ஒடுக்கம்

This entry is part 15 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

 

எஸ்.சங்கரநாராயணன்

பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு. கையில் ஒரு குச்சி தயார் செய்து கொண்டிருந்தார். எதிர்ப்படும் நாய்களைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. பெரும்பாலான நாய்கள் திருடனை விட்டு விடுகின்றன. கண்டு கொள்வதே யில்லை. அவை அப்பாவிகளை நோக்கி வெறுப்புக் குரல் எடுக்கின்றன. தெருக் காரர்கள் நடமாடாத போது அவை பொதுவாக புதிய நபர் யார் வந்தாலும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் உள்ளூர்க்காரர்கள் யாரும் பார்த்தால் அவர்கள் முன் இவற்றுக்கு வருகிற வீரம் அலாதிதான்.

பெரும்பாலும் நடைதான். கையில் சொற்ப அளவில் காசு இருந்தது. அதுகூட எங்காவது பஸ்சேறிப் போகலாம் என்று தோன்றினால் வேண்டி யிருக்கும். அதிகப் பசி வந்து உடல் நடுக்கமாய் இருந்தால் தெருவோரப் பெட்டிக் கடையில் பழம் மாதிரி எதாவது வாங்கிச் சாப்பிடலாம். அவருக்குப் பணத் தேவை இல்லை. இருக்கக் கூடாது என்பதாக தனக்குள் ஒரு தீவிரம் கொண்டிருந்தார். பணம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. அதை அனுமதிக்கக் கூடாது. மனிதனின் தீராப் பிணி பசி அல்லவா? பசி போக்க பணம் தேவையாய் இருக்கிறது. நாளைக்குப் பசிக்கும் என்ற பயம், கவலை, எதிர்பார்ப்பு. அத்தோடு பிறகு மனிதருக்கு விடுதலை இல்லை.

பணம் ஒரு மனிதனின் குணத்தையே மாற்றி விடுகிறது. அவர் நம்பிய மனிதர்கள் பணத்தை அவரிடம் இருந்து ஏமாற்றி அவரைக் கடனாளியாக்கி அவரது வியாபாரத்தைத் தோல்வி கரமாக ஆக்கிவிட்டார்கள். கடன், கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி… சுதாரிக்கு முன் அவர் நிலை மோசமாகி விட்டது. அவர் நண்பர்கள் என நினைத்தவர்களே அவரை ஏமாற்றி விட்டார்கள். என்ன நடந்தது என்றே புரியவில்லை. புரிந்தபோது நிலைமை விபரீதமான அளவில் அவர் கையை மீறிப் போயிருந்தது.

உதவி என தன்னை ஏமாற்றியவன் என்று தெரிந்த பின்னும் அதே ஆளிடம் கையேந்தும் நிலை. அட அவனும் மறுத்து விட்ட நிலை. கூடப் பிறந்த சகோதரரும், ஏன் மனைவியுமே கூட அவரைக் குற்றம் சொன்னார்கள். எதிரியாகிப் போனார்கள். தற்கொலை செய்து கொள்ளலாமா என ஒவ்வொரு சமயம் தோன்றும். பணம், செய்யும் தொழிலில் லாபம்… என்றெல்லாம் ஈர்ப்பு கொண்டவர் அல்ல அவர். கேது ஆதிக்க ஜாதகம். பிறவியே அப்படி என்று தோன்றியது. அவர் எங்காவது யாரிடமாவது அடிமை உத்தியோகத்துக்குப் போயிருக்க வேண்டும். மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு மனைவி, குழந்தைகளைப் பேணி காப்பாற்றி யிருக்க வேண்டும். தெரியாத பிசினெசில் ஆழம் தெரியாமல் காலை விட்டு… நண்பர் ஒருவருடன் சேர்ந்து… அவருக்கு பிசினெசில் விவரங்கள் தெரியும் என நம்பி… அவருக்கு ஏமாற்றவும் தெரிந்திருந்தது. லாபக் கணக்கை அவர் பெயரிலும், நஷ்டக் கணக்கை இவர்பெயரிலும் மாற்றத் தெரிந்திருந்தது.

ஒரு கட்டத்தில் பிசினெஸ் நஷ்டம், நான் விலகுகிறேன்… என்று தன் பங்காகப் பெரிய பங்கைப் பிரித்துக் கொண்டு போனார். அவர் இல்லாமல் இவரால் எதுவும்செய்ய முடியாது. அவர் இருக்கும்போதே இவர் எதுவும் செய்தது இல்லை. அப்படிக் கெஞ்சி அவரை கூடவைத்துக் கொள்ள இஷ்டமும் இல்லாதிருந்தது. சரி என்று தன் கணக்கைப் பார்த்தபோது பெரிய கடன் பாக்கி இருந்தது. கடன்மட்டும். இவர் பெயரில் கடன் வாங்கி சிநேகிதர் தன் பங்களிப்பைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டிருந்தார்.

கடைக்குப் பெயரே இவர் பெயர்தான். அதில் நெகிழ்ந்து போனார் முதலில். தன் வீட்டுக்கே வந்து செக்கில் கையெழுத்து வாங்கிப் போகிறான்… எத்தனை நல்லவன் இவன் என நம்பினார். பெருமைப் பட்டார். பிறகு… வீட்டு வாசலில் கடன்காரர்கள் வந்து நிற்கிறதும் ஏசுகிறதும் காது கூசியது. மனைவி உள்ளே யிருந்து. அவர்களை எல்லாம் ஏன் வீட்டுக்கு வரச் சொல்றீங்க, எனத் திட்டினாள். (நானா வரச் சொன்னேன்?) ஆம்பளை என்றால் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். கடனாளியாகக் கூடாது. லாபம் வருகையில், கையில் பணம் இருக்கையில் பெண்கள் கணவர்களைக் கொண்டாடுகிறார்கள். அந்தக் கணவர்கள் அறிவாளிகள். ஆனால் அது இல்லாதபோது அந்தக் கணவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி விடுகிறார்கள். தோல்விகளைச் சந்திக்கும் ஆண்கள் கணவர்களாக இருக்க தகுதி இழந்து விடுகிறார்கள்.

சொற்பப் பணத்துடன் சிற்சபை இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறினார். கேது தசையில் சனி புத்தி அவரது ஜாதகப்படி நடக்கிறதா? பயமாக வெல்லாம் இல்லை. வீடு, அதுதான் அச்சுறுத்தலாக இருந்தது. சரி, அடுத்து என்ன, என்ற கேள்வியைப் புன்னகையுடன் அலட்சித்தார். அடுத்து எதுவும் இல்லை. கால் போன போக்கில் நடை. மனம் போன போக்கில் வாழ்க்கை. தேவைகள் சிறிதும் அற்றுப் போகையில், எதிர்பார்ப்புகள் விலகிக் கொள்ள, வாழ்க்கை அமைதி கதியில் நகர ஆரம்பிக்கிறது. என்னைப் புறக்கணிக்கிறது என் குடும்பம். இப்போது… என் குடும்பத்தை நான் புறக்கணிக்கிறேன்.  அவர்கள் என்னைத் தேடுவார்களா, என்ற கேள்வியே அபத்தம். இனி அவர்கள் பாடு. எனக்கு இனி குடும்பம் இல்லை.

நடை, ஆனால் அற்புதமாய் இருந்தது. இது ஒரு விடுதலைப்பட்ட நிலை. வேட்டிக்குள் கால்கள் முன்னே பின்னே என இயங்கின. காற்று உடலைத் துவட்டியது. இயற்கை கருணை மிக்கது. பரிவானது. நான் இதுநாள் வரை இதைப் புறக்கணித்திருந்தேன். இயற்கை இப்போது என்னை அரவணைத்துக் கொள்கிறது. அதற்கு யாரிடமும் வெறுப்பு காட்டத் தெரியாது.

நடை என்பது சுதந்திரத்தின் அடையாளம். நான் நானாக இயங்குகிறேன். உலகம் பெரியது. அதன் விஸ்திரணங்களை மறந்து நான் ஆமையாய்க் கிடந்தேன். உள் ஒடுங்கிக் கிடந்தேன். சட்டென ஒரு மந்தாரப் பொழுதில் வந்த விழிப்பு நிலை. நிலம். நீர். காற்று. நெருப்பு. ஆகாயம். மற்றும் நான். இவைகளால் ஆன நான். இவற்றால் இயக்கப் படுகிற நான்… இதுதான் சரி. இப்படித்தானே நாம் படைக்கப் பட்டிருக்கிறோம். சிற்சபை புன்னகை செய்து கொண்டார். இதைப் புரிந்து கொள்ள வாழ்வில் நஷ்டப்பட வேண்டுமா? பிறரின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டுமா?

கால்கள் முதலில் முரண்டு பிடித்தன. வலி கண்டன. வலியைப் புறக்கணித்தார். பசி இந்நாட்களில் கட்டுப்பட ஆரம்பித்திருந்தது. முதல் வேளை பட்டினிக்கும் முப்பதாவது வேளை பட்டினிக்கும் வித்தியாசம் இருந்தது. வயிறு இப்போது ஆசுவாசப் பட்டிருந்தது. எப்போது அடுத்தவேளை உணவு கிடைக்குமோ? அது காத்திருக்கப் பழகி யிருந்தது. கிடைக்கும்போது நிரப்பிக் கொள்ள அது பழகிவிட்டது. வயிறின் ஒடுக்கமே மகா அனுபவமாய் இருந்தது. இது வேறு உலகம். அடாடா இப்படியொரு உலகத்தை அவர் இதுநாள் வரை அறிந்திருக்கவில்லை.

அச்சுறுத்திய வெயில் இப்போது அருமையாய் இருந்தது. வியர்வை ஊற்றாய்ப் பொங்கி வழிந்தது. சரக்குச் சாக்குகள் மத்தியில் செயற்கைக் காற்றுடன் தலைக்குமேல் மின்விசிறியில் இருந்த முந்தைய உலகம் இல்லை இது. இது நிஜம். இது இயற்கையின் ஆளுமை மிக்க உலகம். இது நிஜம். இதில் போலிகள் இல்லை. நீர்நிலை கண்டால் இறங்கி ஆசைதீரக் குளித்தார். சவுக்காரம், பவுடர் எல்லாம் கிடையாது. தலைக்கு எண்ணெய் கிடையாது. ஆனால் உடலுக்குள் அந்த நீரின் குளுமையை ஏந்திக் கொண்டார். குளுமையான குடுவை போல இருந்தது உடல். கொந்தளிப்பு அற்ற குளிர்ந்த மனதே ஒரு ஆனந்தம்தான்.

தமிழ்நாட்டில் சுற்றாத கோவில்கள் இல்லை. முந்தைய தலைமுறையில் நிறையப் பேர் இப்படியான சுதந்திரக் காற்றை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். குளக்கரை மண்டபத்துத் திண்ணைகளில் பௌர்ணமி வெளிச்சத்தை அனுபவித்தபடி உற்சாக ராகம் எடுக்கும் மானிடரைக் கண்டிருக்கிறார். சக மனிதர் யாரைப் பற்றியும் சட்டை செய்யாமல், தான் தன் வாழ்க்கை, தன் ஒழுங்குகளுடனான வாழ்க்கை அது. இதில் போட்டி இல்லை. பொறாமை இல்லை. ஆகவே ஏமாற்றங்கள் இல்லை.சோகம் இல்லை. தவிப்பு இல்லை. ஒரு தினசரி நாளின் கதியில் மாற்றங்களை அனுமதிப்பது இல்லை. சில நாட்கள் பசி தலை தூக்கலாம். உடல் நலக்குறைவு என இந்திரிய அசௌகர்யங்கள்… அவையெல்லாம் பொருட்டே அல்ல.

கோவில்கள். அவற்றின் வெளி மண்டபங்கள். அன்னதானச் சத்திரங்கள். தெருவோரக் குழாய்கள். வயிறு குளிரத் தண்ணீர். குளிர்ந்த நீரின் ருசியை வயிறு எத்தனை ஆனந்தமாய் அனுபவிக்கிறது. கோவில் வெளி வளாகத்தில் மரத்தடி நிழலில் தங்கிக் கொள்வார். யாரும் அவரைத் தேடி வருவார்கள் என நம்பவில்லை. வரட்டும். நான் இந்தப் புற உலக வாழ்க்கையைப் புறக்கணித்து வந்தவன். எனக்கு இந்தப் பணத்தைத் தேடியலையும் வாழ்க்கை ஒவ்வாதது. என்னால் ஆகாதது அது. யாராவது பார்த்துவிட்டு அவருக்கு வாழைப்பழமோ, சர்க்கரைப் பொங்கலோ உண்ணத் தருவார்கள். அவர் கும்பிட்டுவிட்டு வாங்கிக் கொள்வார். வயிறு ஒரு நாய்போல உள்ளே கும்மாளம் போடுவதை ரசிப்பார்.

என்ன வியப்பு. மனசை ஒடுக்கிக் கொண்டால், உலகம் விரிவு படுகிறது. இதுவரை நான் பார்த்த உலகம், அனுபவித்த உலகம்… அதுதான் ஒடுக்கமானது என்று புரிகிறது. இந்தப் புதிய வாழ்க்கை… மழையிலும் குளிரிலும் கடும் வெயிலிலும் அவர் உடம்பு படுத்தும் என நினைத்தார். உடலின் சுகங்களைப் புறக்கணித்த வாழ்க்கை. ஆரம்பத்தில் படுத்தவும் செய்தது.

தெரியாத ஊரின் எதோ மண்டபத்துத் திண்ணையில் இரா பூராவும் முனகிக் கொண்டு கிடந்தார். கண் திறந்த போது யாரோ தண்ணீர் குடிக்கக் கொடுத்தார்கள். வேறு யாரோ குடிக்க தேநீர் வாங்கி வந்தார்கள். திரும்ப எழுந்து உட்கார முடியவில்லை. “வேண்டாம். படுத்துக்கங்க ஐயா…” கூட ஒராள் அவரைப் பார்த்துக் கொண்டான். அவன் யார் தெரியாது. ரொட்டியோ பன்னோ எதாவது அவர் விழித்துக் கொண்டால் சாப்பிட வைத்திருந்தான். அவன் ஏன் அவரிடம் பரிவு காட்ட வேண்டும். அதுவே அவருக்கு விளங்கவில்லை.

ஆ அன்பு செலுத்துதல். அது ஒரு நபரின் பண்பு. இயல்பு நிலை அது. அதை இந்நாட்களில் அநேகர் இழந்து விட்டார்கள். என்றாலும் ஆங்காங்கே மறைவிடங்களில் மனிதர்கள், அன்பு செலுத்தும் மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள். அன்பு ஒரு நதியைப் போல வேண்டுமிடம் நோக்கித் தவழ்ந்திறங்கி சென்றடைந்து விடுகிறது. அவர்கள் தங்களிடம் இருந்து அந்த அன்பு நதியை வழிய விடுகிறார்கள்.

இரண்டு நாட்கள் அப்படியே கடும் ஜுரத்துடன் படுத்திருந்தார் என்று தோன்றியது. நிஜத்தில் எத்தனை நாளோ. பிறகு மெல்ல உடல் தன்னிலை மீண்டபோது ஊக்கம் மெல்ல திரும்பியது. எழுந்து உட்கார்ந்தார். அவர் பக்கத்தில் ஒரு போத்தலில் தண்ணீர் இருந்தது. எடுத்து சிறிது அருந்தினார். உடம்பில் உயிர் போல அந்தக் குளுமை இறங்கியது. ஆனால் வெளியே நல்ல வெயில். அவர் மாத்திரமே அந்த மண்டபத்தில் இருந்தார். கூட யாருமே இல்லை. அவரவர் வேலையாக, அல்லது அவரவரர் யோசனைப்படி அவர்கள் பிரிந்து தனிவழி போயிருக்கலாம்.

அவரது உயிரைக் காப்பாற்றியவன், அவன் எங்கே? தெரியாது. அவன் யார்? தெரியாது. உலகம் விசித்திரங்களால் ஆனது. அவனை பிறகு சிற்சபை சந்திக்கவே இல்லை. சந்திப்போம் என எதிர்பார்க்கவும் இல்லை. அதுதான் இயற்கை நியதி. முக அடையாளங்கள் கூட இல்லாத அருமையான மனிதர்களை நாம் சந்திப்போம். முக அடையாளம் தெரிந்த நபர்களின் துரோகங்களை அதுவரை சந்தித்தே பழகியவர் அவர். அடையாளப் படப் பட எதிர்பார்ப்புகள், பிறகு ஏமாற்றங்கள்,.. என கண்ணிகள் விழ ஆரம்பித்து விடுகின்றன. கேரள, ஆந்திர எல்லைகளைக் கடந்து கூட அவர் நடந்திருக்கிறார்.

