கற்றுக்குட்டிக் கவிதைகள்

 

எத்தனை காலடிகள்?

 

“டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க

ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி!

 

மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும்

சுட்டிப் பெண். நிற்காத பேச்சு.

 

கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.”

அவள் வீட்டில் கிடைக்காது.

கிடைப்பது அலட்சியமும் அடியும்.

 

குடிகாரத் தகப்பன். அறியாமைத் தாய்.

எப்படி முளைத்தது இந்த செந்தாமரை?

 

“என்ன தர்ஷணிக் குட்டி?”

 

“இன்னைக்கு ஒண்ணு கண்டு பிடிச்சேன்!”

 

“என்ன?”

 

“எங்க வீட்டில இருந்து ஸ்கூலுக்கு நடந்து வர

860 காலடி எடுத்து வைக்கணும்! இன்னக்கி

எண்ணிப் பாத்துட்டேன்!”

 

அவ்வளவா? நான் கூட யோசித்ததில்லை!

கெட்டிக்காரி!

 

பள்ளிக்கூடம் வருவதற்கே இவ்வளவு என்றால்..

இனி இந்த வீட்டிலிருந்து வெளியேறி

வாழ்க்கையில் முன்னேற எத்தனை காலடிகளோ!

************

நான் இப்போது நிற்கும் ஆறு

 

நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு

சின்னது என்றாலும் சிங்காரமானது

ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும்

கழுத்தளவு நீருண்டு, நீந்தலாம்

கரையில் மணல், புல், கோரை, நாணல்.

 

ஊர்மாறி பட்டணம் வர எண்ணியபோது

“அங்கெல்லாம் ஆறு இருக்குமாடா?” என

அறியாத நண்பன் கேட்டான்.

 

அப்போது தெரியாது என்றாலும்,

இருக்கிறது என்று வந்த பின் தெரிந்தது.

 

நிறைந்து ஓடும், நின்று பார்க்கலாம்

கரையில் நின்றால் கதகதக்கும்

போகாதே, போ, கடக்காதே, கட,

என்னும் கம்பங்கள்.

வலம் பார்த்து இடம் பார்த்து வலம் பார்த்து

புகுந்து ஓடலாம்.

 

அது நீரால் ஆனது

இது காரால் ஆனது.

 

 

 

Series Navigation