ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

Spread the love

 

 

ஸிந்துஜா 

 

நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர்

களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

 

எதற்காக இந்தப் பீடிகை? இன்று அழகியசிங்கரின் ஒரு கதையைப் படித்தேன். மிகவும் உற்சாகமடைந்தேன். அழகியசிங்கர் என் சிறிய நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர். அலட்டல் இல்லாத மனிதர். அவருடைய கட்டுரைகளில் ‘தெரியாது’ என்ற வார்த்தை அடிக்கடி வரும். இதன் உண்மைத் தன்மை புரிந்து கொள்வதற்குச் சற்று சிரமமானது. இரைச்சலைக்  கேட்டும், படித்துப் பார்த்தும் 

சோர்வு பெறும் சூழலில் அழகியசிங்கரின் ‘தெரியாது’ விசேஷத் தன்மை கொண்டதாகவே எனக்கு இருக்கிறது. அவருடைய “சாதாரணத்தன்மை” அவர் அணிந்து கொள்ளும் முகமல்ல. அவரது மனதின் வெளிப்பாடு. 

 

சரி, கதைக்கு வருவோம். “அது அந்தக் காலம்” என்பது சிறுகதையின் தலைப்பு. தினமணி கதிரில் வெளியானது. திருமணமாகி நாற்பது வருடங்கள் கழித்து முதுமையில் தன் எண்ணங்களில் இளைப்பாறும் ஒரு மனிதனின் கதை..குறைந்த வார்த்தைகளில்  இந்தச் சிறுகதையின் உருவம் உண்டாக்கப்படுகிறது. அதன் உள்ளடக்கம் நாஸ்டால்ஜிக்கை உரசிக் கொண்டு நிற்கிறது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் கோபாலன் ‘என்ன இது இவ்வளவு கோரமாக ஆகி விட்டது?’ என்று மட்டும் நினைப்பதோடு நிற்பதில்லை. தன் மனைவிக்கும் அது மாதிரி முகம் ஆகி விட்டது என்று நினைக்கிறார். இது அவருக்கு ஆசுவாசத்தைத் தருகிறதா என்பதை வாசகன் முடிவு செய்ய விட்டு விடுகிறார். 

 

அவர் பெண் பார்க்கச் சென்ற தினமும்,அதற்குப்பின் மனைவியாகப் போகிறவளுடன் ஏற்பட்ட பேச்சுகளும் தேவையற்ற வார்த்தைகளின் தேவையற்ற உக்கிரத்துடன் எழவில்லை. அதனால் அந்த வர்ணனைகள் மீதும் சம்பாஷணைகளின் மீதும் நமக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகிறது. கோபாலனின் தடுமாற்றத்தை அவரின் மனைவி சில வார்த்தைகளில் அலட்சியமாகக் கோடி காட்டி விடுகிறாள். இறுதியில் (இந்தக் கதையில் இறுதி என்று ஒன்று உண்டா என்னும் கேள்வி எழாமலில்லை) அவர் மனைவி இந்த மனுஷனுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டது என்று நினைப்பதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாத்சல்யம் தொனிக்கிறது. கோபாலனின் மனதில் 

உண்டாகும் எண்ணங்கள் “அன்றைய” நினைவுகளுக்கும் “இன்றைய” நிகழ்வுகளுக்கும் இடையே  மாறி மாறி ஊசலாடுகின்றன. இந்த அகவயப்பட்ட நினைவுகளும்,,புறவெளி நிகழ்ச்சிகளும் தேர்ந்த சிற்பங்களை போல இந்தச்  சிறிய சிறுகதையில் எந்தவித ஆரவாரமும் இன்றி செதுக்கப்படுகின்றன. 

 

கு.ப.ரா.வின் அமைதியான எழுத்து ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. பெரும்பாலோர் அவரை ‘சிறிது வெளிச்சம்”, “விடியுமா?” கதைகளுடன் இணைத்து பெண்ணின் ஆழ்மனத் துக்கங்களை, அவர்களின் விடுதலை வேட்கையைச் சித்தரிப்பவராகக் காண்பதிலேயே நிறைவு பெற்று விட்டார்கள். இந்த அபாரமான கதைகளின் நுணுக்கத்துக்கு இணையாக அவர் குடும்ப உறவின் சிக்கல்களை, நிறைவுகளைத் தனது எழுத்தில் பதித்து சிறந்திருக்கிறார் என்பதை அவருடைய “புதிர்”, “பாட்டியின் ஆதங்கம்” போன்ற உன்னதங்கள் சுட்டிக்காட்டும் வல்லமை பெற்றவை. அழகியசிங்கரின் எழுத்து இவற்றை நினைவுக்கு கொண்டு வருகிறது; பக்கத்தில் நிற்கிறது என்பது மிகை வார்த்தை அல்ல. 

 

  

 

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்மொழிபெயர்ப்பாளர்க்கான விருது