கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

Spread the love

ஸ்வரூப் மணிகண்டன்

வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம்
வசிக்க இடம் கேட்டு வந்தாய்.
இருக்கும் வார்த்தைகளை
வெளியனுப்பி விட்டு
உன்னை உள்ளிருக்க வைத்தேன்.

உள்ளிருக்கும் உன்னை
பார்த்து விடும் முனைப்பில்
எட்டிப்பார்க்கும் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை
பார்த்திருக்கும் பாக்கியம்
வாய்த்திருக்கிறது எனக்கு.

,..
——————————————————-

என்
இதயத்துடிப்பைக் கேட்டு
நீயறிந்த ரகசியங்கள்
உன்னுடையதும்தான் …

,..
——————————————————-

அலைந்து திரியும்
வெண்மேகங்களின் அழகில்
மயங்கி நிற்கிறது மாலை.
மறையும் வானில்
நிறங்களின் கூடமைக்கும்
சூரியனைப் பாராது
வெண்ணொளியாய் விரிந்து நிற்கும்
நிலவுப்பூ ஒன்று.

,..
——————————————————-

எழுதப்பட்ட கதைகளுக்கு
மத்தியில்
அலைந்து திரிகிறது
எழுதப்படாத
கதையொன்று

,..
——————————————————-

எதிர்க்கரையின் கனவுகளில்
மயங்கித் திரிகிறாயா
எனக் கேட்டாய்.
நதியின் போக்கில்
நீந்தித்திரியும் மீனுக்கு
எந்தக்கரை சேரினும்
காத்திருப்பது மரணமே.

,..
——————————————————-

கண்ணாடியைப் பிரதிபலிக்கும்
கண்ணாடி குறித்து
நான் சொல்லிக்கொண்டிருக்கையில்
உன் உதடு நிறைத்திருந்த
புன்னகை பிரதிபலித்து
ஒரு நட்சத்திரம் தோன்றியது.
பின் அதைப் பிரதிபலித்து
தோன்றிய நட்சத்திரங்களை
எண்ணிமுடிக்கும் பணியை
எனக்களித்துச் சென்றாய்.
ஒரு பொழுதும்
விடியவில்லை
அதன் பின்னர்.

,..
——————————————————-

கதைகள் அனைத்தும்
முடிந்து விட்டதாய்
நீ சொன்ன கதைக்கு
வால் முளைத்தது பற்றி
இன்னும் ஓர் கதை
பாக்கியிருக்கிறது.

Series Navigation