ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி

                             

                               

                               வளவ. துரையன்

தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான வீரபத்திரர் அழித்து வந்த கதையைப் பாடுவது தக்கயாகப் பரணியாகும்.

=====================================================================================

                        வைரவக் கடவுள் வணக்கம்

தற்போது பைரவர் என அழைக்கப்படும் கடவுளே அப்போது வைரவர் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.

      தான் மேற்கொளும் செயல் நன்கு நிறைவேறி முடிய கடவுளை வேண்டல் ஒரு மரபாகும். தக்கயாகப் பரணியை எழுதப் புகுமுன் ஒட்டகூத்தர் வைரவக் கடவுளை வாழ்த்தித் தம் நூலைத் தொடங்குகிறார்.

                  உரக கங்கணம் தருவன பணமணி

                   உலகடங்கலும் துயில்எழ வெயில்எழ

                  உடைதவிர்ந்த தன்திருஅரை உடைமணி

                  உலவி  ஒன்றோடொன்று அலமர விலகிய

                  கரதலம் தரும் தமருக சதிபொதி

                  கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு

                  கலக லன்கலன் கலன்என வரும்ஒரு

                  கரிய கஞ்சுகன் கழலிணை கருதுவாம்.

[உரகம்=பாம்பு; கங்கணம்=கையில்  அணியும் ஓர் ஆபரணம்; பணம்=பாம்பின் படம்; அரை=இடை; அலமர விலகிய=மோதி ஒலி செய்ய;

கரதலம்=கை; தமருகம்=உடுக்கை; சதிபொதி=தாளத்தோடு கூடிய; பரிபுரம்=காலில் அணியும் சிலம்பு; கஞ்சுகம்=சட்டை; கழல்=திருவடிகள்; கருதுவாம்=நினைப்போம்]

      வைரவக் கடவுளின் கையில் பாம்பானது கங்கணம் போல் சுற்றப்பட்டுள்ளது. அதன் படத்தில் உள்ள மாணிக்க மணிகள் இவ்வுலக உயிர்கள் சூரியன் உதித்து விட்டதோ என எண்ணும் படிக்குச் சூரியன் போல  ஒளி வீசுகின்றன. ஆடையே இல்லாத அவர் இடுப்பில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடொன்று மோதி ஒலி செய்ய, அதற்கேற்றபடி கையில் உள்ள உடுக்கை ஒலிக்கிறது. கால்களில் அணிந்துள்ள சிலம்புகளும் இன்னிசை முழங்குகின்றன. அத்தகைய பெருமை மிக்க, கருஞ்சட்டை அணிந்த வைரவக் கடவுளின் துணையை வேண்டி வணங்குவாம்.

====================================================================================

                          சிவபெருமான் துதி

      வைரவக்கடவுளை வணங்கிய ஒட்டக்கூத்தர் அடுத்துச் சிவபெருமானைப் போற்றித் துதிக்கிறார். 

                   புயல்வாழ நெடிதூழி புவிவாழ

                        முதல் ஈறுபுகல் வேதநூல்

                  இயல்வாழ உமை வாழ்வதொரு பாகர்

                        இருதாளின் இசை பாடுவாம்.                    [1]

                  குலநேமி ரவிபோல வலநேமி

                        தனிகோலு குலதீபனே

                  நிலநேமி பொலன்நேமி அளவா

                        உககோடி நெடிதாளவே.                          [2]

 [புயல்=மழை, ஈறு=முடிவு; நேமி=சக்கரம்; வலம்=வெற்றி; பொலன்நேமி=பொன்னாலான சக்கரம் ; சக்கரவாளக்கிரி]

ஊழிக்காலம்வரை மழை பொழிந்து அதனால் உலகம் நன்கு வாழவும், தோற்றமும் முடிவும் இல்லாத திருமுறைகள் முறையாக நிலைபெற்று விளங்கவும் உமையன்னையைத் தன் இடப்பாகங்கொண்டு விளங்கும் சிவபெருமானின்  திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து பாடுவோம்.

