குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23

This entry is part 30 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

ஜோதிர்லதா கிரிஜா

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் போட்டுக்கொள்ள மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில், ரமாவோடு தொலைபேசினான். திரு¦நெல்வேலியிலிருந்து தயாவின் ராஜிநாமாக் கடிதம் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக அவள் தெரிவித்ததும் அவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. ரமாவிடம் எதுவுமே பேசாமல் தொடர்பைத் துண்டித்தான். கண்கள் சிவக்க வீடு திரும்பினான்.

. . . நான்கு நாள்கள் கழித்து ரமணி ஈசுவரனின் வீட்டுக்கு வந்தான். திருமணத்தின் போது தருவதாக வாக்களித்திருந்த முப்பதாயிரம் ரூபாய்களை அவன் ஈசுவரனிடம் கொடுக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்துத் தருவதாகச் சொல்லியிருந்தான். அதைக் கொடுக்கத்தான் அவன் வந்துள்ளதாக எண்ணி அகமகிழ்ந்து போன ஈசுவரன், “இந்த டி.வி., ·ப்ரிட்ஜ், மிக்சி எல்லாம் எனக்கு அவசரமாத் தேவைப்பட்றது. இப்ப எடுத்துட்டுப் போயிட்டு அப்புறமாக் கொண்டுவந்து போட்டுர்றேன்,” என்றவாறு உடன் வந்திருந்த கூலியாட்களைக் கூப்பிட்டு அவற்றை அவன் டெம்போவில் ஏற்றப் பணித்த போது வாயடைத்து நின்றார்.

வந்ததற்கு ஒரு தம்ளர் காப்பி மட்டும் குடித்துவிட்டு அவன் கிளம்பிப்போனான். அவன் தலை மறைந்ததும் சாம்பவி விழுந்து விழுந்து சிரித்தாள். “உங்க ரெண்டு பேருக்கும் ஆனாலும் ஆசை! இப்ப பாரு. நல்லா பட்டை நாமம் பழுக்கச் சாத்திட்டான். முப்பதாயிரமும் வரப் போறதில்லே, தயாவும் அவனோட சந்தோஷமா இருக்கப் போறதில்லே.” – தயாவைப் பற்றிச் சொன்ன பின் அவள் குரல் தடுமாறி நொறுங்கிப் போய் அழலானாள்.

ஈசுவரனுக்கு அசடு தட்டினாலும், சமாளித்துக்கொண்டு, “அவ சந்தோஷமா இருக்காளா இல்லையாங்கிறதை நீதான் ரொம்பக் கண்டயாக்கும்?” என்றார் அதட்டலாக.

“மனசுக்குப் பிடிச்சவனை இழந்துட்டு, ரவுடி மாதிரியான ஆளுன்னு அவளே சொன்ன ஒருத்தனோட எப்படி சந்தோஷமா வாழ முடியும்? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேணும்?”
“சரி, சரி, வாயை மூடு. மேல ஏதாவது பேசினா, அறைஞ்சுடுவேன். கன்னம் பழுத்துடும்.”

“அடிக்கிறதைத் தவிர, உங்களுக்கு வேற என்ன தெரியும்?”

அவளை நோக்கிப் பாய்ந்த அவரது ஓங்கிய கையைப் பிடித்துத் தடுத்த ரேவதி, “போடி அந்தண்டை!” என்று மகளை விரட்டினாள்.

பின்னர், “ஏன்னா? தயா கிட்டேர்ந்து லெட்டரே வரல்லியே?” என்றாள்.

“எல்லாம் எழுதுவாடி. அதான் மாப்பிள்ளை சொன்னாரே, அவ சவுக்கியமா யிருக்கான்னு?”

“பெரிசா வியாதின்னு வந்து படுத்துக்காம இருக்கிற வரைக்கும் சவுக்கியமா இருக்கிறதாச் சொல்லிக்கலாந்தான். ஆனா சந்தோஷமா இருக்கான்னு சொல்ல முடியுமா?” என்ற சாம்பவி இடக்காய்ச் சிரித்தாள்.

. .. . திருநெல்வேலியில் தயாவின் வாழ்க்கை ஒரு நரகத்துக்கு ஈடான கசப்புடனும் கொடுமையுடனும் நடந்துகொண்டிருந்தது. அவளது முதல் இரவின்போது நிகழ்ந்த சில அச்சேற்றத் தகாதவை.

“வா, வா. உக்காரு. . . என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தகராறு பண்ணினியா?”

தயாவுக்குத் தொண்டை வறண்டது. பேசாமல் இருந்தாள். ‘இனி வாணாள் முழுவதும் இவனோடு – பிடிக்கிறதோ, இல்லையோ – வாழ்ந்தாகவேண்டும். இவனுக்குக் குழந்தைகள் பெற்றுத்தந்தாக வெண்டும். இவனை முறைத்துக்கொள்ளுவதில் எந்த லாபமும் இல்லை.’

“இல்லியே? தகராறு எதுவும் பண்ணல்லே.”

அவன் திருப்தி யடைந்தவன் போல் தெரிந்தான். ஒரு கணவன் என்பதை விடவும், ஓர் ஆண்பிள்ளை என்று அவன் தன்னைப் புலப்படுத்திக்கொண்டதே அதிகமாக இருந்தது.

“நான் ஒண்ணை அடையணும்னு நெனச்சேன்னா, அதை அடையாம விட்டதே இல்லே. எப்படியாவது அடைஞ்சுடுவேன். உன்னை மயிலாப்பூர்க் கோவில்ல பாத்ததும் நீதான் என் பொண்டாட்டின்னு உடனேயே முடிவு பண்ணிட்டேன். நடத்திண்டுட்டேன்!” – இவ்வாறு சொல்லிக்கொண்டே விரல் சொடுக்கினான்.

“இத பாரு. நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. தெரியறதா? உண்மையைச் சொன்னா மன்னிப்பு உண்டு. பொய் சொன்னா நான் மிருகமாயிடுவேன்.”.

“. . . . . . . . .”

“எனக்கு உன்னைப் பத்தின எல்லாமும் தெரியும். ஒரு பயத்தில தானே தகராறு எதுவும் பண்ணல்லேன்னு இப்ப சொன்னே?”

அவளது தொண்டைக் குமிழ் ஏறி இறங்கியது.

“நான் உன்னைப் பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு மத்தாநாளு பார்க்லே உக்காந்துண்டு எவனோடவோ சரசமாடிண்டு இருந்தியே? யாரவன்?”

‘சரசமாடிண்டு இருந்தியே’ என்னும் சொற்கள் அவளை அருவருப்பில் ஆழ்த்தின. அதற்குப் பதிலாக, ‘பேசிண்டு இருந்தியே’ என்று நாகரிகமாய்க் கேட்டிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. தோன்றிய மறு கணமே, ‘இவனிடம் போய் நாகரிகத்தை எதிர்பார்ப்பது முட்டள்தனமல்லவா?’ என்றும் யோசித்தாள்.

“வாயில என்ன கொழுக்கட்டையா? பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? சும்மா ஒரு சிநேகிதன் னெல்லாம் கப்சா விடாதே. பார்க்ல போய் இடிச்ண்டு உக்காந்து ஆணும் பொண்ணும் பேசிட்டிருந்தா அதுக்குப் பேரு வெறும் ·ப்ரண்ட்ஷிப் இல்லே.”

தயாவுக்கு உடனே கோபம் வந்தது. சங்கரன் அப்படிப்பட்டவன் அல்லன் என்பதாலும், வேண்டுமென்றே உராய்வது, இடிப்பது போன்ற அற்பச் செயல்களை அவன் செய்ததே இல்லை என்பதாலும் தயா வெகுண்டாள். இருந்தாலும், ‘இவனிடம் போய் என் கோபத்தை வெளிப்படுத்துவதால் எந்த லாபமும் இல்லை. அடிதான் கிடைக்கும்’ என்று நினைத்தாள்.

எனவே, “நாங்க இடிச்சுண்டெல்லாம் உக்காந்திருக்கல்லே. அவர் அப்படிப்பட்ட ஆளில்லே!” என்றாள் சன்னமாக. எரிச்சலை அடக்கியதில் குரல் நடுங்கியது.

“அட! ரொம்பத்தான் பரிஞ்சுண்டு வறியே அவனுக்கு! தற்செயலா நான் அந்தப்பக்கம் வந்தேன். உங்க ரெண்டு பேரைரயும் பாத்ததும் எனக்கு ரத்தம் கொதிச்சுது. என்னோட வருங்கால மனைவி எவனோடவோ உக்காந்துண்டு சரசமாடிண்டு இருக்காளேன்னு!’

“அய்யோ! அந்த அசிங்கம் பிடிச்ச வார்த்தையைச் சொல்லாதங்கோ, தயவு செஞ்சு.”

“ஏன்? உள்ளதைச் சொன்னா உடம்பு எரியுதோ? நீங்க ரெண்டு பேரும் உக்காந்திண்டிருந்த தோரணை யிலேர்ந்தே தெரிஞ்சுதேடி உங்க உறவு? அவன் ஆஸ்பத்திரியிலதானே இருக்கான் இப்ப?”

அவள் திடுக்கிட்டுப் போய்ப் பாதிக்கு மேல் புரிந்துகொண்ட அதிர்ச்சியுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.

