ஒரு தாதியின் கதை

 

புரையோடிய

புண்ணையும்

புன்னகையால் கழுவி

களிம்பிட்டுக்

கட்டுவார்

 

ஆறேழு நாளில்

ஆறிவிடு மென்று

நம்பிக்கை விதைப்பார்

நலம் கூட்டுவார்

 

அந்த

மருத்துவ மனையில்

புண்ணாற்றும் பிரிவில்

இது பதினேழாம் ஆண்டு

அந்தத் தாதிக்கு

 

ஒரு நாள்

அவர் குடும்பம் பற்றிக்

கேட்டேன்

 

‘பல்கலையில் மகனாம்

உயர்நிலையில் மகளாம்

அப்பா முகமே

அறியாராம்

அவர் எங்கேயோ

யாரோடோ’

என்றார்

 

‘இரண்டு சிறகுகள்

இயற்கையம்மா

இணைந்து வாழுங்கள்’

என்றேன்

 

அவர் சொன்னார்

 

‘கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்தான்

துரோகியானாலும்

துணைவ னென்று

சொல்லவில்லையே

அய்யா

நாகத்தோடு வாழலாம்

துரோகத்தோடு

வாழமுடியாதய்யா

 

கடவுளிடம் கத்தினேன்

 

‘தப்பய்யா

உன் தராசு’

 

கடவுள் சொன்னார்

‘எவருக்கும் புரியாது

என் தராசு

எல்லாருக்கும்

நான் கடவுள்

அந்தத் தாதி

என் கடவுள்’

 

அமீதாம்மாள்

Series Navigationகவிதைகள்என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)