ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்

Spread the love

காடு
இடுங்கியதாய்
எறும்புகள்
கூடியிருக்கும்.

கலங்கி அது
விசும்புவதாய்ப்
புட்கள்
கீச்சிடும்.

காட்டின்
எந்த மரத்திலிருந்தும் உதிரா
ஒரு ’வண்ணப்பூ’
உதிர்ந்திருக்கும்.

பறந்து பறந்து
சென்ற அதன் பின்னால்
காடு
பலகாலம்
திரிந்து திரிந்து போயிருக்கும்.

இனி
காட்டின் அழகை
வெளியின்
வெள்ளைச் சீலையில்
யார் பறந்து வரைவது?

பறந்து போன
’உயிர்ச் சிட்டு’
’கூடு’ திரும்பாதென்றால்
காடு திரும்புமா?

உயிர்ப்பிப்பது போல்
எறும்புகள்
’வண்ணப்பூவின்’ உடலை
வளைய வளைய வரும்.

சின்ன உடலின்
உயிர்ச்சாவின் ’சுமை’
தாங்க முடியாது
மொய்த்து
தூக்கிப் போகும் உடலை.

சாவில்
எது சிறிது?
எது பெரிது?

காடு
கவிழ்ந்து  கிடக்கும்
வண்ணத்துப்பூச்சியின் உடலை
எறும்புகள்
சுமந்து செல்லும் பாதையில்.

கு.அழகர்சாமி

Series Navigationவிழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)