“எங்க போறீங்க ஐயா?”

“இந்த பஸ்சு எங்க போவுது?”

“சித்தூர்.”

“சரி. சித்தூர் ஒரு டிக்கெட் குடுங்க.”

நடத்துனன் பயணச் சீட்டு கிழித்துத் தந்தான். பணம் வாங்கவில்லை. என்ன தோன்றியதோ, அவர் கையை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தார். பிரதேசம் மாற மாற இயற்கையின் முக மாறுதலை ரசிக்க முடிந்தது. முற்றிலும் கரிசலான பொட்டல் காடுகள். சரளைக் கற்கள் பாவிய செம்மண் சாலைகள். சில இடங்களில் பூமி வறண்டு கிடந்தது. சில இடங்களில் பசுமைப் புதர்கள். மனுசாளில் கன்னப் பக்கம் தாடி வளராத ஆட்கள் சிலர். சில ஆள் தாடியும் மீசையுமாய்ப் புதராய் இருப்பது இல்லையா? அதைப்போல… என நினைத்தபடியே தாடியை நீவிவிட்டுக் கொண்டார்.

ஒரு பகுதியில் விளையும் தாவரங்கள் மறு பகுதியில் காண இயலவில்லை. மரம் செடி கொடி என மூடிய ரம்மியமான பகுதிகள். மலைச்சாரல். கழனிப் பிரதேசங்கள்… என்றாலும் உலகம் ஒன்றுதான். இயற்கை ஒன்றுதான். அதற்கு எல்லைகள் இல்லை. வரையறைகள் இல்லை. பாஷை இல்லை. மௌனமே அதன் பாஷை. பிரியமே அதன் மொழி… என அவர் உணர்ந்தார். எப்பெரும் விடுபட்ட ஆனந்த நிலை அது. ஒரு பிரதேசத்தில் கால்பட நடந்து திரிந்து, வயல் வேலை செய்து, அங்கேயே விளைகிற காய்கறிகளை உண்டு வந்தால் ஆரோக்கியம் கெடாது, என்று சொல்கிறார்கள்.

நான் துறவியா? சாமியாரா?… என்று கேட்டுக் கொண்டார். இயற்கையை யாராவது துறக்க முடியுமோ? அம்மாவை யாராவது புறக்கணிக்க முடியுமோ? அம்மாதான் இயற்கை. அல்லவா? அம்மா இல்லாமல் நானே இல்லை… அல்லவா? இது ஒரு கட்டற்ற நிலை. சுதந்திர நிலை. ஆனால் சாமியார் நிலையா? விடுபட்ட நிலையா? அவருக்குத் தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. இதுநாள் வரை சந்தித்த அவமரியாதைகள், ஏமாற்றங்கள்… எல்லாம் உள் அலையாக அடங்கி விட்டது இப்போது. இது தன் வாழ்வின் தோல்வி… என சமுதாயம் நினைக்கவும் கூடும். பிறருக்கு பதில் சொல்லும் வாழ்க்கை எளியது. பதில் சொல்லிச் சொல்லியே வாழ்க்கை முழுதும் தீர்த்தவர் இந்த உலகில் ஏராளம். வெகு சனம் அப்படித்தான் இருக்கிறது.

நான் அப்படி அல்ல, என நினைத்துக் கொண்டார்.

