ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

Spread the love

ப.கண்ணன் சேகர்

ks photo

முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட
முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்!
பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட
பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்!
பண்ணிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும்
பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்!
மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை
மீட்டிட செய்வது மரபியல் பலமாகும்!

மடையிலா அழகென மயக்கிடும் தாஜ்மகால்
மாற்றாக வேறொன்று மனதாலும் சிறக்குமா!
குடைவரை கோவிலும் கோமல்லை சிற்பமும்
கொட்டிடும் அழகினை குவலயம் மறக்குமா!
விடையிலா வியப்பென வளமிகு தஞ்சையில்
வீற்றிடும் கோபுரம் விஞ்ஞான விளக்கமா!
படைகொண்ட மூவேந்தன் பளிச்சிடும் சிற்பங்கள்
பாரினில் மீண்டுமே படைத்திட முடியுமா!

சொல்பேசா சமணரும் சூழ்ந்திட்ட குகைளும்
கல்குவாரி யானதால் கரைந்தே போனது!
நல்நினைவு சின்னமென நாடுகள் போற்றிய
நிலைமாறி போயிட நலிவென ஆனது!
கல்வெட்டு குகைகளும் கட்டிட வகைகளும்
கலைநய ஓவியம் காத்திட போராடு!
தொல்லிய வரலாறு தொடங்கிய நாட்டினுள்
தொலையாத பாரம்பரியம் தொடர்ந்திட பாடுபடு!

– ப.கண்ணன்சேகர்

Series Navigationதொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்புரியாத மனிதர்கள்….