காதல் அன்றும் இன்றும்

ஆயிரம் முகில்கள்
கடக்கும் – ஆனால்
ஒன்றுதான் மழையை
இறக்கும்

ஆயிரம் பார்வைகள்
தொடுக்கும் – ஆனால்
ஒன்றுதான் காதலைப்
பதிக்கும்

சிக்கி முக்கியாய் உரசும்
அந்தத் தீப்பொறியில்
காதல் உயிர்க்கும்

மின்னல் ஒன்று
சொடுக்கும்
காதல் மின்சாரம்
உடம்பெங்கும் நிறைக்கும்

ஆயிரங் காலத்துப் பயிராய்க்
காதல் கழனியெலாம்
முளைக்கட்டிச் செழிக்கும்

இது
அன்றையக் காதல்

***********

ஒரு குறுஞ் செய்தியில்
பிறக்கும்
மறு குறுஞ் செய்தியில்
இறக்கும்

இது
இன்றையக் காதல்

அமீதாம்மாள்

Series Navigation(வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)மூடிய விழிகள்