கட்டிய வேட்டி. சட்டை. தவிர மாற்றுடை என ஒன்று இருந்தது. கசக்கிப் பிழிந்து அதையே அணிந்து கொண்டார். ஒருமாதிரி நீர்க்காவி ஏறி வேட்டி சாம்பல் வண்ணம் பெற்று விட்டது. என்றபோதிலும் அவரைக் கவனித்த மக்களில் சிலர் அவரை வணங்கிச் சென்றார்கள். முதலில் அது சிறிது வெட்கப்பட வைத்தது. பிறகு அவர்களை அலட்சியம் செய்யக் கற்றுக் கொண்டார். சிறு துணிப் பொட்டலம். உள்ளே ஒரு தட்டு. தொலைதூரம் என்றாலும் நடக்க அலுப்பு காட்டுவதே இல்லை அவர். அவர் செருப்புகள் நைந்து எருக்க இலையாய்த் தேய்ந்து போயின. இன்னும் எத்தனை நாள் அது ஒத்துழைக்கும், எத்தனை நாள் உழைக்கும் தெரியவில்லை. யோசனையை அலட்சியம் செய்தார். பிரச்னை வந்தால், வரும்போது பார்த்துக் கொள்ளலாம். பிரச்னையை முன்கூட்டி சரி செய்தல், அதற்கு பயந்து கொள்ளுதல், எதிர்காலம் பற்றிய கவலை… வேண்டாம்.

ஒருநாள் காலை அவர் எதோ குளக்கரையில் படுத்துறங்கி எழுந்தபோது அருகில் ஒரு வேட்டி துண்டு இருந்தது. புத்தம் புதிய வேட்டி. யார் வைத்துவிட்டுப் போனார்கள் தெரியவில்லை. அவரது இந்த வாழ்க்கையை விரும்பிய யாரோ, தன்னால் இது ஆகாது, என உணர்ந்த யாரோ அவரை மரியாதை செய்திருக்கிறார்கள். சிக்கு பிடித்த தலையுடன் உடலின் திரி திரியான அழுக்குகளைச் சொறிந்தபடி ஆனால் புதிய வேட்டியுடன் திரிவது வேடிக்கையாய் இருந்தது. உடலே வற்றி ஒடுங்கி வந்தது. மன ஒடுக்கம் தேவையானால் உடல் ஒடுக்கம் முதல் தேவை அல்லவா.

ஒருநாள் அவரை அமர வைத்து இலைபோட்டு யாரொ பெண்மணி பரிமாறினாள். அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எதுவும் சொல்லவில்லை. ஒரு வட்டாரத்தில் புழங்க ஆரம்பிக்கும்போது திரும்பத் திரும்ப பார்த்து அறிமுகமான சனங்களின் நட்பு அது. பளிச்சென்று குளித்து மங்கலமாய்க் குங்குமம் வைத்திருந்தாள். மஞ்சள் பூசிய முகம். அவளே சந்தன நிறத்தில் இருந்தாள். முகத்தில் நிரந்தரமான புன்னகை தேக்கி யிருந்தாள். எதுவும் பேசாமல் சாப்பிட்டார். பேச என்ன இருக்கிறது. வடை, பாயாசம், சோற்றில் நெய், அப்பளம். முக்கனிகள். போதும் போதும் என்ற அளவில் இருந்தது. சாப்பாடு மாத்திரம் வயிறு கொள்ளுவதற்கு மேல், “வேண்டாம்” என்று சொல்ல வைத்து விடுகிறது. பணமோ, வேறு வசதி வாய்ப்புகளோ எவ்வளவு வந்தாலும் இன்னும் இன்னும் ஆசையைப் பெருக்குகிறது.

“சாமி உங்க பேர் என்ன?” என மலையாளத்தில் கேட்டாள் அவள். அது புரிந்தது.

புன்னகையுடன் “ஞானசம்பந்தன்” என்றதை ரசித்தாள்.

அதை யாரோ கவனித்து விட்டு அடுத்த அமாவாசை நாளில் வேறொருவர் அதேபோல தலைவாழை இலை விரித்து விருந்து கொடுத்தார். அந்த மண்டபத்தில் சாமியார் ஒருவர் வந்து தங்கி யிருப்பது மெல்ல பரவ ஆரம்பித்திருந்தது போலும். ஒருவர் அவர் முன் குனிந்து “சாமி நாளைக்கு என் கைங்கரியம். தட்டாம ஏத்துக்கணும்” என கைகட்டி வாய்பொத்தி நின்றார். அவர் மலையாள வாடையுடன் தமிழ் பேசினார். சிற்சபைக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மக்களின் பிரார்த்தனைகளின் வடிகாலாக, துயரங்களின் ஆறுதலாக தான் உருமாறி வருகிறதாக உணர்ந்தார். காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பொதிந்து கொள்கிறது. எல்லாருக்கும் ஒரே மாதிரி அம்சங்கள் வாய்ப்பது இல்லை.

பெரிய ஆசிகள் யாருக்கும் அவர் வழங்குவது இல்லை. இந்நாட்களில் அவரது சிரிப்பில் தேஜஸ் வந்திருந்தது. வாழ்வின் நிறைவு கண்ட தேஜஸ் அது. பிரச்னைகள் அற்ற, தேவைகளைச் சுருக்கிக் கொண்ட உள் ஒடுக்கம் அது. அதற்கு பல தியாக கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். எனினும் இது ஓர் எளிய நிலைதான். உலகத்தின் போக்கோடு நான் என்னை ஒப்புக் கொடுத்திருக்கிறேன். விடியலும் அஸ்தமனமுமான உலகின் பொது நியதிகள் எனக்கு. அவ்வளவே… இது ஓர் எளிய நிலையே.

இன்னும் என் மனதின் ஆழங்களில் நான் சஞ்சரிக்கத் துவங்கவில்லை, அதற்கு முயற்சிகளைத் துவங்கவில்லை… என்று தோன்றியது. என்னிடம் அந்தத் தேடல் இருக்கிறதா? தேடல் என்பதுதான் என்ன? அதுவே புரியவில்லை. இது ஓர் ஒடுக்கம். இந்நாட்களில் விருந்து தருகிற ஒருவரிடம் காவி உடைகள் கேட்டுப் பெற்றுக் கொண்டார். காவி இன்னும் மனதுக்கு இதமாய் இருந்தது. ஆற்றங்கரைப் பக்கமான ஆல மரத்தடி பெரும் நிழலாய்க் கிடந்தது. ஊர் மக்கள் சேர்ந்து அந்தப் பக்கம் அவருக்கு ஒரு குடில் கூட கட்டித் தரத் தயாராய் இருந்தாற் போலிருந்தது.

இவையெல்லாம் எந்த முன் திட்டமிடுதலும் இன்றியே அவருக்கு வாய்க்கும் போல இருந்தது. நான் வாழ்வின் பெரும் தோல்விகளில் இருந்து வந்தவன்… என எப்பவாவது தோன்றும். அதைப்பற்றி என்ன, என்று நினைத்துக் கொள்வார். இல்லாவிட்டாலும் ஒரு கட்டத்தில் என் வாழ்க்கை இப்படி திசை திரும்பவே செய்திருக்கும் என்று தோன்றியது. அடாடா, அதிகாலையில் சூரியன் உதிக்குமுன் கிழக்கு பார்த்து அமர்ந்திருப்பார். மெல்ல மெல்ல சூரியன் கதிர் விட்டு அவரை ஒளிக் குளியல் செய்யும். வெளிச்ச அபிஷேகம். இருட்டு படுதா விலகுவது போலக் காட்டும். அவர் காத்திருப்பார். திடீரென்று மொத்த உலகமும் ஒரு வெளிச்ச ஆளுமைக்குள் வரும். சூரியனின் ஆட்சி துவங்கும். சிவப்பும் மஞ்சளுமான கதிர்கள். யாரோ கிண்டி கிளறி ஒளிச் சமையல் செய்கிறார்கள். சட்டென விபூதி வெண்மை பெறும். என்னவோர் அருளாட்சி நடக்கிறது உலகத்தில்… என பரவசம் தட்டும்.

ஒருநாள் இளைஞன் ஒருவன் அவருடன் வந்து சேர்ந்திருந்தான். சிவந்த மெல்லுடல். தன்னைப்போலவே புறப்பட்டு பல இடங்களில் அலைந்து திரிந்து வந்திருப்பான் போல. அதுசரி இத்தனை இள வயதிலா இந்த விலகல் போக்கு, இவனுக்கு இது எப்படி சாத்தியப்பட்டது? அதிகாலை ஒளிக் குளியலை முடித்துக் கொண்டு கூசும் கண்களைத் திறந்து பார்த்தார் சிற்சபை. எதிரே அவரை நமஸ்கரித்து வணங்கி ஒரு இளைஞன். அவருக்குத் திகைப்பாகி விட்டது.