“என்னடி அப்படிப் பாக்கறே? அவனுக்கும் உனக்கும் இருந்த உறவை என்னால சகிச்சுக்க முடியல்லே. நான் தான் ஆள் வெச்சு அவனை அடிச்சுப் போட்டேன். எதுக்கு இப்ப இதை உங்கிட்ட சொல்றேன்னா, நான் எதுக்கும் அஞ்சாதவன். எனக்கு இடைஞ்சல் பண்றவா யாரா யிருந்தாலும் அவாள அப்புறப்படுத்திட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். எனக்கு மெட்ராஸ்ல கூட அடியாள்கள் இருக்காளாக்கும்! .. .. .. உங்க அப்பா கிட்ட முப்பதாயிரம் குடுக்கறேன்னு சொன்னேனேனில்ல? அதை நான் தரப் போறதில்லே. உங்க வீட்டுல வாங்கிப் போட்டிருந்த சாமான்களை யெல்லாம் கூடத் திருப்பி எடுத்துட்டு வந்துடப் போறேன். உங்க அப்பா தகராறு பண்ணினா, ‘எவனோ கடிச்சு உமிஞ்ச எச்சிலை என் தலையில கட்டி யிருக்கீறே, அதுக்கு நான் உமக்குப் பணம் வேற தரணுமா’ன்னு கேட்டு அவர் மானத்தை எடுத்துடுவேன்!’
சங்கரனை அடித்துப் போட ரமணிதான் ஆள் அனுப்பினான் என்பதை யறிந்து தயா வெலவெலத்துப் போனாள். தன்னுள் கிளர்ந்த ஆத்திரத்தை அவளால் காட்டிக்கொள்ள முடியவில்லை. ரமணி எப்படிப்பட்டவன் என்பது புலப்பட்டுவிட்ட நிலையில் தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவன் குற்றம் காணக் கூடியவன் என்பதால் இனித் தன் வாழ்க்கை தினமும் ஒரு சூதாட்டமாகவோ அல்லது போராட்டமாகவோதான் இருக்கப் போகிறது என்கிற உண்மை அவள் வயிற்றில் அமிலம் ஊறச் செய்தது. சங்கரனை நினைத்து அவள் தன்னையும் மீறிக் கண்ணீர் சிந்தினாள்.

“எதுக்குடி அழறே இப்ப? மெட்ராஸ் பக்கம் போறப்ப அவனைச் சந்திச்சே, தொலைச்சுடுவேன், தொலைச்சு! உன்னை வேவு பாக்கறதுக் கெல்லாம் அங்கே ஆள் இருக்கு எனக்கு. தெரிஞ்சுதா? .. .. நான் தான் அவனை ஆள் வெச்சு அடிச்சிருப்பேன்னு நீ கொஞ்சங்கூட நினைச்சே பாக்கல்லேல்லே?”

“.. .. ..”

“என்னடி பேசாம இருக்கே? பதில் சொல்லு.”

“ஆமா.”

“நீ கொஞ்சம் கூட நினைச்சே பாக்காத இன்னும் எத்தனையோ காரியங்களை யெல்லம் நான் செய்யப் போறேன். நாளாக, நாளாக உனக்குத் தெரியும். .. ஆமா? நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, உள்ளது உள்ளபடி பதில் சொல்லுவியா?”

“கே கே கேளுங்கோ.”
“ஏண்டி உனக்கு வாய் திக்குறது? இதுதான் உனக்கு ·பர்ஸ்ட் நைட்டா, இல்லாட்டி இதுக்கு முன்னாடியே அவனோட நடந்துடுத்த¡?”

“அய்யோ!”

“என்னடி என்னமோ அய்யோ குய்யோன்றே? சத்தமா பதில் சொல்லிட்டா உண்மை பொய்யாயிடுமா? உண்மையைச் சொல்லு. நான் ஒண்ணும் உன்னை அதுக்காக அடிச்சுக் கிடிச்சுப் பண்ண மாட்டேன். சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேக்கறேன். நீ ஒண்ணும் என் வாழ்க்கையிலே முதல் பொண்ணு இல்லே. எனக்கு ஒரு நியாயம், உனக்கு ஒரு நியாயமா? அதனால பயப்பாடாம பதில் சொல்லு.”

“நீங்க அடிச்சாலும், அடிக்காட்டாலும் என்னோட பதில் அப்படி யெல்லாம் எதுவும் நடக்கல்லேன்றதுதான். எந்தக் கோவிலுக்கு வேணும்னாலும் வந்து சத்தியம் பண்ணத் தயாரா யிருக்கேன். அவரோட சுண்டு விரல் கூட என் மேல பட்டதில்லே.”

“ஓ! சுண்டு விரல் பட்டதில்லையா?” என்று கேட்டுவிட்டு அவன் ