கவிதைகள்

Spread the love

ஏ.நஸ்புள்ளாஹ்
மழை மனசு

நேற்று முழுவதும்
சூரியன் சூடேற்றிப் போடவே
குளிரான பழைய நாள் பற்றியதான
வண்ணத்துப் பூச்சி மனசு
படபடப்பாயிருந்தது
சில நேரங்களில்
மழை நாட்களில்
சும்மா வாய்க்கு வந்தபடி
காலத்தை திட்டி திர்த்தது பற்றி
இப்போது
உடம்பு அம்மணமாக
வெட்கப்பட்டுக் கொள்கிறது
யன்னலருகே நின்று
குளிரான பல நாட்களில்
காலைப் பனியை மிக அழகாக
ரசித்ததுண்டு மனசு பூரித்துப்போக
விழுந்து கிடக்கும்
ஒரு சூரியன் நாளைக்கூட
விரும்பும்படியான ஒப்புதல்
அளிக்கவில்லை மனசு.

 

 

 

வலி
துயரும் முனகலொன்றை
இன்று அவிழ்த்தபடி
மனசு அழைத்துப் போகிறது
தெருவெங்கும்
முதன் முதலாய்
மண்டியிட்டழுத மனசுடன்
இன்றுதான் நான்
பின்னப்பட்டிருந்தேன்.
நடுநிசிக் காடுகளின்
நிறங்களை ஒத்த துயரும்
உதடுகளின் முத்தங்களை
கொலை செய்வதற்கான
துயரின் திசையுமாக
இன்னும்
வாய்காலென்றில் தனித்துக்கிடக்கின்ற
பழைய தோணியொன்றுமாய்
மனசு
பல்லாயிரம் குற்றச்சாட்டுக்களை
முன் வைத்து காணமற் போகிறது
இப்போது
எனக்குள் நள்ளிரவுச் சூரியன்
தயார் செய்யப்படுகிறது
தூங்காத கோடை இரவில்.

 

 

அந்தப்புறத்து வாசிகள்
நீ பூமிப் பாத்திரத்தில்
இலட்சம் கனவுகளுடன்
உன்னுடைய சுவையைக் கொண்டாடுகிறாய்
இன்னுமொருவனின் மனைவியாக
அவள் ஒரு குழந்தையின் தாயாக
அவள் முகவரி எழுதப்பட்டு
தெருவெங்கும்
அவள் யார் என்பதும்
அவள் யாருக்கு ஆடைகளைக் கழற்றி
முத்தங்களை பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்பதும்
நீ அறிந்திருக்கிக்கிறாய் எனினும்
மூன்றாம் சாமத்தில் உணர்ச்சி கிரணங்கள்
உன்னில் முதலுடை நெய்கின்றன
அவளின் காமப்பாலை அருந்தி
அவள் கணவனின் ஆண்குறியில்
அறைந்து விட்டுப் போகின்றாய்
காலம் விடியலை பிரசவிக்க
கதை தெருவெங்கும் நாற்றமெடுக்கிறது
நாகங்கள் சில
மற்றும் ஒரு மாலையில் தேநீர்
அருந்தப் போகின்றன
கனமான விசாரனை மொழியை அள்ளிக் கொண்டு.
அவள் கணவனுக்கு தெரியப் போவதில்லை
தன் வீட்டுக்குள் இருக்கும்
நாகப் புத்து பற்றியதான கதை.

ஏ.நஸ்புள்ளாஹ்

 

 

 

Series Navigationகூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…நாகூர் புறா.