கனவின் மெய்ப்பாடு

Spread the love

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஒளிக்கீற்றுகள் சில….

அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை.

சில நீர்க்குமிழிகள்….

அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள்

அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்….

தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும்

நெருக்கமானவை போலும் –

அதேசமயம் நான் அறியாதனவாகவும்….

அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக் கொண்டோ

உருவந்தாங்கியோ அருவமாகவோ

நான் அந்தச் சட்டகத்திற்குள் கண்டிப்பாக எங்காவது இருப்பேன்….

கண்டுபிடிக்க முடியவில்லை.

இடைவழி காற்றாலான பாறாங்கல்லால் அடைபட்டிருக் கிறது.

இந்த கணத்தை இப்படியே உறையச்செய்ய வழியில்லை.

கீற்றுகளை zoom செய்ய கருவிகளேதும் கைவசம் இல்லை.

சிறு அசைவில் குலைந்துவிடலாகும் கனவிற்குள்

நான் முழுப்பிரக்ஞையோடுதான் இருக்கிறேன்.

ஆனால் இங்கே உறங்கிக்கொண்டிருக்கும் என்னால்

அந்த நானை அடையாளங்காண இயலவில்லை.

கையறுநிலையில் கண்ணோரம் நீர்கசிய

கலைந்துவிடும் கனவு.

நினைவாகவோ நனவாகவோ

வழியில்லாத நிலையாமையே

வாழ்வுப்பயனாய்.

  •  
Series Navigationமொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி