள அறத்தை வெளிப்படுத்தி தனது சிறுகதைப்புனைவுகளால் சாதித்துக்காட்டுகிறார் எழுத்தாளர் பாவண்ணன்.

தொகுப்பாளர்களை மனதாரப் பாராட்டுவோம்..

——————————————————————–

Series Navigationகுருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)