ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்

சுழியம்

தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன.

அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன.

நமக்கும் ஒரு இயல்பான கடமை இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் ஊடகங்களின் நோக்கங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டிய அந்த அறிதல் எனும் கடமையை, அறிவின்பம் இயல்பாகவே உருவாக்குகிறது.

இக்கடமையின் வழி இவ்விஷயத்தில் பல்வேறு தரப்புக்கள் குறித்த புரிதலை நாம் அடையவேண்டும்.

எதிர்ப்பவர்களே இந்த விவாதத்தை உருவாக்குகிறார்கள் எனபதால், அவர்களிடம் இருந்தே ஆரம்பிப்போம். ஓரினக்கவர்ச்சி மற்றும் தற்பால்ச்சேர்க்கை குறித்த பயம் எதிர்பால் கவர்ச்சி உடைய பெரும்பான்மையினரிடம் உள்ளது. இந்தப் பயத்தின் காரணமாக, ஓரினக்கவர்ச்சி என்பது இயற்கையான ஒன்று அல்ல என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

மிகக் கடுமையான எதிர்ப்பில் இருந்து மென்மையான எதிர்ப்புகள்வரை பல தரப்புகள் வைக்கிறார்கள். மிகக் கடுமையான எதிர்ப்புத் தரப்பில் இது ஒரு மனோவியாதி, கலாச்சாரமாகத் ‘தொற்றிக்’ கொள்ளக்கூடியது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மென்மையான எதிர்ப்புத் தரப்பில் பாலுறவுக்கு வாய்ப்பு இன்மையால் ஏற்பட்டுவிடுகிற வழக்கம் இது என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த வாதிகளின் அடிப்படையான ஒற்றுமை, சமூகத்திற்கு இவ்விழைவால் என்ன நடக்கும் என்கிற கவலையே.

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான பழக்கங்களுக்காக (இவற்றை ஒழுக்கம் என்று இவர்கள் சொல்வார்கள்), தனிமனித விழைவுகள் தியாகம் செய்யப்படவேண்டும், ஒடுக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்து.

இந்த வாதங்களிலும் சாரம் உண்டு. இருப்பினும், இவை முழுமையான பார்வையால் எழவில்லை.

இதில் பல்வேறு தரப்புகளின் லாப நட்டக் கணக்குகள் செயல்படுகின்றன. அந்தக் கணக்குகளையும் கவனத்தில் கொள்வது ஓரளவு விரிந்த பார்வையை அடைய உதவும்.

இத்தகைய வாதங்களை கிறுத்துவ முகமதியர்கள் முன்வைப்பதால், அவர்களுக்குச் சற்றும் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் இந்துத்துவர்களும், ஹிந்து மதங்களின் ஆச்சாரியார்களும் இதே ஆபிரகாமியர் வாதங்களையே முன்வைக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், உண்மையின் உரைகல் என்பது ஆபிரகாமியக் கோட்பாடாகவே அமைந்துவிடுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமான கேடு.

சமூக ஒழுக்க விஷயத்தில் விக்டோரிய ப்ராட்டஸ்டண்ட் கிறுத்துவத்தின் பார்வையே அதிகார பீடங்களின் பார்வையாக இருக்கிறது. இந்தக் காலனிய அதிகார பீடங்களில் முக்கியமான நேருவிய இந்திய அரசும், இந்து மத ஆர்த்தடாக்ஸ் மத பீடங்களும் ஓரினச் சேர்க்கையை சமூகமாயை என்றோ, மனோவியாதி என்றோதான் சொல்லிவருகின்றன.

அதன் காரணமாக, ஆபிரகாமிய சட்டங்களின்படி எதிர்பால் விழைவை, செய்யப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றுகிறோம் என்று காட்சிப்படுத்துதல், அத்தாட்சி செய்தல் ஒரு குடிமகனின் வெளிப்படையாகச் சொல்லப்படாத, அடிப்படைக் கடமையாக ஆகிவிட்டன. ஆண்மையை அத்தாட்சி செய்தல் சமூக அங்கீகரிப்பின் அடிப்படையாக இருக்கிறது.

நல்லவேளையாக, இதை நிறுவ லேப் செர்ட்டிஃபிக்கேட் அவசியம் என்கிற நிலைக்குச் சமூகம் இப்போதைக்குக் கீழிறங்கவில்லை. அதனால், இந்தக் காட்சிப்படுத்துதலுக்கு, அத்தாட்சி தெரிவிப்பதற்கு, இருக்கும் ஒரே வழியாக எதிர்ப்புக் கோஷம் எழுப்புவது மட்டுமே இருக்கிறது.

நாங்கள் ஓரினக்கவர்ச்சியோ ஓரினச்சேர்க்கையோ உடையவர்கள் இல்லை என்பதை நிறுவ எதிர்ப்பு முழக்கம் எழுப்புவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. இந்தப் போதாமையும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கோஷம் எழுப்பும் நிலைக்கு இவர்களைத் தள்ளுகிறது.

சமூகம் என்ன சொல்லுமோ என்கிற பயம்தான் ஓரினச்சேர்க்கை எதிர்ப்புக்கு முக்கியமான காரணி. (வேறு காரணிகளும் உண்டு.) சமூகத்தின் மதிப்பீடுகளை நிர்ணயிப்பவராக ஆபிரகாமிய மதத்தவரே இருப்பதால், சமூக மதிப்பீடுகளை எதிர்க்க விரும்பாத இந்துத்துவர்களும், ஆர்த்தடாக்ஸ் ஆச்சாரியார்களும் தற்பால்விழைவுக்கு எதிரான ஆபிரகாமிய நிலையையே எடுக்கிறார்கள்.

பகவானை நம்பினால் வேறு பயம் வேண்டாம் என்று மேடைகளில் போதிக்கிற தற்கால ஹிந்து மதப் பெரியவர்களும்கூட இந்தச் சமூக ஆக்கிரமிப்புக்குப் பயந்து, அதற்கு உட்பட்டே செல்ல வேண்டி இருக்கிறது.

ஆக மொத்தத்தில், ஒரு புனிதவிசாரணை பயத்தில் இந்தச் சமூகம் முழுவதும் திணறிவருகிறது.

இவர்களுக்கு மாறாக, ஓரினக் கவர்ச்சியையும் ஓரினச் சேர்க்கையையும் தனிமனித சுதந்திரம் என்று வாதிடுகிற தரப்பு இருக்கிறது. இவர்களிலும், மென்மையான வாதங்களை முன்வைப்பவர்களில் இருந்து, இந்த வாதங்களை மெய்ப்பிக்க எதிர்பால்க்கவர்ச்சியினர் மேலும் ஓரினச்சேர்க்கையை திணிக்கும் வேட்கை கொண்டவர்கள் வரை பலர் அணி கட்டி நிற்கிறார்கள்.

அக்கால கிரேக்க ரோம கலாச்சாரங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இயல்பானதாக இருந்தது. ப்ளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் சாக்ரடீசும் இருபால் விழைவினர். குழந்தை பெறுவதற்கு மட்டுமே எதிர்பால் சேர்க்கை என்ற வகையில் அங்கு கலாச்சாரம் இருந்தது. இந்தக் கலாச்சாரத்தின் தொடர்ச்சி தற்கால மேற்கத்திய நாடுகளின் ஓரினச்சேர்க்கை ஆதரவு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது.

இருப்பினும், அக்கால அந்தப் பேகன்களின் நிலைப்பாட்டில் இருந்து இக்கால ஓரினச்சேர்க்கை குறித்த புரிதல், அடிப்படையில் பலவகைகளில் வேறுபட்டது. இக்கால அடிப்படையாக இருப்பது ஆபிரகாமிய மதம் சார்ந்த பார்வையை எதிர்ப்பது என்றளவில் இருக்கிறது. அந்த நிலைப்பாட்டுடன் தனிமனித சுதந்திரம் என்கிற சமூக-அரசியல் நிலைப்பாட்டையும் கலக்கி காக்டெயில் குடிக்கிறார்கள்.

அதன்படி, சமூகம் என்கிற அமைப்பைவிடத் தனிமனிதர் என்கிற அமைப்புக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக அவர்கள் பறக்க விடுகிற பட்டங்களின் வாதச்சரடுகளின் மஞ்சாவாக, முற்றிலும் தானாக இயங்குகிற தனிமனிதச் சுதந்திரம் இருக்கிறது.

சமூகத்தில் பல்லாண்டுகளாகக் கற்றுத் துறைபோன, பட்டு சரிசெய்துகொண்ட சமூக விதிகள் அனைத்தையும் உடைத்தால் மட்டுமே மானுடம் அடுத்த பரிணாமப் படிக்கு நகரும் என்பதைத் தீவிரமாக நம்புகிறார்கள் இத்தரப்பினர்.

