ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்

thoppil_new

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் மிக அற்புதமான கதைகள்.

ஒரு குட்டித்தீவின் வரைபடம். இதை வெளியிடுவதை எஸ். பொ அவர்கள் ஒரு பேறாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். இதைப் படித்ததையே ஒரு பேறாகக் கருதுகிறேன்.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பஷீரின் கதைகளில் எனக்கு தரிசனம் தந்த ப்ரபஞ்சம் இந்த நாவலில் குமரி முனையாகக் காட்சியளித்தது. பஷீரின் எழுத்துக்கள் பேரன்பைப் பேசினால், தத்துவத்தைப் பேசினால்  இவரது கதைகள் நம் வீட்டில் நம்முடனே வாழும் மனிதர்களின் பாசத்தை, சுயநலத்தை பேசுகின்றன . பணக்கார ஏழை வர்க்கபேதத்தைப் பேசுகின்றன.

பஷீரின் கதைகளில் அவரும் ஒரு மாந்தராய் இருந்தாலும் தன்னைப் பற்றிய கம்பீரமான வெளிப்பாடு இருக்கும். மற்றவர்களை எளிதாகப் பகடி செய்வதைப் படிக்கும்போது புன்னகையை உண்டு பண்ணும். இவரது தொகுதியில் இவரது மன்னிப்பு வேண்டுதல் போல சில கதைகள் உண்டு. தன்னைத் தானேயும் பகடி செய்து கொள்வதையும் காணலாம்.  ஈழத்தமிழில் கதைகள் படிப்பது போல சுகமானது குமரித் தமிழிலும் கதைகள் படிப்பது. நமக்குப் பரிச்சயமில்லாத இடம், பொருள், நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள ஆழ்ந்து படிக்கத் தூண்டும் அதே சமயம் மிகவும் சுவாரசியமான புதிரை விடுவிப்பது போலவும் அமையும்.

மொத்தம் பதினாலு கதைகளில் ”குட்டன் சார்” கதை எல்லார் வாழ்விலும் தூண்டுகோலாய் இருக்கும் ஒரு ஆசிரியர் பற்றியது.
என் அப்பா காலத்தில் எல்லாம் கணக்கப் பிள்ளை பள்ளியில் சேர்க்கப் போகும்போது வயசு என்ன என்று கேட்டால் முன்ன பின்ன சொல்லி சேர்த்து விடுவார்கள். என் அப்பாவை ஒன்றேமுக்கால் வயது அதிகமாகச் சொல்லிச் சேர்த்து விட்டிருந்தார் கணக்கப் பிள்ளை. அது ரிட்டயர்மெண்ட் வயதிலே வந்து இடித்தது. பணி ஓய்வு பெறும் சமயம் ஒன்றேமுக்கால் வருடம் பணியும் போச்சு , சம்பளமும் போச்சல்லவா. இதை அப்பா அடிக்கடி கூறுவார்.

இந்த நூலிலும் ”பிறப்பின் விசித்திரம்” என்ற கதையில் நாயகன் பிறந்தது உத்தேசமாக ஒரு ரஜப் மாசம் அத்திக்குப் பெத்தா என்று வீட்டில் விபரம் கூறுகிறார்கள். இதை வைத்து எப்படி டிசி கொடுப்பது எனத் தாங்களே கணக்குப் பண்ணி ஒரு வயது போட்டு டிசி கொடுக்கிறார்கள். இதில் ஆசிரியர் கிண்டலாக “ கைருன்னிசாவைக் குட்டிம்மா பெத்த ரஜப் 10லுமல்ல, வாப்பாவின் கணக்குப்படி சித்திரை மாதம் நெத்தொலிபட்ட நாளிலுமல்ல, ’அரைகிளாஸ்” வாசுபிள்ளை சார் கணித்துப் போட்ட ஆண்டு மாதம் தேதியில், என் உம்மா என்னைப் பிரசவித்தாள்!. “ கூறுகிறார்.

”ஏணி, பச்சை நிறக்கார்”, இவை இரண்டும் மூத்தும்மா, வாப்பாவின் நோவுகள், தன்னுடைய நோவுகளோடு பொருத்திப் பார்ப்பதான கதை. ”மாளிகை வீட்டில்”  “எப்படி மறக்க முடியும் , நான் மிதிச்சது உங்களை அல்ல” என்று கூறும்போது ஏழை பணக்கார வர்க்கபேதத்தைக் குறிப்பதாக இருக்கும். கட்டிக் கொடுத்த அக்கா பறக்கமுடியாமல் பணக்காரவீட்டின் கூண்டுக்கிளியாக உலவுவது குறித்த வருத்தம் இருக்கும்.

