கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்

 

 

 

 

கருப்புக் கூட்டில்

இருட்டில் கிடக்கிறது

அத்தாவின் மூக்குக்கண்ணாடி

 

அவர் சுவாசத்தைத்

தொலைத்தது காற்று

 

அத்தா மேசையில்

புத்தகத்துக்குள்

மல்லாந்து கிடக்கும்

மூச்சடங்கிய கடிகாரம்

பக்க அடையாளமோ?

 

பக்கம் 73

கடைசிச் சொற்கள்

‘போய் வரவா?’

 

கிழிக்க வேண்டிய தாளுடன்

அத்தாவின் நாட்காட்டி

அதில் அத்தாவின் எழுத்து

‘பாட்டரி மாத்தணும்’

 

அத்தாவைத்

தொட்டுத் தொட்டு வாழ்ந்த

கைத்துண்டு, சாவிக் கொத்து

கைபனியன், சட்டை

சோப்பு, சீப்பு, ப்ரஷ்

ரேசர், வார், நகவெட்டி

எல்லாமும்

அந்த அலமாரியின்

அடித் தட்டில்

‘என்ன பேசிக் கொள்ளும்’

 

இரவெல்லாம் மழை

நிர்மல காலை வானம்

கழுவிய பாதைகள், புற்கள்

அத்தாவின் தோட்டம்

அத்தனையிலும் கண்ணீர் ஈரம்

 

அத்தாவின் கைத்தடியை

பாத்திரம் கழுவும் ‘சிட்டு’ கேட்டாள்

அவள் அப்பாவுக்காம்

 

பால் கறக்கும் கோனார்

செருப்பைக் கேட்டார்

 

மளிகைக் கடை செல்வராஜுக்கு

இடுப்பு வார் வேண்டுமாம்

 

டேபிள் சேர்

இனி பேரன் பஷீருக்காம்

 

அப்பாவின் நண்பர் கொத்தனார்

மீதியை எடுத்துக் கொண்டார்

 

நிலமாகக் கிடக்கிறார் அத்தா

கீறிக்கீறி உழுகிறோம்

உண்கிறோம்.

 

அமீதாம்மாள்

 

Series Navigationபார்வதியம்மாதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]