சமூகம்தான் முக்கியம் என்கிறவர்களுக்கும் தனிமனித சுதந்திரம்தான் முக்கியம் எனும் இவர்களுக்கும் இடையே இணக்கமாக இருக்கும் ஒரே வாதம் இந்த அடுத்த பரிணாமம் என்கிற வாதம். இத்ற்கு முற்போக்கு என்றும் ஒழுக்கம் என்றும் பல பெயர்கள் இருதரப்பாரிடையே நிலவுகின்றன.

அடிப்படையில் இந்த இரு தரப்பினரும் பின்பற்றுவது ஆபிரகாமிய முரணியங்கல் பார்வையையே.

ஒன்றை மற்றொன்று கொன்று தின்று கொழுப்பதே வாழ்வு என்ற முரணியங்கல் பார்வையை பிராண வாயுவாக, இந்த விவாதங்களின் இயங்கியல் தளமாகக் கேள்வி கேட்காமல் இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்த முரணியங்கல் பார்வைக்கு மாறான அனைத்துப் பார்வைகளும் விளிம்புநிலைப் பார்வைகளாக ஆகிவிடுகின்றன.

இவற்றில் ஒரு விளிம்புநிலைப் பார்வைத் தரப்பாக ஹிந்து மரபின் பார்வை/புரிதல்/செயல்பாடு என்ன என்பதையும் முன்வைப்பது அவசியம்.

ஹிந்து மரபு என்று சொல்வதைவிட தொழிற்மய வாழ்விற்கு முந்தைய கிழக்கத்திய மரபு என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும். அந்த வகைப் பார்வையில் ஹிந்து மதம் தாண்டிய, சீன ஜப்பான் உட்பட்ட பல்வேறு கிழக்கத்திய நாடுகளின் பார்வையும் அடங்கும். ஆபிரகாமிய ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட மேற்கத்திய பேகன்களின் பார்வையும் அரேபியக் காஃபிர்களின் பார்வையும் கிழக்கத்திய பார்வையைப் போன்ற நிலையையே எடுப்பதைக் கவனிக்க வேண்டும். ஆயினும், ஹிந்துத்துவர்களும் தற்கால இந்து மதப் பெரியோர்களும் எடுக்கும் நிலைப்பாடுகள் காலனியப் பார்வையாக இருப்பதால், ஹிந்து சமூகப் பார்வை என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஹிந்து மரபின் பார்வை “ஒத்தியக்கப் பார்வை”. அது, ஆபிரகாமிய முரணியக்கப் பார்வைக்கு முற்றிலும் எதிரானது. சமூகமும் தனிமனிதரும் ஒத்து இணக்கமாக இயங்கும் வழிமுறையை ஹிந்து மரபு முன்வைக்கிறது. அதன் தரப்பாக எப்போதும் ஒத்தியக்கப் பார்வையே இருக்கிறது.

முரணியக்கப் பார்வையின்படி, உணவுச் சங்கிலியின் மேலே செல்ல கீழே உள்ளவற்றை அழித்து மேலேறும், வெல்லுவதே வலியது, வலியதே வாழ உரிமை உள்ளது எனும் வாழ்க்கை முறை. இதை independence என்று அவர்கள் வரையறுக்கிறார்கள்.

ஹ்ந்து மத ஒத்தியக்கப் பார்வையின்படி உயிர்ச்சூழலில் உள்ள அனைத்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்து வாழ்கின்றன. இதன்படி inter-dependency is independence. இங்கே மரணம் தோல்வி கிடையாது. தோல்வி மரணம் கிடையாது. கொல்லுதல் வெற்றி கிடையாது. கொல்லப்படுதல் தோல்வி கிடையாது. வெற்றி தோல்வி என்கிற பார்வையே கிடையாது. இருத்தல் மட்டுமே. வாழ்தல் மட்டுமே.

கொல்லப்பட்ட துரியோதனின்மேல் தேவர்கள் பூமாரி பொழிவார்கள். வெற்றி பெற்ற பீமன் வெட்கித் தலைகுனிவான். ராவணன் உயிர் ஊசலாடச் செய்த ராமன், ராவணின் காலடியில் அமர்ந்து பணிவுடன் பாடம் கேட்பான். நாட்டையும் நாட்டு மக்களையும் வென்றவன், அதிகாரம் ஏதும் இல்லாத ஏழை அறிஞனின் பாதம் பணிவான்.

அவ்வகையில், ஆதிக்க உணர்வு இல்லாத ஹிந்து மரபானது ஓரினச்சேர்க்கையையும், ஓரினக்கவர்ச்சியையும் அங்கீகரிக்கிறது. ஆனால், உயிர்ச்சூழலைப் பாதிக்காதவகையில் வரையறைகள் வேண்டும் என்கிறது.

அதனால்தான், பண்டைய ஹிந்து இலக்கியங்களில் இதை ஒரு வியாதி என்று எங்கும் சொல்லவில்லை. இதைக் குணப்படுத்த வேண்டும் என்று யாரும் அல்லாடவில்லை. கோவில் சிலைகள்வரை அங்கீகாரம் கொடுத்தார்கள். புராணக்கதைகள் மூலமாக உரையாடும் தளம் திறந்தார்கள்.

அதனால், லாட்ஜுகளில் வியாதி தீர்க்கிறேன் என்று ஏமாற்று நடக்கவில்லை. நற்செய்திக் கூட்டத்தில் இந்த வியாதியைத் தீர்க்க செபம் செய்து தேவனின் ரட்சிப்பை வாங்கித் தருகிறேன் என்று யாராலும் சூதுப் பிழைப்பு நடத்த முடியவில்லை. இதைத் தடுக்க ஆண்குறி பெண்குறி வெட்டி அல்லாவைக் கண்டறியும் சிந்தனை காணவில்லை. பொலிட்பீரோ ஆட்கள் துளை நிரப்பும் தகுதி யாருக்கு உண்டு என்பதை கட்டுப்படுத்தவில்லை. ஆதரவு தெரிவிக்கிறேன் என்று சொல்லி பிழைப்பு நடத்த அரசுசாரா நிறுவனங்களுக்கு வழியும் இல்லை. இப்படிப் பலருடைய வாழ்க்கையிலும் மண்ணைப் போடுகிறது பண்டைய ஹிந்து மரபு.

மண்ணைப் போட அது செய்வது ஒன்றே ஒன்றுதான். அனைத்துவித வேறுபாடுகளின் இருப்பை அது அங்கீகரிக்கிறது.

ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. வரையறைகளும் செய்கிறது.

வேறுபாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிற ஹிந்து மனம் இது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறாமல் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதன் பின்னர் ஓரினச் சேர்க்கையை முழுமையாகவே அங்கீகரிக்கிறது.

இம்மரபில் மிகக் கடுமையான தண்டனையாக இருப்பது, ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் எதிர்பாலினச் சேர்க்கையாளரின் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவதே. இதைச் சாதிவிலக்கம் என்று பண்டை ஹிந்து சட்ட நூல்கள் பெயர் தருகின்றன. பண்டைய ஹிந்து மரபின்படி சாதி விலக்கம் என்பது ஒட்டுமொத்த சமூக விலக்கம் இல்லை. அடிப்படை வாழ்வாதார மறுப்பும் இல்லை.

அதே போல, ஒருவர் தன்னுடைய பால்க்கவர்ச்சியைத் தானாகத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதிலும், மற்றவர் குழப்பி விடக்கூடாது என்பதிலும் பண்டைய ஹிந்து சமூகம் கவனமாக இருந்தது. வயதில் பெரியவர் எவரேனும் பாலுணர்வு அறியாத தற்பால் சிறுவயதினரோடு உறவு கொண்டால், அந்த வயதில் பெரியவருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் தந்தது.

அதே சமயம், ஒருபால்க் கவர்ச்சி கொண்டவர் திருமணம் செய்துகொள்ளத் தடை உண்டு. அடுத்த சந்ததியினரை உருவாக்குபவருக்கு மட்டுமே சொத்து உண்டு என்பதால் ஒருபாலின விழைவோருக்கு சொத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே தரப்பட்டன. வாழ்வாதாரம் தாண்டிய மிகைச் சொத்துக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படத் தேவை இல்லை எனப் பண்டைய ஹிந்து சமூகம் கருதியது.

தற்காலத்தில் மேற்கத்திய நாடுகள் சிலவற்றில், சில இடங்களில், ஓரினவிழைவோர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது. அவர்கள் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொண்டு குடும்பம் எனும் அமைப்புக்குள் வர அவை வழிவகுக்கின்றன. அதன்காரணமாக, மிகைச்சொத்துக்களுக்கான உரிமையையும் அவர்கள் பெறுகிறார்கள்.

இருப்பினும், இந்தவகைச் செயல்பாடு பெரும்பாலான உயிரினங்களின் பயலாஜிக்கலை மீறிய ஒரு ஏற்பாடுதான். இயல்பான ஒன்று இல்லை. இருப்பினும், அக்காலத்திய சாதி போன்ற அக்காலச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு இல்லாத அந்த இடங்களில் இத்தகைய ஏற்பாடுகள் அவசியமானவையாகவும் ஆகிவிடுகின்றன.

பண்டைய ஹிந்து மரபில், சாதி விலக்கம் செய்யப்பட்ட தற்பால் விழைபவர் அவருடைய குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்டவர் இல்லை. ஓரினவிழைபவருக்குத் தரப்படவேண்டிய ஜீவனாம்ச வாழ்வாதாரங்களை வாழ்வுரிமைகளைத் தரவேண்டிய கடமை குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் உண்டு.

இப்படிப் பண்டைய ஹிந்து சமூகம் உருவாக்கிய வரையறைகளும், அங்கீகரிப்புகளும் அறியாமல் தற்காலத்திய கருப்பு வெள்ளைச் சண்டையாக இந்த விவாதங்கள் நடந்துகொண்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது. “லோகோ பின்ன ருசி” என்கிற பாமரர்வரை சென்றடைந்த இந்திய மரபின்வழிப் புரிதல் இப்போது இல்லை.

இந்த விவாதங்களின்போது பால்ய விவாகம் இது ஒரு சமூகப் பிரச்சினையாக ஆக்கிவிடாமல் தடுத்தது என்றும் சிலர் கூறிவருகின்றனர். இந்தக் கூற்று இவ்வழக்கத்தின் பின்னணிகளை ஆராய்ந்தபின்னரே சொல்லப்படுகிறதா என்பது ஐயமே.

உலகம் முழுவதும் 18ம் நூற்றாண்டுவரை ஆடவரும் பெண்டிரும் பாலுறவுக்குத் தயாராக ஆவதற்கு 18 வயது அடையவேண்டி இருந்தது. 19ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாலுறவுக்கு உடலானது தயாராகும் வயது குறைய ஆரம்பித்து விட்டது. (இதற்கு ஆபிரகாமியப் போக்கில் அமைந்த தொழில்மயமான வாழ்வுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் தானியங்களை அதிகம் உண்ண ஆரம்பித்த வாழ்வாதாரச் சீர்கேடும் இதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.)

19ம் நூற்றாண்டுக்குப் பின்னர், 11 அல்லது 12 வயதில் பாலுறவுக்கு உடல் தயாராவது தற்போது இயல்பான வழக்கம். அந்த வயதில், குழந்தைகள் வயதுக்கு வராவிட்டால் பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து, மேற்கத்திய மருத்துவரிடம் போய் ஹார்மோன் இன்ஜெக்‌ஷன் போடுகிறார்கள்.

இப்படி இயற்கையைத் தங்கள் புரிதலின்படி வளைக்கும் மனோநிலைகூட 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்த தொழிற்புரட்சிக் கலாச்சாரத்தினால்தான் மக்களுக்கு ஏற்பட்டது. வந்தாலும் வராவிட்டாலும் ஈசன் அருள் என்றிருந்த மூதாதையர் போக்கை மறைந்தது. ஈசனைத் தூக்கி ஈசான்ய மூலையில் கடாசிவிட்டு, விரும்புவதை ஈசியாகத் தொழில்நுட்பத்தால் அடைவதே அறிவெழுச்சியின் அடையாளம் என்று ஊசிக்குள் வாழ்வை உட்குவித்து விட்டார்கள்.

இந்த அறிதல் அற்ற மானுட இடையூறுகளால், பாலுறவுக்குத் தயாராக உள்ள உடல் குழந்தைப் பேறுக்குத் தயாராக இல்லை.

எனவே, பால்ய விவாகம் என்பது இக்காலத்துக்கு நிச்சயம் பொருந்தாது.

குழந்தை பேறுக்கும் பேணுதலுக்கும் தயாராக ஆனபின்னர்தான் திருமணம் என்று வைப்பது உன்னதமான ஒரு நோக்காக அமையும். ஆனால், அந்த உன்னத நோக்கம் செயல்படும் சமூகப் பொருளாதாரச் சூழலில் நாம் இல்லை. ஆகவே, இவ்விழைவு சார்ந்த வாதங்களும் குழப்பங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. சரி என்றும் தவறல்ல என்றும் வாதங்கள் தங்களைத் தாங்களே வகைப்படுத்திக் கொள்கின்றன.

இச்சூழலில் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையாக ஏற்படுவதா அல்லது பயிற்றுவிப்பால் ஏற்படுகிறதா என்பதற்குள் இந்தச் சரி தப்பு வாதங்களை அடுக்கிவிடலாம்.

இவ்விஷயத்தில், அறிவியல் என்ன சொல்லுகிறது ?

அறிவியலின்படி, பயலாஜிக்கலான காரணங்களோடு மற்ற சமூகச் சூழல்களும் சேர்ந்தே ஒருவரது பால்க்கவர்ச்சியையும் பாலுறவையும் நிர்ணயிக்கின்றன. பயலாஜிக்கலான காரணங்கள் இல்லாவிட்டால், சமூகக் காரணிகள் வலுவிழந்துவிடுகின்றன. அதாவது, இயற்கையான காரணங்கள் இல்லாவிட்டால், சமூகச் சூழலால் பயிற்றுவித்த பாலுணர்வாக ஓரினக்கவர்ச்சி இருப்பது மிகக் கடினம்.

இந்த அறிவியல் புரிதல் உள்ளதாகச் சொல்லிக் கொள்ளுகிற மேற்கத்திய நாடுகளிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான, ஆபிரகாமிய மதம் சார்ந்த எதிர்ப்பு உள்ளது.

அந்தப் போக்கிலேயே நம் நாட்டிலும் தற்போது இது சரி என்றும் இது தவறல்ல என்றும் வாதங்கள் இருபிரிவுகளாக நடந்துவருகின்றன.

சரி அல்லது தவறு என்று முடிவு செய்துகொண்டு, இவற்றில் ஒன்றை மட்டும் அனைவர் மேலும் ஒற்றைச் சட்டத்தின்படி திணிக்கும் ஆபிரகாமியப் போக்கில்தான் இந்த உரையாடல்கள் இந்தியாவில் நடந்து வருகின்றன. நேருவிய இந்திய அரசியலமைப்பும் ஒற்றைப்படுத்தும் கருவியாக பன்மைக்கு எதிரானதாக இருந்து வருகிறது. அதனால்தான், தற்பால்சேர்க்கைக்கு எதிரான நிலையை நேருவிய இந்திய உச்சநீதி மன்றம் எடுக்க வேண்டி உள்ளது.

இந்தச் சரி/தவறல்ல எனும் இருவகை வாதங்களிலும் இந்திய மரபு இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த இருவகை வாதிகளும் இந்திய மரபைத் தங்களுக்கு ஆதரவானதாகக் கருதுகிறார்கள் என்பது நவீன மானுடத்துக்கே உரித்தான முரண்நகை.

இந்திய மரபோ இந்த வாதங்களில் இருந்து, இந்த ஆபிரகாமியப் போக்கில் இருந்து, முற்றிலும் விலகி இருக்கிறது.

சமூகத்தில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் மட்டும் வழிகாட்டும் கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துவிட்டு, கலந்து சிந்தித்தல் மூலம் முடிவினை அடையும் மானுட சமூகத்தின் இயல்பான ஞானத்தின்மேல் நம்பிக்கையுடன் அது விலகிவிடுகிறது.

அந்த நம்பிக்கை சமூகத்தின் அடிமட்டத் தளங்களுக்குத் தங்களுக்கான விதிகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள, மாற்றிக்கொள்ளச் சுதந்திரம் இருக்கிறது என்கிற வேதவழி தன்னாட்சி முறையில் இருந்து எழுகிறது.

அந்த வகையில், ஒருபால்ச்சேர்க்கையாளர்களது போக்குகள் எதிர்பால்ச் சேர்க்கை உடையவர்களிடம் குழப்பத்தை உண்டு பண்ணிவிடக்கூடாது என்ற நெறியை உருவாக்கவே பண்டைய இந்துச் சட்ட நூல்கள் முயல்கின்றன. இது போன்ற வரையறைகளை உருவாக்கும் முகமாகவே இந்த விஷயம் மட்டும் அல்லாது எல்லா சமூக விஷயங்களிலும் ஹிந்துச் சட்ட நூல்கள் ஒரு வழிகாட்டிகளாக மட்டுமே இருக்கின்றன.

இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.

Series Navigationகர்ம வீரர் காமராசர்!நீங்காத நினைவுகள் – 25