கர்ணனுக்காக ஒரு கேள்வி !

This entry is part 8 of 12 in the series 13 மார்ச் 2016

pichi_ilango

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு

துரோணர்

 

ஏகலைவனிடம்

கட்டைவிரல்வாங்கிய

காரியவாதி

 

நிழலைவணங்கி

நேர்மையாய் வளர்ந்த

ஏகலைவனுக்குத்

துரோகம்செய்த

துரோகி

 

வேடம்போடத்தெரியாத

வேடனுக்கு

துரோணர் குரு துரோகி

துரோகி குரு

 

அவரிடம் கற்ற

அரசகுமாரர்களில்

தனித்தும்

தினித்துவத்தோடும்

விளங்கினான் அர்ச்சுனன்

 

கற்றதில் கவனமும்

குரு பக்தியும்

நிறைந்தவன் அர்ச்சுனன்

 

குருவிடம் கற்ற

வித்தைகளை அரங்கேற்றும்

நிகழ்வு நடந்தது

மன்னர்கள்

மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்

படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்

முன்னிலையில்

அரங்கேற்றினர் வித்தைகளை

 

அனைவரும் வியக்க

அர்ச்சுனன்

வித்தைகள் காட்டினான்

வில்லால்

 

துரோகத்தின் வடிவம்

துரியோதனன்

அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்

பொறாமையால்

பொங்கிவழிந்தான்

 

அர்ச்சுனனைக் கண்டு

திடீர்மின்னலாய்

கர்ஜித்தான் கர்ணன்

 

வில்லெடுத்து என்னோடு

வித்தைகாட்டென்றான்

 

சபையில் சலசலப்பு

துரியோதனனுக்கு

உள்ளத்தினுள்ளே

கிளுகிளுப்பு

 

கரடிபோல் கர்ணன்

வந்த்தாய் எண்ணி

முகவரி கேட்டார்கள்

 

 

 

 

 

மக்கள் முன்னிலையில்

திறன்காட்டவிடாமல்

தகுதிகேட்டும்

குலம்கேட்டும்

குற்றவாளியாக்கினார்கள்

 

சூரியனுக்குப் பிறந்தவனை

சூதகனுக்குப்பிறந்தவனா?

ஏளனம் செய்தார்கள்

 

தேரோட்டி மகனா?

எங்கள்முன் நிற்பது?

எங்களைப் போருக்கு அழைப்பது?

துள்ளிக்குதித்தார்கள்

எள்ளிநகைத்தார்கள்

கர்ணனை

மனம்குமையவைத்தார்கள்

 

குலம்கேட்ட கொடுமையால்

கர்ணன்

முகவரி சொல்லமுடியாமல்

முகம்வாடிப்போனான்

 

காலம்கருதி

ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்

கேட்டான் துரியோதனன்

 

பிறப்பில் இல்லை பெருமை

செய்யும் செயலில்தான்

உள்ளது பெருமை என்றான்

 

அங்கதேசத்து அரசகுமாரனாக்கி

அறிவித்தான்

அரவணைத்தான் துரியோதனன்

 

 

பகலவன் மறைந்ததால்

அரங்கேற்றம் முடிந்தது

 

எனினும்

கர்ணனுக்காக

தாய்க்குப்பிறக்காத குருவும்

தந்தைக்குப்பிறக்காத

தந்தைமுனிலையில்

பாண்டுக்குப்பிறக்காத

பாண்டவர்களுமா?

கர்ணனைக் குலம்கேட்பது? என

ஒருகேள்வி கேட்டிருந்தால்

என்னபதில் கிடைத்திருக்கும்?

 

(தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,

இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

Series Navigationஇயன்ற வரைசமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *