கண்ணகி தேசம்

குமரன்

சில விஷயங்களை கண்ணோடு கண் பார்த்து பேச நமக்கு சற்று கூச்சமாக இருக்கும். சில விஷயங்களை எழுதுவதற்குக் கூட வெட்கமாக இருக்கும். இன்னும் சில விஷயங்கள் எழுதுவதற்கு வெட்கக்கேடாக கூட இருக்கும்…இது மூன்றாவது வகை. சமீபத்தில் தன் பெயருக்கும் பார்க்கும் வேலைக்கும் சற்றும் பொருந்தாத இழிசெயல் புரிந்த ஆசிரியயை பற்றி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் “திறனாய்வு” போல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே…அந்த அசிங்கம் பற்றிய ஆனால் அசுத்தமில்லாத கட்டுரை இது.

“தர்மம்” என்ற சொல் கேலிக்குரியதாகி நெடுநாளாகி விட்டதை நாமறிவோம். ஆசிரியர் தொழிலின் தர்மமும் ஊடக தர்மமும் உளுத்துப் போனதை எடுத்துக் காட்டும் மற்றுமொரு நிகழ்வே சமீபத்தியது. மூன்றாம் தர திரைபடங்களில் கூட இத்தகைய கதையை மையமாக வைக்க யோசிப்பார்கள். ஆனால், ஆதியோடு அந்தமாய் செல்லரித்துப் போன‌ சமூகத்தில் அது நிஜமாக நிகழும் பொழுது அதிர்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை. இருப்பினும் இதன் மூலம் நம் சிந்தனைக்குரியது ஏதெனில், ஏன் எந்த ஒரு ஊடகமுமே “ஆசிரியயைக்கு பாடம் கற்பித்த மாணவிகள்” என்ற ரீதியில் இச்செய்தியை அணுகாமல் ஆசிரியயையின் அசிங்கம் சுற்றியே வளைய வருகின்றன? மக்களை வளைய வரவைக்கின்றன? கீழ்மை தரும் கிளுகிளுப்பு மேன்மையில் கிடைக்காது என்பதாலா?

சாக்கடையில் புரளும் இச்சமூகம் நோக்க வேண்டியதும் பாடம் கற்க வேண்டியதும் அந்த குறிப்பிட்ட சில மாணவிகளின் தைரியமிக்க அகநேர்மையில் அன்றோ? ஒரு மாணவி அந்த ஆசிரியையிடம், “நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் பேசுவது சரியென்று எண்ண வேண்டாம். அவ்வாறு நினைத்துக் கொண்டு மற்ற மாணவிகளிடமும் இது போல் பேசவேண்டாம்” என்கிறார். எத்தனை பக்குவம் வாய்ந்த சிந்தனை? தங்களை மட்டும் யோசிக்காமல், ஒட்டுமொத்த மாணவ சமூகத்தை மனதில் வைத்து பேசும் அகநேர்மையும் ஆசிரியை தரமிழந்தாலும் அவர் அமர்ந்திருக்கும் பணியிடத்தில் மரியாதை வைத்து பேசிய விதமும் நமக்கு எத்தனை நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது? இன்னொரு மாணவியோ, தனக்கு இத்தகைய வழியில் உடன்பாடில்லை என்கிறார். எத்தனை தெளிவு!

அகநேர்மை அருகி வரும் காலமிது. ஆதிகாலம் தொட்டே ஆண்களின் அகநேர்மையின்மை சதவீதம் அதிகம் என்றே அறியப்பட்டிருக்கிறது. ஆனால் அதை சரிசெய்வதை விடுத்து சமீப காலங்களில் பெண்ணியத்தின் போர்வையில் பெண்களும் இச்சதவீதத்திற்கு பலத்த போட்டி ஏற்படுத்துவது போன்ற தோற்றம் விரவியிருக்கிறது. இத்தகைய சூழலில் இப்பெண்களின் பேச்சு நம் அனைவருக்கும் புது தெம்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. மிச்சங்களின் மீதேறி நிற்பதுதானே நம்பிக்கையின் இயல்பும் ஆதாரமும்…

இந்த நம்பிக்கையை முன்னெடுத்துச் சென்று பரப்புவது ஊடகங்களின் தலையாய பணியாகும். ஆனால், ஒரு மாணவன் பஸ் மீது கல்லெறிந்தால் நாள் முழுவதும் செய்தியாக்கும் ஊடகங்கள் இம்மாணவிகள் தங்களின் ஒரே பதிலின் மூலம் விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கும் அசிங்கத்தை புறந்தள்ளி, சமூகத்திற்கு ஒரு மாபெறும் உந்துசக்தியை அளித்ததை கவனியாது செல்வது இங்கு பரவியிருக்கும் அறத்தின் வீழ்ச்சியையே பிரதிபலிக்கிறது. அந்த ஆசிரியையின் பின்னிருக்கும் கதை பற்றி விவாதம் நடத்தும் சேனல்கள், மாணவிகள் காட்டிய பாதையை வைத்து ஏன் விவாதம் ஏதும் நடத்தவில்லை?

பெண்மையின் பக்குவத்தில்தான் சமூகமும் அதன் அங்கமான ஊரும் வீடும் உயிர்வாழ இயலும். இதனை முற்றிலும் உணரா பருவத்திலும் கூட அம்மாணவிகள் காட்டிய சிந்தனை போக்கு, நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறது. பகட்டான பெருநகர‌ கல்லூரிகளிலிருந்து இல்லாமல், தென்மாவட்டத்திலிருக்கும் ஒரு நகராட்சியிலிருந்து இச்சிந்தனை வருவது, இன்னும் நம் சமூகத்தின் சில கிளைகளில் கிருமிகள் படர்ந்திருந்தாலும், மரமும் வேரும் மாற்றச் சிதைவின்றி நிற்கிறது என்று மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. “வீரம்” சார்ந்து நம் தேசத்தில் பலவிருதுகள் வழங்கப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படா தம்மை விட பலம் வாய்ந்த விஷவித்துக்கள் வீரிக்கும் சஞ்சல வலைகளின் முன் காட்டப்படும் அகவீரம் அந்த வீரத்தில் உயரியது. இம்மாணவிகள் அத்தகைய விருதுக்கு உரியவர்களே…

வாசனைத் திரவியத்தின் வீரியத்தின் பின் போகும் பெண் விளம்பர மாதிரிகள் காட்டும் மாயை அல்ல பெண்மை. இந்த மாணவிகளே பெண்களுக்கான முன் மாதிரிகள் என்பதே உண்மை.

Series Navigationதொடுவானம் 220. அதிர்ச்சிமருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி