கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி

 

ஆறுமுக‌னேரியின்
அருந்த‌மிழ‌ச் செல்வ‌!
அறிவியல் தமிழின்
“கணினியன் பூங்குன்றன்” நீ

எளிதாய் இனிதாய்
நுட்ப‌ங்க‌ள் ஆயிர‌ம்
விள‌க்கிய‌ அற்புதம்
ம‌ற‌க்க‌ இய‌லுமோ?

அக‌த்திய‌ன் தமிழோ
புராணமாய் போன‌து.
அக‌ப்பட்ட‌ த‌மிழோ
த‌ட‌ம் ம‌றைந்து போன‌து

அறு வகை ம‌த‌மும்
நால் வகைக் கூச்ச‌லும்
ஆழ‌ப் புதைத்த‌பின்
த‌மிழ் என்ன‌ மிச்ச‌ம்?

க‌ணினித் த‌மிழ் இங்கு
க‌ண் திற‌ந்த‌ பின்னே
எட்டாத‌ அறிவும் இங்கு
எட்டுத்தொகை ஆன‌து.

எத்தனை எத்தனை நூல்க‌ள்
எழுதி எழுதி குவித்தாய்!
இணைய‌த்த‌மிழ் நுட்ப‌த்தை
விண்டு விளக்கினாய்.
அதனால்
விண்ணே விழி முட்டி
வீதிக்கு வந்தது.
தமிழனின்
விழித்திரை யெல்லாம்
விண்திரை ஆனது.

குறுந்தகடுகள் கூட‌
குறுந்தொகை சொன்னது.
குவாண்டம் கம்பியூடிங்க் எனும்
“நுண் மாத்திரை” கொண்டு
நுவன்றிடும் கணினிக்காப்பியம்
புதிய நானோ தொல் காப்பியம்!
த‌மிழில் புதிதாய் விண்த‌மிழ் த‌ந்த‌வ‌ன் நீ.

வித்துவான்க‌ளின் விசுப்ப‌ல‌கைக‌ள்
ம‌லையேறிப்போயின‌.
விர‌ல் சொடுக்கும்
விசைப்ப‌ல‌கையில் த‌மிழுக்கு
விசைக‌ள் ஊட்டிய‌வ‌ன் நீ.

புரிப‌டா க‌ணித‌ம் க‌ணினிக்க‌ணித‌ம்.
புலியா?க‌ர‌டியா?க‌வ‌லை வேண்டாம்.
பூலிய‌ன் க‌ணித‌மும் உன் ம‌டியின்
பூனைக்குட்டி ஆன‌து.
புரியும் தமிழில் சொல்லின் ஓவியம்
எத்தனை எத்தனை நீ செதுக்கித்தந்தாய்!

மேஜைப்பொறியோ ம‌டிப்பொறி ஆன‌து.
ம‌டிப்பொறியும் கைப்பிடிக்குள் வ‌ந்த‌து.
வ‌ருங்கால‌த்தில் ம‌ன‌ப்பொறியாகும்.
குவாண்ட‌ம் டெலிபோர்டேஷ‌ன் எனும்
“கூடு விட்டு கூடு”பாயும் க‌னவும்
கை கூடும் கால‌ம் க‌ண்ணின் முன்னே
திரை காட்டும் நேர‌ம் உன‌க்கு
திரை போட்ட‌து யார்?

கோளில் பொறியில் ……
அந்த‌ எண்குண‌த்தானுக்கும்
அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌ம் மிக‌வும் அவ‌ச‌ர‌ம்
க‌ணிப்பொறி ஒன்றின் நுட்ப‌ம் தெரிய‌
க‌ண‌மும் யோசிக்காம‌ல் உன்னை
அழைத்துக்கொண்டானே!
அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!

விண் தமிழ் நுண் தமிழ்
விரி தமிழ் ஆகிட‌
பல நூற்றாண்டுகள்
முன் கொண்டு நிறுத்திட‌
பதை பதைப்பாய் ஓடியவனே!
உனக்கு
ஒரு அரைநூற்றாண்டு
மைல் கல் கூட‌
நடவில்லையே இந்த‌
அரக்கனான இறைவன்!

இந்த மின்னணுத்துடிப்புகளின்
மின்னல் பூக்களில் தான்
நாங்கள் உனக்கு வைக்கும்
மலர் வளையம்!

====================================================

Series Navigationதில்லிகைதாவரம் என் தாகம்