கவிதைகள்

 

ப.அ.ஈ.ஈ.அய்யனார்

யாருக்காகவோ

இரயில் நிலைய

அந்தரத்தில்

சுழன்று கொண்டிருக்கும்

மின்விசிறியில்

இளைப்பாறும்

வண்ணத்துப்பூச்சியென

ஒட்டிக்கொண்டேன்

நடைபாதை பிணமாய்…

 

*********

 

 

தினம் புகும்

ஒளிச் சிதறல்கள்

சன்னலின் வழியே

படுக்கையறையை

ஊடுருவி நீந்தும் போது

முகத்தை மறைத்து

பூமாலைகள் ஏந்தியிருந்தன

 

உலர்கருவாடாய்

சுருங்கிப் போன

அப்பச்சியின் முகத்தில்

நெற்றிக் காசில்

மொய்த்தன

ஈக்கூட்டங்கள்

 

இரு கண்ணிலும்

அப்பிக் கொண்ட

வெயில்சந்தனம்

ஊர் பரப்பி

ஒப்பாரிக் கண்ணீரிலும்

கலந்து விட்ட விடியல்

சோகத்தின்

சாம்பலாய்

தூவுகிறது

 

************

 

 

 

 

குழாயடியில்

நிதம் சந்தித்த

பாசிச் செடிகளில்

இன்று மட்டும்

புதிதாக

ஒட்டியிருந்தன

அவள்

கூந்தல்

உதிர்த்து விட்ட

பூவிதழ்கள்‌‌…

 

*****************

 

 

தோப்பு மரத்தின்

மாந் துவயலும்

பழய சம்பா சோறும்

அலைந்துறும்

தூக்குச்சட்டியோடு

நடவுக்கு போகுமவள்

கதிரவனின் செஞ்சுடரை

கையெழுப்பியும்

ஒற்றைக்கல்

பாறையில்

பூத்துக் கிடக்கும்

திருநீற்றை

நிறை நெற்றியில்

பதித்துக் கொண்டு

நடுங்கும் கரு மேனியோடு

போகிற பொன்னழகிக்கு

துணையாகிறது

செஞ்சுடரும்

ஒத்தயடிப்பாதையும்…

 

*****************

 

 

சடை விரித்தாடும்

ஆலம் விழுதில்

தொங்கிக் கொண்டேன்

மீச்சிறு வௌவால்களாய்

 

யாரும் விழித்திராத

நடைபயணமில்லாத

முச்சந்தியில்

பார்வையற்ற இரவில்

தீப் பொறிகளாய்

மின்மினிகள்

வெளிச்சம் பரப்பின

 

தடைதட்டிய கால்களை

நிர்வாண உடல்களை

நீந்திச் செல்கிறது

அந்தி

ஒருபக்கம்

 

பழம் உதிர்க்கும்

கொப்புக் கிளைகள்

நனைக்கிறது

மறுபக்கம்…

 

*************************

 

 

 

 

 

 

வாழை நாரோடு

காய்ந்தன

அப்பாவின் பூவிரல்கள்…

 

கதவு திறக்கையில்

தரை தட்டின

அணைக்கும் திரைச்சீலைகள்…

 

மிதப்பு அலைகளாக

வந்தன நெகிழிப் பைகள்

ஊர் திரும்பும் கோடமழை…

 

***********************

 

Series Navigationபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்