”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

சற்றுக் கடினம்.

அவர்கள்

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

”ஒழுக்கங்கள்” பற்றி

அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

அதனால் தான்

அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”.

அவர்களுக்கு

ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல்

அதிக அக்கறை.

அடிப்படையில்

ஆண்கள் பெண்கள்

எலும்புக் கூடுகள்.

எலும்புக் கூடுகள்

ஒழுக்கமானவை.

அப்படியே

ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள்

இருக்க வேண்டும்

இப்படியெல்லாம்

ஒழுக்கங்களுக்கு

அவர்கள் வியாக்கியானம் இருக்கும்.

விளக்கிப் பதில் சொல்ல

வீணாகும் நேரமென்று

விமர்சனங்களை

அவர்கள் அனுமதிப்பதில்லை

”ஒழுக்கமானவர்கள்”

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

அவர்களுக்குக்

கோணல் மாணல்கள் பிடிப்பதில்லை.

அதனால்

கேலிச் சித்திரிப்புக்களை

அவர்கள் விரும்புவதில்லை.

கண்ணாடி முன்னால் கூட

முகத்தைக்

கோணல்மாணல் செய்து

சிரிக்க மாட்டார்கள்.

கண்ணாடி மேல்

அவர்களுக்கு ஒரு பயம்.

கண்ணாடி உடைந்தால்

அவர்கள் உடைந்து போவார்கள்

என்று கலவரப்படுவார்கள்.

உடைந்த சில்லுகளில்

’உண்மைகள்’ வெளிப்பட்டுவிடும்

என்று கவலைப்படுவார்கள்.

”ஒழுக்கமானவர்கள்”

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

அவர்கள் எங்கிருந்தாவது

வருவோர் போவோரைக்

கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் கிழித்த கோட்டை மீறிப்

போகும் வழிகள்

பொல்லாத வழிகள் என்று

எச்சரிப்பார்கள்.

பொல்லாத வழிகளில்

மீறிப் போனவர்களின் மிச்சமாய்

வெறுஞ் செருப்புகள் கிடந்த வரலாற்றைச்

சான்றாகக் காட்டுவார்கள்.

’குரல்வளைகள்’

சுதந்திரமாய்ப் பேசுவது

கேட்கும் காதுகளுக்கு ஆபத்து

என்பார்கள்.

மழை இராத்திரி

வயல்தவளைகளின் கூச்சல்கள்

அவர்கள்

மனதிற்குப் பிடித்தவை.

மாறுபட்டுக்

குரல்வளையில் பேசினால்

கொஞ்சம் கை வைப்பார்கள்.

”ஒழுக்கமானவர்கள்” தாம்

குரல்வளைகளை நெறிப்பார்கள்.

எல்லாமே

அமைதியாய் இருக்க வேண்டும்.

அமைதி

அவர்களுக்குப் பிடிக்கும்.

”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது

சற்றுக் கடினம்.

அவர்கள்

நம்மைப் போல் தான் இருப்பார்கள்.

Series Navigationவலைத் தளத்தில்இந்நிமிடம் ..