உயர்ந்த ஒளிவட்டம் கொண்ட சூரியன் போலத் தனது வெற்றி மிக்க ஆணைச்சக்கரத்தால் இவ்வுலகைத் தனிஆட்சி புரியும் சோழமன்னனே! நிலவட்டமான இப்பூவுலகையும், பொன்வட்டமான இவ்வுலகைச் சுற்றி இருக்கும் சக்கரவாளக் கிரியையும் எல்லையாகக் கொண்டு பல கோடி யுகங்கள் ஆட்சி புரிவாயாக.

      சிலப்பதிகாரக் கடவுள்வாழ்த்தில் சோழ மன்னன் தன் ஆணைச் சக்கரத்தால் வலம் வந்து நாட்டை ஆள்வதுபோல சூரியன் பொன்மலையை வலம் வருவதால் சூரியனைப் போற்றுவோம் என இளங்கோவடிகள் பாடுவார்.

=====================================================================================

                                விநாயகர் துதி

                        சதகோடி வித்தாள சதிபாய

                              முகபாகை குதிபாய் கடாம்

                        மதகோடி உலகேழும் மணம்நாற

                              வரும்யானை வலிபாடுவாம்             [3]

                        நககோடி பலகோடி புலியேறு

                              தனிஏற நளினாலயன்

                        உககோடி பலகோடி குலதீபன்

                              எழுதீவும் உடன் ஆளவே                [4]

[சதம்=நூறு; சதி=தாளஇசை; நக=ஒளிவிட; ஏறு=ஏறிட; நளினாலயன்=பிரமன்;குலதீபன்=சோழமன்னன்]

பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகள் நூறு கோடிவகையான  தாளங்களை ஒலித்து அசைய, திருமுகத்தில் அணிந்துள்ள அணி அசைய, கன்னங்களில் இருந்து அருவிபோல வழியும் மதநீர் மணம் வீச, வருகின்ற யானைமுகனின் வலிமையைப் போற்றுவோம்.

பல கோடி மலை உச்சிகளிலெல்லாம் சோழ அரசனுடைய புலிக்கொடி ஏறிப்பட்டொளி வீசிப் பறக்க, பிரமன் படைத்த நான்கு கோடி யுகங்களும் சோழ அரசன் ஏழு தீவுகளிலும் அரசாள விநாயகப் பெருமானை வணங்குவோம்.

         முருகன் துதி  

                  ஒருதோகை மிசைஏறி உழல்சூரும்

மலைமார்பும் உடன்ஊடுறப்

பொருதோகை சுரராசபுரம் ஏற

      விடுகாளை புகழ்பாடுவோம்.             [5]

கடல்ஆழி வரைஆழி தரைஆழி

      கதிர் ஆழி களிர்கூர்வதோர்

                  அடல்ஆழி தனிஏவு குலதீபன்

    ந்ருபதீபன் அருள்கூறவே.             [6]

[ஒரு=ஒப்பற்ற; தோகை=மயில்; மிசை ஏறி=மேலேறி; உழல்=வருந்தும்; சூர்=சூரபதுமன்; மலை=கிரவுஞ்ச மலை; பொருதோகை=வெற்றிக்கொடி; சுரராசபுரம்=தேவர் உலகம்; ந்ருபதீபன்=இராசாதீபன்]

      முருகப் பெருமான் சூரபதுமனையும், கிரவுஞ்ச மலையையும் இருகூறாக்கி வென்றதை 5-ஆம் பாடல் கூறுகிறது.

      ஒப்பற்ற மயில் மீதேறி சூரபதுமனும் கிரவுஞ்ச மலையும் இரு கூறாகி விழுமாறு போர் செய்து வென்று, வெற்றிக்கொடியை தேவர் உலகேறிப் பறக்க விட்ட காளையான முருகப்பெருமானின் புகழைப் போற்றுவோம்.

      6-ஆம் பாடல் ஆழி என்பதற்கு வட்டம், கூட்டம், உலகம், மண்டலம் என்னும் பொருள்களைக் கொண்டு அமைந்துள்ளது.

      கடல் வட்டமும், மலைக் கூட்டமும், நில உலகும், சூரிய மண்டலமும், மகிழ்ச்சி கொள்ளுமாறு தன் ஆட்சிச் சக்கரத்தால் ஆட்சி செய்யும் சோழமன்னனின் ஆட்சி நீண்ட நாள் நடைபெறுவதற்கு அருள் புரிய வேண்டுமாறு முருகக் கடவுளைப் போற்றி வணங்குவோம்.

=====================================================================================

                        திருஞான சம்பந்தர் துதி  

               வழுவேறு குடகூடல் வடஆறு

                  வழிமாற மணலால் ஓரோர்

             கழுவேறும் அமண்மூது கருமாள

                   வருமீளி கழல் பாடுவோம்.                      [7]

            எருதோடு கலையோடு சிலைஓட

                  மலைஓட இபம் ஓடவே

            விருதோடு பொருதேறு புலிநேமி

                  கிரிசூழ விளையாடவே.                         [8]

[வழு=குற்றம்; குட=மேற்கு; வடஆறு=வடக்கில் பாயும் வைகை; வழிமாற=வேறு வழியில் செல்ல; கழு=கழுமரம்; அமண்மூகர்=சமண சமய ஊமைகள்; கருமாள=குலமழிய; மீளி=பெருமை மிக்கவர்;

      கலை=மான்; சிலை=வில்; இபம்=யானை; புலிநேமி=புலிச்சின்னம் கொண்ட ஆணைச்சக்கரம்; கிரி=உலகைச் சுற்றி வட்டமாக உள்ள சக்கரவாள மலை; விளையாட=அருள்புரிய]

      சமணர்களைக் கழுவிலேற்றிய திருவிளையாடற் புராணக்கதை 7-ஆம் பாடலில் சொல்லப்படுகிறது.

      குற்றக்கறை படிந்த மேற்கு மதுரை மாநகருக்கு வடக்கில் வைகை பாய்கிறது. அதைக் கடந்து செல்லமுடியாதபடி அங்கிருக்கும் மணல் குன்றுகளில் எல்லாம் கழுமரங்கள் நடப்பட்டு அவற்றில் அவர்கள் குலம் அழியுமாறு சமணர்களைக் கழுவேற்ற வந்தருளிய பெருமைகொண்ட திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றுவோம்.

      தன்னை எதிர்கொண்டுப் போரிட வந்த அரசர்களின் காளை, மான், வில் மலை, யானை ஆகிய சின்னங்கள் எல்லாம் மறைந்து போகும்படிச்செய்து புலிச்சின்னம் கொண்ட சோழமன்னனின் ஆட்சியே சக்கரவாளம் சூழ்ந்த உலகம் முழுதும் நிலவ அருள்செய்ய வேண்டித் திருஞான சம்பந்தரின் திருவடிகளைப் போற்றுவோம்.

=====================================================================================

                         பொது வாழ்த்து

                  இறைவாழி! தரைவாழி! நிரைவாழி!

                        இயல்வாழி! இசைவாழியே!

                  மறைவாழி! மனுவாழி! மதிவாழி!

                        ரவிவாழி! மழைவாழியே!                  [10]

[இறை=கடவுளர்கள்; தரை=நிலவுலகம்; நிரை=ஆநிரைகள்; மதி=சந்திரன்=ரவி=சூரியன்]

      பைரவர், சிவன், விநாயகர், முருகன், திருஞான சம்பந்தர் ஆகியோரை வணங்கிய ஒட்டக்கூத்தர் இப்பாடலைப் பொதுவான வாழ்த்தாகப் பாடுகிறார்.

      கடவுளர்கள் வாழ்க! நிலவுலகம் வாழ்க! ஆநிரைகள் வாழ்க! இயல்தமிழ் வாழ்க! இசைத்தமிழ் வாழ்க! திருமுறைகள் வாழ்க! மனுநீதிச் சோழன் வழி வந்த குலம் வாழ்க! சந்திரன் வாழ்க! சூரியன் வாழ்க! மாமழை வாழியவே!

=====================================================================================

Series Navigationகொவிட்19