“என்ன இது?” என்று பதறி எழுந்து நின்றார் சிற்சபை.

“என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என கைகூப்பி நின்றான் அவன்.

“நானா?” என அவர் ஆச்சர்யப்பட்டார்.

“மறுக்கக் கூடாது…” அவன் கைகள் கூப்பியபடியே இருந்தது.

“நான ஞானி அல்ல…” என்றார் சிற்சபை புன்னகையுடன்.

“ஆகா…” என்றான் வந்தவன்.

“என்ன?”

“ஞானத்தின் முதல் நிலை அது…”

“எது அப்பா?”

“நான் ஞானி அல்ல என உணர்வது…”

சிற்சபை பெருமூச்சு விட்டார். “ஆம். அதற்கு நிறையப் படிநிலைகள் உள்ளன. நான் படித்துறையில் நிற்கிறேன்.”

“ஞான நிலைக்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை… அதுவே அதன் தாத்பரியம் என நினைக்கிறேன் ஸ்வாமி.”

”ம்ம்…” என தலையாட்டிக் கொண்டார். “என்னைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்து விடுவார்கள்… அவர்களது நம்பிக்கையை இவன் அலட்சிய செய்ய முடியாது.” இப்போதெல்லாம் சிற்சபை தன்னை ‘இவன்’ என அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தார்.

அந்த சிஷ்யன் போய் நதியில் குளித்துவிட்டு வந்தான். இனி இவன் தாய் இந்த நதி. தந்தையே சூரியன்… என நினைத்துக் கொண்டார் சிற்சபை. இவரைவிட வயதில் வெகு இளையவன். நான்… வாழ்வில் தோற்றுப்போய் பதறி, விலகி பணத்தைத் துறந்து ஓடிவந்தவன். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்… என்கிற நரிக்கதை போல அது, என் காரியம். இவன்… இவனுக்கு என்ன பிரச்னை? வாழ்வின் சுகங்களை ஏன் இவன் உதறிவிட்டு தனிமைக்கு, ஒடுக்கத்துக்கு வந்து சேர வேண்டும்?

“பொது வாழ்வின் அம்சங்களுடன் நீ எங்கு முரண்பட்டாய்?” என்று அவனைக் கேட்டார் சிற்சபை.

“பணம்…” என்று மெல்லஆரம்பித்தான் அவன்.

“ஆ அப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது…” என்றார் சிற்சபை. பெருமூச்சு விட்டார். ஆனால் அவர் எதிர்பாராமல் அவன் வேறு விஷயம் சொன்னான்.

“பெரும் பணக்காரப் பிள்ளை ஐயா நான்…” என ஆரம்பித்தான். பின்?… எனத் தோன்றியது. “எங்கள் வீட்டின் செல்லப் பிள்ளை நான். எனக்கு எங்கள் வீட்டில் எந்தக் குறையும் இல்லை. தேவையான பாசமும் அன்பும் எனக்கு என் வீட்டில் குறைவில்லாமல் கிடைத்தே வந்தது…”

சிற்சபை நெற்றியைச் சுருக்கினார்.

“ஆனால் எல்லாம் இந்தப் பணம், சுக போகத்திற்கான கரிசனம்… என்று தோன்றுகிறது ஐயா. இந்தப் பணம் என்னுடன் இல்லாவிட்டால் யார் என்னை மதிப்பார்கள், என்று ஒரு கணம் நினைத்தபோது, இந்த உலகம் வேறாய்த் தோன்றிவிட்டது…” என்றான் அவன்.

சிற்சபை ஒரு கணம் திகைத்தார். ஈஸ்வரா… என நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். பணம் இன்மையால் வந்த விரக்தி… அது நான். இவன்? தேவைக்கு மேலான பணத்தினால் ஏற்பட்ட வெறுமை… என்ன விளையாட்டப்பா இது. அவர் மேலும் யோசிக்குமுன் கையில் பரிசுப் பொதிவுகளுடன் பக்தர்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். ஆல மரத்தடி களை கட்ட ஆரம்பித்து விட்டது.

  • ••
Series Navigationலத்தி     ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *