ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1

சிவக்குமார் அசோகன்

ஏன் என்னை வென்றாய்!
அத்தியாயம்-1

மழை வலுத்தது. சாலையின் இருபுறமும் நடந்து செல்பவர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். கார்கள் தங்கள் ப்ளாஸ்டிக் குச்சி விரல்களால் கண்ணாடியை துடைத்தபடி ஓடின. ஜெர்கின் வாலாக்களும், குடையேந்திகளும் மழையை எதிர்த்து தத்தமது வேலைகளில் இயங்கிக் கொண்டிருக்க, குண்டு குண்டான மேகத்துளிகள் மேனியைப் பதம் பார்ப்பது குறித்த பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் வசந்தி. மாநிற உடம்பை, காட்டன் சேலையைத் தாண்டி முழுதாய் நனைத்திருந்தான் வருணன்.

மாரை மாரி காட்டிக் கொடுப்பதைப் பற்றி அவள் உணர்ந்தாளில்லை. எப்போதும் போல, சகஜமாக அவள் நடந்து செல்வதை வீதியில் கவனிக்காதவர்கள் இல்லை. இத்தனைக்கும் ஹேண்ட்பேக்கில் ஒரு சிறிய குடை வைத்திருக்கிறாள். அவளுக்கு மழையில் நனைய வேண்டும். சற்று நேரம் முன்பு அவளுக்கு ஏற்பட்ட திகைப்பு உடலில் உஷ்ணத்தைக் கிளப்பியிருந்தது. மனசு காற்றில் வசப்பட்ட புத்தகம் போல படபடத்தது.

முப்பத்திரண்டு வயதில் இதுவரை இப்படி மனசு அடித்துக் கொண்டதில்லை. அவள் வளர்ந்த சூழ்நிலையும், பழக்கங்களும் இதனை அவளுக்குப் பரிச்சயப் படுத்தவில்லை. காலம் அவளை வேறு மாதிரி செய்திருந்தது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த அப்பா, உடல் களைப்பிற்குக் குடித்தக் குடியில், அதுவே அவர் உயிரையும் குடித்தது. அப்போது வசந்தி எம்.காம் கடைசி வருடம். தங்கை வசுமதி பிளஸ்டூ. தம்பி கெளதம் பத்தாவது. விஸ் விஸ் என்று வாயில் மருந்தடித்துக் கொள்கிற ஆஸ்துமா அம்மா.

உறவுகளில் வாங்கிய சில கடன்களும், தங்கை, தம்பியின் படிப்பு செலவுகளும், அன்றாடத்திலிருந்து தடம் புரண்ட வாழ்வும் வசந்தியைக் காவு வாங்கியது. ஒரு ஷேர் டிரேடிங் கம்பெனியில் ஜூனியர் டீலராகச் சேர்ந்தாள். அன்று ஓட ஆரம்பித்தவள் தான். ஆயிற்று ஐந்து வருடம். குடும்பத் தலைவராக ஓர் ஆண் இல்லாமையின் குறையை அவள் முற்றிலும் போக்கினாள். தங்கைக்கும், தம்பிக்கும் இன்ஜினியரிங் சீட் வாங்கினாள்.

எட்டாயிரம் சம்பளத்திற்குச் சேர்ந்தவள் இப்போது இருபதாயிரம் வாங்குகிறாள். சென்னை சென்றால் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். அவளுக்கு இந்தத் துறையில் இருக்கும் அனுபவம் நாப்பதாயிரம் வரை சம்பளம் பெற்றுத் தரும். ஆறுமாதம் முன்பு இவள் அலுவலகத்தில் வேலை பார்த்த சுதாகர், இவளிடம் வேலை கற்றுக் கொண்டவன், சென்னை சென்று ஒரு கம்பெனியில் சேர்ந்தவுடன் மறு வாரம் இவளுக்குத் தான் போன் செய்தான்.

”மேடம் இங்க உங்க ஸ்பீடுக்கு ஆர்டர் போட யாருமே இல்லை. எல்லாம் கத்துக்குட்டிங்க! நீங்க இங்க வந்தீங்கன்னா சீக்கிரமே பிராஞ்ச் மேனேஜர் கூட ஆகிடலாம்!”

ஆறே மாதத்தில் சென்னையில் வேறு கம்பெனிக்குள் நல்ல சம்பளத்தில் நுழைந்த சுதாகரின் சர்வைவல் சாமர்த்தியம் வசந்தியை வியக்க வைத்தது. அன்றிலிருந்து அவள் அடிக்கடி சென்னை வேலை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருப்பாள். அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ”எல்லாம் சரிம்மா… இருந்தாலும் கொஞ்ச நாள் போகட்டும்!” என்பாள் லொக் லொக் என்ற இருமலினூடே.

ஆண்டாளுக்கு எப்படியும் இந்த வருஷத்துக்குள் அவளுக்குக் கல்யாணம் செய்துவிட வேண்டும். குடும்ப சம்பாத்தியத்திற்கு வேறு ஏதாவது வழி செய்து கொள்ளலாம், இனியும் அவள் உழைப்பைத் தின்னக் கூடாது என்பதில் அவள் தீர்மானமாக இருந்தாள். இது சம்பந்தமாக ஆண்டாள் ஏதாவது ஆரம்பித்தால்,

”சும்மா உளறாதேம்மா…. கெளதம் படிச்சு முடிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்பாள் வசந்தி.

மழை லேசாக விட்டிருந்தது. தெருவோரத்தில் ஒதுங்கிய ஜனங்கள் மறுபடி புழங்க ஆரம்பிக்க, வசந்தி நடையில் வேகம் கூட்டினாள். தஞ்சையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் சந்தடியான தெற்கு வீதியில் தான் அவள் அலுவலகம் இருந்தது. அங்கிருந்து சீனிவாசபுரம் கடைசியில் இருக்கும் அவள் வீடு சரியாக இருபது நிமிட நடை தூரம்.

செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவளின் புருவங்கள் சுருங்கி, ஒரு சின்னக் கோபத்தைக் காட்டின. குரு தான் அடித்தான். முழுசாக அடிக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

குரு!

அவள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் தான். எம்.பி.ஏ முடித்துவிட்டு இதே மாதிரி ஃபைனான்சியல் நிறுவனம் தொடங்கி சாதிக்கும் கனவுடன் திரிபவன். நம்ம ஊர் வெங்கடாஜலபதியோடு, அமெரிக்க பணக் கடவுள், ஷேர் மார்க்கெட் குரு வாரன் பஃபெட்டையும் சேர்த்து வணங்குபவன். கோட்-சூட் சகிதம், கால் மேல் கால் போட்டுக் கொண்டு, சொகுசான சோபாவில் உட்கார்ந்தபடி டிவியில் முதலீட்டுப் பரிந்துரைகளை அவிழ்த்துவிடத் துடிப்பவன். ஒரு முன் அனுபவத்திற்காக காலேஜ் முடிந்த கையோடு இந்த அலுவலகத்தில் சேர்ந்திருக்கிறான்.

எப்போது பார்த்தாலும் முதலீடும் அது சார்ந்த இலாபமும் குறித்தே லெக்சர் அடிப்பான். ஒரு நாள் அலுவலகத்திற்கு தாமதமாக வருகிற அவசரத்தில் வேகமாக டீலிங் ரூமிற்குள் நுழைந்தான். அப்போது வசந்தி டைமிங், ரைமிங்காக ‘வாரன் வாரான்!’ என்றாள் பளிச்சென்று.

சிரிப்பொலியில் ரூம் அதிர, அன்றிலிருந்து வாரன் என்பது அவன் பட்டப் பெயராகிப் போனது. தஞ்சாவூரில் பெரிய ஜவுளிக் கடை அதிபரின் ஒரே மகன். மூன்று வயதில் அம்மாவை இழந்தவன். அப்பா தான் எல்லாம் என்றாலும், எதற்கெடுத்தாலும் அப்பாவை எதிர்பார்க்க மாட்டான். படிக்கும் போது கூட பார்ட் டைமாக கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்திருக்கிறான் என்றால் பாருங்களேன். இல்லையில்லை பழமெல்லாம் இல்லை. தம்மும் பீரும் உண்டு, அதுவும் அப்பா காசில் இருக்கக் கூடாது என்று நினைக்கும் அரிய மகன்.

வசந்தியின் செல்போனில் மறுபடி குரு வந்தான். அவள் எடுக்கவில்லை. ‘கிர்கிர்’ரென்று ரிங் அடித்து ஓய்ந்தது. ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடலாமா என்று கூட யோசித்தாள். எதன் பொருட்டாவது அம்மா அழைக்கக் கூடும் என்று விட்டுவிட்டாள்.

யோசித்துப் பார்த்தாள். குரு அழைத்து தான் போனை எடுக்காமல் விடுவது இதுவே முதல் முறை. வசந்தியின் அத்தியந்த நட்புகள் கல்லூரியோடு முடிந்திருந்தது. அவளுடன் படித்தவர்கள் பெரும்பாலும் கல்யாணம் குழந்தை என்று செட்டிலாகிவிட்டனர். தவிர்க்க முடியாத காம்ப்ளக்சில் பழைய நட்புகளின் தொடர்பைக் குறைத்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்திலும் யாரிடமும் நெருங்கிப் பழகாதவளாக இருந்தாள். உடன் வேலை பார்க்கும் ரம்யா, மேனேஜர் ரெங்கராஜன், வாட்ச்மேன் இப்படி சகலரும் இவளிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி,

‘நீங்க வீட்லயும் இப்படித் தான் இருப்பீங்களா?’- அந்தளவிற்கு ஊமைப் பெண்ணாக இருந்தவளை, தடாலடியாக மாற்றியவன் தான் குரு. அவன் இந்த அலுவலகத்தில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. சேர்ந்த இரண்டே மாதத்தில், வசந்திக்குள் இருக்கிற ஒரு வாயாடியை உசுப்பிவிட்டவன் அவன் தான்.

”ஏன் மேடம்? எந்த ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்றீங்க? நீங்க என்ன ரோட்ல போறவனைப் பார்த்தா சிரிக்கிறீங்க? சக ஊழியன். நாமெல்லாம் ஆறு மணி வரை ஒரே குடும்பம். நீங்க உர்ருன்னு இருக்கிறதுனால எதை எங்களுக்கு உணர்த்த நினைக்கிறீங்களோ அதை நாங்க எப்போதும் புரிஞ்சுக்கப் போறதில்லை! பேசுங்க! ஒண்ணும் நஷ்டம் வந்துடாது!’

இப்படி யாராவது வற்புறுத்திக் கேட்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று வசந்தி காத்திருந்தாளோ என்னவோ, அதன் பிறகு அவள் சுபாவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிந்தது.

முக்கியமாக அதற்குக் காரணமாக இருந்த குருவிடம் மனம் விட்டுப் பழகினாள். குருவும் வசந்தியும் ஒரு விதப் புரிதல் உள்ள நண்பர்கள் என்ற மன அலை அலுவலகத்தில் நிலவியது.

பல விஷயங்களில் குருவின் சுபாவத்தை வசந்தி வியந்திருக்கிறாள். பணக்காரன் என்கிற பந்தா துளியும் இன்றி, மனதில் பட்டதை பட்பட்டென பேசுவதோடு, பொய்யில்லாத அக்கறையுடன் பழகுவதை அவள் பிரமிப்புடன் பார்த்திருக்கிறாள். ஆண் நட்பிற்கு அவகாசமில்லாத அவளுடைய வாழ்வில் குருவின் வருகை, அவன் நட்பின் திணிப்பு சொல்லில் அடங்காத பூரிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று அவன் செல்போனில் அழைக்கிறான். எடுக்க மனமில்லை. அவனே தான் காரணம். மார்க்கெட் முடிந்தவுடன் எல்லா கிளையண்டுகளுக்கும் அவர்களின் வர்த்தகம் குறித்த ஊர்ஜிதத் தகவலை போனில் தெரிவித்துவிட்டு, முகம் கழுவ ரெஸ்ட் ரூமிற்குச் சென்றாள் வசந்தி. அப்போது குருவின் இருக்கையைக் கடக்கும் சமயம் அவன் அழைத்தான்.

”மேம்!”

”என்ன குரு?”

”வொர்க் முடிஞ்சுதா?”

”ஆச்சு, ஏன்?” சிரித்தபடி கேட்டாள்.

”ஈவினிங் எத்தனை மணிக்கு கிளம்புவீங்க?”

”இதென்ன கேள்வி? எப்போதும் போல ஆறு!”

”என் கூட ஒரு டென் மினிட்ஸ் வர முடியுமா?”

”எங்கே? ஏன்?” என்றாள் முகத்தில் துணுக்குடன்.

”எதையும் சொல்ல மாட்டேன் முதல்ல வாங்க…”- குரு மர்மமானதொரு புன்னகையுடன், எந்தவித அனுமானமும் இல்லாமல் ”சரி” என்றால் வசந்தி.

மாலை ஆறு மணியளவில் குரு, வசந்தியை அவனுடைய போர்டு ஃபிகோ காரில் ஒரு ஜீஸ் கார்னருக்கு அழைத்துச் சென்றான்.

”மழை வர்ற மாதிரி இருக்கு. இப்பப் போய் ஜூஸா?” என்று அலுத்துக் கொண்டே உள்ளே சென்றாள் வசந்தி. அவளுக்குப் பிடித்த சர்க்கரை அதிகம் போட்ட சப்போட்டா ஜூஸை ஆர்டர் செய்துவிட்டு வந்து ஒரு பெருமூச்சோடு அமர்ந்தான் குரு. மிக மெல்லிய டென்ஷன் இருந்தது.

”சொல்லு என்ன விஷயம்?”

குரு பட்டென ”எப்ப மேடம் கல்யாணம்?” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

சுருக்கென்று அவன் கேள்வியில் ஏதோ உணர்ந்த வசந்தி மெலிதாய் உஷ்ணமானாள். முப்பது வயதில் யார் திருமணம் பற்றிக் கேட்டாலும் அவளுக்கு எரிச்சல் வந்துவிடும். வயதும், வயதுக்கு மீறிய பாரமும், திக்குத் தெரியாத எதிர்காலமும் ஏற்படுத்திய மன அழுத்தம் அது.

”என்ன கேள்வி குரு? இதைக் கேட்கத் தான் இங்க அழைச்சுட்டு வந்தியா?”- வார்த்தைகளில் எரிச்சலை உமிழ்ந்தாள்.

குரு ”ரிலாக்ஸ் மேடம். கேட்கக் கூடாதது என்ன கேட்டுட்டேன்? எல்லாரும் பண்ணிக்கறது தானே?” என்றான். அவள் மெளனமாக இருந்தாள். எது பேசினாலும் சாமர்த்தியமாக எதிர்த்து அல்லது மடக்கி பதில் சொல்லக் கூடியவன் இவன் என்று வசந்திக்குத் தெரியும்.

”ஆக வேண்டிய நேரத்துல ஆகும். வீட்ல வரன் பார்த்துட்டிருக்காங்க…”

ஜூஸ் வந்தது. இரண்டு கைகளாலும் அந்தக் கண்ணாடிக் கோப்பையைப் பற்றி ஒரு சிப் உறிஞ்சினாள்.

”குட், சுத்தி வளைக்காம ஒண்ணு கேட்கட்டுமா மேடம்?”- குருவின் இந்தப் பீடிகையில் அவள் பீதியானது முகத்தில் அப்பட்டம்.

அவள் பதிலுக்குக் காத்திராமல், ”நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா மேடம்?” எந்த தடுமாற்றமுமின்றி இப்படிக் கேட்டான் குரு.

வசந்தி அதிர்ந்தாள். இதென்ன விளையாட்டு? ஏதும் ஆழம் பார்க்கும் சங்கதியா? பணக்காரப் பசங்களின் பொழுது போக்கு என்று சொல்வார்களே அது போல் எதுவுமா? அவனுக்கும் எனக்கும் ஏதாவது பொருத்தம் உண்டா? அவன் நாயகன் தான், மாற்றமில்லை, நான் நாயகியின் அக்கா, தோழி, பாடல்களில் பின்னால் ஆடுபவள் இந்த வகையில் வருவதற்கே யோசிப்பார்களே? உஷார் வசந்தி…உஷார்!

”முட்டாள்! உன் வயசென்ன என் வயசென்ன? மரியாதையாப் பேசு!” என்று விரல் நீட்டி மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள். மழை பிடித்திருந்ததையும் பொருட்படுத்தாமல்.

வசந்தி வீட்டை நெருங்கும் சமயம் பீப்..பீப் என்று செல்போன் முணகி, மெசேஜ் வந்திருப்பதைச் சொல்லிற்று. குரு தான் அனுப்பியிருந்தான்,

”உங்களுக்கு வயசு தான் பிரச்சனையா?”

(தொடரும்)

Series Navigation