ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடு

 

 

 

அழகியசிங்கர்

 

 

          சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.  மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள்  எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன். 

          சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக் கதையைப் படிக்கலாமென்று குகூளில் தேடினேன்.  நூற்றுக் கணக்கான கதைகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. 

          The Remember by aimeebender  என்பவர் எழுதிய கதையைப் படித்தேன்.   மார்குவேஸ் எழுதிய கதையைப் படித்தேன்

Aimeebender கதையில் அவள் காதலன் உருமாறி ஒருநாள் குரங்காகவும் அதன்பின் ஆமையாகவும் மாறிவிடுவதுபோல் வருகிறது.அக் கதை வேடிக்கையாக எழுதப் பட்டிருக்கிறது.

          அந்தக் கதையுடன் மட்டும் நான் திருப்தி அடையவில்லை. A very Old Man with Enormous Wings by Gabriel Garcia மார்க்கில்ஸ் இக் கதையை எனக்குப் படிக்க இரா. முருகன் அளித்தார்.  இந்த இரண்டு கதைகளையும் மொழி பெயர்க்க உள்ளேன். 

          Magical realism, or magic realism, is an approach to literature that weaves fantasy and myth into everyday life. What’s real? What’s imaginary? In the world of magical realism, the ordinary becomes extraordinary and the magical becomes commonplace. 

 

           மேஜிக்கல் ரியலிஸ கதைகளை சாதாரணமாக பலரும்  தமிழில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் நாம் இதைச் சொல்ல தயங்குகிறோம்.

          புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ ஒரு மேஜிக்கல் ரியலிஸ கதை. 

          மகாபாரதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகிலை  உருவும்போது  தொடர்ந்து துகில் பெருகிக்கொண்டே வரும். பகவான் கிருஷ்ணன் அருளால்.  இது மேஜிக்கல் ரியலிஸம். 

    நான்  ஒருநாள் சாதாரணமாகக் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். என் எதிரில் பஞ்ச முக ஆஞ்சநேயர் படம்.  திடீரென்று அந்தப் படத்தை உற்றுப் பார்க்கிறேன். எட்டுக் கைகளோடும், மனித மிருக தலைகளுடன் அருள் புரிந்நது கொண்டிருந்தார்.  எனக்கு இது மாஜிக்கல் ரியலிச படம் என்று தோன்றியது.

          இப்படியாக மாஜிக்கல் ரியலிஸம் நம்முடன் கலந்துதான் இருக்கிறது .  அம்புலிமாமா கதைகள் எல்லாம் மாஜிக்கல் ரியலிஸ கதைகள்.  என்ன அதெல்லாம் நீதி போதிக்கிற மாதிரி வருகிறது.

          நான் இப்போது எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதை அசோகமித்திர னின் ‘குருவிக்கூடு’ என்ற கதை. 

          அசோகமித்திரன் 275 கதைகள் எழுதியிருக்கிறார்.  அவர் ஒரு கதையாவது மேஜிக்கல் ரியலிஸ கதை எழுதியிருக்கிறாரா என்று பார்த்தேன்.

          இக் கதை ஒரு மேஜிக்கல் ரியலிஸ கதை.  கதையைப் பற்றி இங்கு சொல்கிறேன்.

          அந்த வீட்டில் அன்று சரஸ்வதி பூஜை.  பாலுவின் அம்மா அவனைக் கூப்பிட்டு ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறாள்.

          எப்போதும் சரஸ்வதி பூஜை அன்று ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக்கொண்டு பூஜை செய்வது அவர்கள் வீட்டில் வழக்கம்.

          அசோகமித்திரன் ஹார்மோனியப் பெட்டி எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.

          ‘மாடியில் ஹார்மோனியம் ஒரு கள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டு, அக்கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பரம்புத் தொட்டிலுள்ள வைக்கப்பட்டு, அக்கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பிரம்புத் தொட்டிலுள் வைக்கப்பட்டு, அத்தொட்டில் பரண்மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.’  

          இப்படி ஒரு நீளமான வரியை அசோகமித்திரன் இந்தக் கதையில் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது.

          பாலு நாற்காலி மீது ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி பரணை எட்டிப் பார்த்தான்.  கரப்பான், பாச்சை,  எலிப் புழுக்கை, எல்லா நாற்றமும் வீசியது.  கைப்பட்ட இடத்திலெல்லாம் எத்தனையோ நாட்களாய் படிந்திருந்த தூசி கலைந்து மேல் கிளம்பி மூச்சையடைத்தது.  தொட்டிலை தொட்டவுடன் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். தொட்டிலுள் வைக்கப்பட்டிருந்த ஹார்மோனியப் பெட்டிக்கும் தொட்டிலின் ஒரு பக்க விளிம்புக்கும் உள்ள இடைவெளியில் ஒரு குருவிக் கூடு இருந்தது.  எதையும் தொடாமல் பாலு எம்பி எட்டிப் பார்த்தான்.  அக்குருவிக் கூட்டினுள் இரண்டு முட்டைகள் இருந்தன.

          பாலு ஹார்மோனியப் பெட்டியை எடுத்து வரவில்லை.  அம்மாவுக்கு வருத்தம்.  அன்று ஹார்மோனியப் பெட்டி இல்லாமலேயே சரஸ்வதி பூஜை நடந்தது.

          ஒரு வாரம் பொறுத்து மாடியில் சத்தம் அதிகமாகவே இருந்தது.  பாலு பரணில் எட்டிப் பார்த்தான்.  கூட்டில் இரு குருவிப் குஞ்சுகள் இருந்தன. பெரிய குருவி விர்ரென்று வெளியே பறந்து போயிற்று.

          நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பழைய புஸ்தகத்தைத் தேடி எடுக்க வேண்டி இருந்தது.  பாலு இம்முறையும் பரண் மீது இருந்த அந்தப் பிரம்புத் தொட்டினுள் எட்டிப் பார்த்தான்.  கூட்டினுற் உட்கார்ந்திருந்த பெரிய குருவி விர்ரென்று வெளியே பறந்து போயிற்று.  உள்ளே இம்முறை இரண்டு முட்டைகள் இருந்தன.

          இந்தக் கதையில் அசோகமித்திரன் ஒவ்வொரு முறையும் இரண்டு முட்டைகள் இருந்தன என்று குறிப்பிடுகிறார்.

          பின் கட்டிலிருக்கும் அம்மாள் சாவிக் கொத்தை அவன் வீட்டில் கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.  அவளுடைய மூத்த மகள் பிரசவித்திருந்தாள்.  ஆண் குழந்தை. ஒன்பது பவுண்டு,ஆறு தையல்கள் என்றார்கள்.

          இரண்டு நாட்கள் மழை.  ஒரு நாள் ஆபிஸிலிருந்து வந்த பாலு திகைத்து விட்டான்.  ஹார்மோனியப் பெட்டி கீழே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது.  பரணில் தொட்டில் வைத்த இடம் காலியாக இருந்தது.  பாலு பதறி விட்டான்.  குருவிக் கூடு எங்கே என்று பதறியபடி அம்மாவிடம் கேட்கிறான். 

          அங்கே உள்ள தொட்டிலை பின் கட்டில் அம்மாவிற்குப் பிறந்த குழந்தைக்காக அவன் அம்மா கொடுத்திருந்தாள்.  குருவிக் கூட்டில் உள்ள இரண்டு முட்டைகளும் உடைந்து போய் விட்டன.  தரையில் அந்த இடத்தில் ஏதோ வெல்லப் பாகு சிந்தின மாதிரி இருந்தது. 

          கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தக் கதை ஒரு சாதாரண சம்பவம்.  ஒரு கட்டுரையாகக் கூட இது முடிந்திருக்கக் கூடும்.  ஆனால் இந்த இடத்தில் அசோகமித்திரன் ஒரு மேஜிக் பண்ணுகிறார்.

          குருவிக்கு ஏற்பட்ட கதியை நினைத்து பாலு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடக் கூட இல்லை. 

          குருவிக்கூடெல்லாம் நாசமாகிப் போனபிறகு, பாலு மாடியில் இருந்தான்.  அவன் மாடிக்கு வரும்போதெல்லாம் அந்தத் தாய்க் குருவி பறந்து போய் ஜன்னல் கதவு மீது உட்கார்ந்து கொள்ளும். அன்று அதைக் காணோம்.  

          இந்த இடத்தில் குருவி பேசுகிற மாதிரி கதையைக் கொண்டு போகிறார்.  அப்படி சென்றால்தான் இந்தக் கதைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இதுதான் மேஜிக்கல் ரியலிஸம்.

          பாலு அந்த ஜன்னல் கதவைப் பார்த்த மாதிரியே உட்கார்ந்திருந்தான்.  திடீரென்று எங்கிருந்தோ வந்து அந்தக் குருவி ஜன்னல் கதவு மீது உட்கார்ந்து கொண்டது.

          பின் பாலுவைப் பார்த்து குருவி பேச ஆரம்பித்தது.

          “வந்து விட்டாயா? வந்து விட்டாயா? நீ தானா? நீதானா நீ?” என்று பாலு பதறினான்.

          “ஆமாம். நான்தான். நான்தான்” என்றது குருவி

          “உன் மக்கள் பிறக்காமலேயே இறந்து விட்டார்களே?”

          “ஓகோ.. என் மக்கள் பிறக்காமலேயே இறந்து விட்டதற்காக நீ அழுகிறாயா?” என்று குருவி கேட்டது.

          “ஐயோ இப்படி ஆகிவிட்டதே நான் என்ன பண்ணுவேன்” என்று பதறுகிறான் பாலு.

          “நீ என்ன பண்ண முடியும்?” என்று குருவி சொல்ல, பாலுவின் அழுகை சடாரென்று நின்றது.  “என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்?”

          “உன்னால் என்ன பண்ண முடியும்?”

          பாலு கத்துகிறான்.  “உன்னையும் உன் குழந்தையையும் எவ்வளவு மாதங்கள் ஜாக்கிரதையாகக் காப்பாற்றினேன்.  புஜையன்று கூட நான் உன்னைத் தொந்தரவு செய்யவில்லையே?”

          குருவி இரக்கமில்லாமல் பேசிக்கொண்டே போகிறது.  

          “பிறக்காத என் குஞ்சுக்காக ரொம்ப அழுகிறாயே, இப்போது அந்தத் தொட்டிலை ஒரு மனுஷக் குஞ்சுக்காகத்தானே இங்கிருந்து எடுத்துப் போயிருக்கிறார்கள்?”

          குருவி பேசுவதைத் தாங்க முடியாமல் பாலு மாடிப்படியருகே விரைந்தான்.  

          குருவி பறந்து போய்விட்டது.  அப்புறம் எவ்வளவோ தடவைகள் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது.  ஆனால் பாலுவுடன் அது மறுபடியும் பேசவில்லை.

          இந்தக் கதையில் குருவி பேசுவதுபோல் இல்லையென்றால் கதையே உருவாக வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.  

அவரை அறியாமலயே அசோகமித்திரன் மாஜிக்கல் ரியலிஸ கதையை எழுதியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. 

           

         

         

         

         

         

         

   

 

         

 

 

 

Series Navigationதூமலர் தூவித்தொழுஅருள்மிகு  தெப்பக்குளம்…