”களியோடக்கா”வுக்காக மூத்தும்மாவின் மூத்திரச் சட்டியை ஒளித்து வைத்ததனால் அவர் முதுமையோடும் பிணியோடும் பிறந்தகம் செல்லகிறார். தான் தாய் என நினைத்துக் கொண்டிருக்கும் தன் பெரியம்மா தன்னைப் பெற்றவரல்ல என்பதனால் இப்படிச் செய்ததாக மூத்தும்மா வருந்தும் இடம் இழிவரலை உண்டு செய்தது. தன்னுடைய தவறுகளையும் ஒப்புக் கொள்ளும் தன்மை இந்தக் கதைகளில் இருக்கிறது.

“ஒரு குட்டித்தீவின் வரைபடமும்” இதுதான். கல்சானுக்காக நொண்டிக் கண்ணும்மாவுக்குக் கொடுக்க வேண்டிய சக்காத்துப் பணத்தைக் கையாண்டதற்காக இதில் மன்னிப்புக் கேட்கும் தொனி தெரியும்.

”காலண்டர் பாவா”, ஒரு சிறப்பான சிறுகதை. சிறுவர்களின் மனநிலையிலேயே கதை பயணிக்கும். நோன்பு பிறை பார்க்க சிறுவர்களோடு மலைக்குச் செல்லும் அவர் முதுமையினால் தனக்குத் தெரியவில்லையோ என நினைக்க அவர் “ பழைய காலண்டராக” சுருட்டிப் போடப்பட்டு சிறுவர்களின் புதிய காலண்டர் படி பெருநாள் அறிவிக்கப்படுவது ரொம்ப யதார்த்தம். “ இரண்டு திருட்டியாலே பார்த்தேன் என்று சொல்லவா? பார்க்கலே என்று சொல்லவா.?” என்று எல்லாக் கதைகளின் முடிவிலும் ஒரு பஞ்ச் டயலாக் மாதிரி ஒன்று வந்துகொண்டே இருக்கிறது.

”புதையல் கதை”யில் தன்னையே பீக்காடு காவலாளியாக கிண்டலடித்துக் கொள்வது, ”நிற்காத காலி”ல்  மகனின் மேல்கல்விக்காக கல்லூரியிலும், வங்கியிலும் முயன்று, உறவு , நட்புக்களிடமும் சிறுமைப்பட்டு கடைசியில் மூஸா அப்பா தர்க்காவுக்கு சென்று தன் மகனுக்கு சீட்டுக் கிடைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்வது ( இதில் வங்கி அதிகாரியுடனான உரையாடல் உண்மையை நச்செனப் பகிரும் ஒன்று ), ”முன்னோர்களின் இரண்டாவது நல்லடக்கம்” , என தன் தமக்கை எடுத்துச் சென்ற தாய் வீட்டு அலமாரியில் முன்னோர்களின் பெயர் மறைக்கப்பட்டுப் பலகை அடித்து அவள் வீட்டில் யாரோ ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, என நவரசக் கலவையாய் உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்.

இதில் ”அஸ்தமனம்” மட்டும் கொஞ்சம் காதல் கலந்த கதை எனலாம்.

”தலைக்குளம்” தண்ணிச் சுரப்பற்ற பூர்வீக வீட்டின் நிலைமையை எடுத்துரைக்கும். ”பண்டமாற்றி”ல் கலந்தான் பெட்டியை எடுத்துக் கொண்டு பேரன் உப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் கதை.

கடைசி இரண்டும் சுற்றுச்சூழல் கேடு மற்றும் சீர்கெட்ட சமூகத்தின், குடும்பத்தின் மனோபாவம் இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மொத்தத்தில் எல்லாக் கதைகளுமே திரும்பத் திரும்ப சொல்லாட்சிக்காகவும், அதன் நேர்த்தியான புனைவுக்காகவும் படிக்கப்பட வேண்டியவை.

இஸ்லாமிய மக்களின் குடும்பப் பழக்கா வழக்கங்கள், ராமநாதபுரம், கன்யா குமரி முஸ்லீம் மக்களின் பேச்சு வழக்கு என இவை நம்மை அந்த இடங்களுக்கே கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாய் இருக்கின்றன.

பஷீர் ஒரு விதத்தில் நம்மிடம் பிரபஞ்சம், தத்துவங்கள் என்று பேசி வியக்கச் செய்கிறார் என்றால் இதில் யதார்த்தம், மொழி ஆட்சி, மனவோட்டத்தில் சொல்லப்படும் கதைகள் என மீரானும் அசரடிக்கிறார்.

நூல் :- ஒரு குட்டித்தீவின் வரைபடம்.
ஆசிரியர் :- தோப்பில் முகம்மது மீரான்
பதிப்பகம் – அர்ஜுனா பதிப்பகம்.
விலை :- ரூ 55.

Series Navigationதமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்அக்னிப்பிரவேசம்-23