கண்ணாடியில் தெரிவது யார் முகம்?

நந்தாகுமாரன்

நான் நடக்கும் இடமெங்கும்
உங்கள் கருத்துகளுக்கான
விருப்பக் குறிகளை
சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்
நானும்
ஒரு கன்னிவெடி நிலத்தில் போல
கவனமாகவே கடக்கிறேன்
இடறி விழுந்தாலும்
வாசலுக்கு வெளியே போய்
தப்பித்துக் கொள்கிறேன்
உங்கள் விருப்பப் பெருங்கடலின்
ஒரு துளி இக்குறி என்பதை
என்னைப் போன்றே தான்
நீங்களும் உணர்கின்றீர்களா
உங்கள் நட்பு அழைப்புகள்
வசீகரமானவை எனினும்
அவற்றை உதாசீனப்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டேன்
பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை
பகிர்வுகளையும் பரிந்துரைகளையும் பார்க்கவே மாட்டேன்
மேலும் உங்கள் விளையாட்டுகளுக்கும்
அளவே இல்லாமல் போய்விட்டது
எதிர் கருத்து எதுவும் இருந்தாலும் கூட
நான் உங்களுக்கு மட்டுமாவது
தெரிவிக்கப் போவதில்லை
ஆனாலும்
எதைப் பற்றியும் கருத்துக் கூறுவதில்
உங்களுக்கு உள்ள சுதந்திரத்தை
நான் தடுக்கப் போவதில்லை
பின் தொடரும் உங்கள் நிழலின் கூக்குரல்
கேட்கக் கேட்க
எனக்கு புளித்த தயிரின்
நினைவே வருகிறது
சரி
இப்போது நீங்களும் ஒரு எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்
அப்புறம்
எப்போது உங்கள்
முகப்புத்தகம் முதல் தொகுதி
வெளியிடப் போகிறீர்கள்?

Series Navigationசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வுஜல்லிக்கட்டின் சோக வரலாறு