ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி


போதைக்காக அல்லாமல்
பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான்
மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும்
போதையில் உளறும் தந்தையாலே
குடியை வெறுத்தான் என்றபோதிலும்
புகைக்கும் அவரது தோரணையே
அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம்
என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு
அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார்
என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு
தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும்
இருக்கிறது ஒரு தீக்குச்சி
இருக்கட்டும்
அதுவல்ல இக்கவிதையின் கருப்பொருள்
அவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட்
இப்பொழுது கண்விழித்து
நகரத் துவங்கிவிட்டது அவனைத்தேடி
ஏனைய துண்டங்களும் உயிர்த்து
விரைகின்றன அதைத் தொடர்ந்தபடி
எல்லாம் சென்று சேர்ந்து
ஒன்று கூடி
சிதைமேடையென குவிகிற பொழுதில்
கிடத்தி எரிக்க
தயாராயிருக்கும் அவனது சடலம்.
ராஜா
Series Navigationஅம்மாவின் மனசுஎதிரொலி