காலமாகாத கனவுகள்

Spread the love

__ ரமணி

இரவின் மிச்சம் இன்னும்
ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின்
மயங்கிக் கொண்டிருக்கிறது.

எது எரிந்து
இப்படி சாம்பலாய்ப்
பூத்துக்கொண்டிருக்கிறது?

கண்களுக்குள் இன்னும்
கனவு முட்டைகள்
உடையாதிருக்கின்றன.

முட்டைகள்!
துராக்ருத முட்டைகள்!

ஒரு கோப்பை
காப்பித்திரவத்தால்
அவற்றைக் கலைத்துவிடமுடியாது!

பகலின் நெரிசலில்
வாழ்க்கை வர்த்தகங்கள்
சிதறடித்து விரட்ட
எங்கோ மாயமறைவில்
ஓடி ஒளிந்தாலும்
இருளின் பதுங்கு குழிக்குள்
எப்படியோ மீண்டும்
சூல்கொண்டுவிடும்
ஒவ்வொரு பொழுதிலும்
மனக்கண்ணாடி உடைந்து
அவஸ்தையாய்
உயிர்த்திரவம் பெருகும்.

Series Navigationசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்வேறு தளத்தில் என் நாடகம்