கவிதை

Spread the love

கோசின்ரா

வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன்

மேற்கு திரிபுராவிலிருக்கும் கமலா சாகரின் மா காளி கோவில்
முன்னால் பெரிய சதுர  குளம்
குளத்தின் இரண்டு பக்கத்தில்
இரண்டு ஆள் உயர இரும்பு வேலிகள் போகின்றன
வேலிக்கு அந்தப்பக்கம் வயலில் வேலை செய்கிறார்கள்
அழைத்து சென்றவன் சொன்னான்
அவர்கள் பங்களாதேசத்தவர்கள்
வேலிக்குப்பால் நின்றிருந்த மனிதன்
என்னை வேடிக்கை பார்க்கின்றான் நான் அவனை பார்ப்பதைப் போல
பார்க்குமளவுக்கு எதுவுமில்லை இருவரிடமும்
வேடிக்கை பார்த்தவனின் தாத்தா வாழும் பொது
அவன் நிலத்திற்கு பெயர் இந்தியா
அவன் அப்பா வளரும் போது அதன் பெயர் பாக்கிஸ்தான்
இப்பொழுது அந்த நிலத்திற்கு  பங்களாதேசம்
பெயர் மாற்றங்கள் மதிப்பீடுகளை மாற்றுகிறது
சில மதிப்பீடுகள் எதிர் திசையில் வைக்கிறது
காளி கோவிலில் இருக்கும் போது
பங்களாதேசத்திலிருந்து அல்லாவூ அக்பர்
காற்றில் மிதந்து வருகிறது
பங்களாதேச மரங்களின் காற்று என்னை தீண்டுகிறது
மரங்கள் நிலங்கள் ஆடு மாடுகள் விதைகளுக்கு தேசமில்லை
பறவைகள் சட்டென்று ஒரு தேசத்திலிருந்து
இன்னொரு தேசத்திற்கு தாவுகிறது
வெறும் பெயர்களை பிடித்துக்கொண்டு
எத்தனை மனிதர்களை இழந்திருக்கின்றோம்
எத்தனை சாவுகளுக்கு அழுதிருக்கிறோம்
பங்களாதேச காரனின் பசியும்
இந்தியனின் பசியும் ஒரே சித்திரத்தால் ஆனது
பாகிஸ்தான் காரனின் காயமும்
ஆப்கானிஸ்தான்காரனின் காயங்களும்
ஒரே மருந்தால் குணமாகிறது
பெயர்கள் நம்மை பின்னிக்கொண்டிருக்கிறது ஒன்றிலிருந்து ஒன்றுக்கு
மனிதனென்பது பெயராக  இருக்க விடுவதில்லை
நம்மோடிருக்கும் எல்லா வெறித்தனங்களும்.

————————————————————
ஊர்வலம்

உங்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான்
ஒலி உமிழும் வார்த்தைகளுக்கு காத்திருங்கள்
கடந்து போகும் வார்த்தையின் சாயலில்
தந்தையை தாயை தேடுங்கள்
இறந்து போன நண்பனின் வார்த்தை
நண்பனைபோல தோற்றமளிக்காத
அழகில்லாத கறுப்பாக இருக்கும் ஒருவரிடமிருந்து
தோழமையாக வெளிப்படலாம்
யாராலும் யூகிக்க முடியாத இடத்திலிருந்து ஒரு வார்த்தை
இருட்டின் தடங்களில் தேவைப்படும்
வெளிச்சத்தை சுமந்த ஒரு வார்த்தை
பறவையாய் மேகமாய் மிதக்க வைக்கும் ஒரு வார்த்தை
பாதைகளை கூரைகளை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை
கனவுகளில் காதலில் மிதந்து சென்ற ஒரு வார்த்தை
முத்தங்கள் கருணை அன்பு மனிதத்தை எடுத்துச் செல்லும் வார்த்தை
நடை பாதை வாசிகளிடமிருந்து வெளிப்படலாம்
வெகு நேரமாய் உங்களோடு பயணிக்கும் ஒருவரிடமிருந்தும்
உப்பற்ற பொழுதுகளில் சுவை சேர்க்கும்படியாக
நீந்தி வந்து உங்களில்  கரையேறும்
அமைதியை சுமந்து புத்தனைப் போல புன்முறுவல் பூக்கும் வார்த்தை
எப்போதேனும் தேவைப்படலாம்
எல்லா வார்த்தைகளுக்கும் பற்கள் இருக்காது
பல்லில்லாத வார்த்தைகள் மழலைகள் போல
புன்னகை சுமந்து பால்கவிச்சி யடிக்கும்
அழுகை சுமந்த வார்த்தைகளின் உப்பு
தற்கொலை செய்தவனின் கடைசி மெளனம்
எல்லாமே வார்த்தையில் ஒளிந்துக்கொண்டு
மனிதர்களை தேடி அலைகின்றன
இதயத்தின் பால்கனியை திறந்துவையுங்கள்
காற்றின் பாதையில் வார்த்தைகளின் ஊர்வலம்.

Series Navigationசும்மா கிடைத்ததா சுதந்திரம்?குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1