ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

Spread the love

TM_Soundararajan

 

(இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி)

குர‌ல் த‌ந்து
குரல் மூலம்

முக‌ம் த‌ந்து
இம்ம‌க்க‌ளை
ஆட்சி செய்தீர்.

முருக‌ன் எனும்
உந்து விசை
அத்த‌னையும்
உன்னிட‌ம்
தேனின் ம‌ழை.

“அன்ன‌ம் இட்ட‌ வீட்டிலே”
அந்த‌ முத‌ல் பாட்டிலிருந்து
“க‌ணீர்”க்குர‌ல்
தேய‌வில்லை மாற‌வில்லை.

கோடித் த‌மிழ் நெஞ்சுக்குள்ளும்
ஊடி ஊடி பாய்ந்த‌தில்
ஊன் உருக்கி என்பு உருக்கி
ஊழி இசை வெள்ள‌ம் தான்.

உன் குரலுக்கு
உதடு அசைத்தவர்கள்
உயரம் போனார்கள்.
அவர்களை
கீழே விழாமல்
தூக்கிப்பிடித்திருந்தது
இவர்களின் கண்ணுக்கு தெரியாத
உன் உயிர்க்குரல் அல்லவா?

பாவம் நீ ..அந்த
கூம்பு ஒலிபெருக்கிகளில் அல்லவா
கூடு கட்டிக்கிடந்தாய்!

இதுவும் ஒரு வகையில்
வைக்கோல் கன்றுக்குட்டியை காட்டி
பால் கறப்பது போல் தான்.
ஆம் அந்த
வாக்குப்பெட்டிகளுக்குள்ளேயும்
கண்ணீர்ப்பிரளயம் தான்.

மெல்லிசை ம‌ன்ன‌ர்களும்
எழுதிக்கொடுத்த கவிஞர்களும்
ப‌லூன் எடுத்து கொடுத்தார்க‌ள்
உன் உயிர் மூச்சு அத்தனையும்
இன் மூச்சாய் உள்ளிற‌ங்கி
விஸ்வ‌ரூப‌ம் காட்டிய‌து.

ப‌த்து அவ‌தார‌ம் அத்த‌னையும்
ப‌த்தாது உனைக்காட்ட‌!!!1.
“திருமால் பெருமைக்கு நிக‌ரேது”

எனும் பாட‌லே ஒரு பாற்க‌ட‌ல்
ராக‌ங்க‌ளின் ராக‌ங்க‌ள் அங்கு
பொங்குமாம்பெருங்க‌ட‌ல்.

இன்னொரு பாட்டு..அதில்
மெட்டு குழைந்த‌து.
உண‌ர்வு குவிந்த‌து..உன்
உயிரிசை பிசைந்த‌து
எங்க‌ள் ம‌ன‌ங்க‌ளை யெல்லாம்!
அது “அவன் தான் ம‌னித‌ன்” ப‌ட‌ம்.
“ம‌னித‌ன் நினைத்திருந்தான்
வாழ்வு நிலைக்கு மென்று..”

இப்போது எல்லாம்
வைக்கோல் படப்பில்
விழுந்த‌ ஊசியை
தேடுவ‌து போல்
அபூர்வ‌மாய் கேட்கின்றது
ந‌ல்ல‌ சினிமாப்பாட்டு.

அன்று
உன் பாட‌ல்க‌ளின்
வைக்கோல் ப‌ட‌ப்பு எல்லாமே
தேன் கீற்றுக‌ள்…இசையின்
உயிர் நாற்றுக‌ள்.

குர‌ல் இசைக்கு
பக்க‌ வாத‌ம் இன்று
அத‌னால்.
ப‌க்க‌ வாத்திய‌மே
இன்றைய‌ இசை.

உன் முத்திரைக்கு
எந்த‌ பாட்டை சொல்ல‌?
எந்த‌ ப‌ட‌த்தை சொல்ல‌?

பாட்டுக‌ள் வெறும் அடையாள‌ங்க‌ள்.
அவை நீ
உன் நுரையீர‌ல் பூங்கொத்தின்
ஒவ்வொரு இத‌ழாய்
உதிர்த்து உதிர்த்து
ந‌ட்டு வைத்த‌ மைல் க‌ல்.

உன் இசையின் ப‌ய‌ணம்
போய்
முட்டி நிற்கும் இட‌மும்
அந்த‌ பாட்டு தான்.
க‌ண்ணீர் முட்டி நிற்கிற‌து
காட்சிக‌ள் புகைமூட்ட‌ம்.

“போனால் போக‌ட்டும் போடா”

உன் உட‌ல்கூடு போக‌ட்டும்.
உன் குர‌ல்க‌ள் யாவும்
உன் இசை மூச்சுக‌ள் யாவும்
எங்க‌ளுக்கு
அழியாத‌ அக‌லாத‌
இசைக்கு .
ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

Series Navigationஜங்ஷன்தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !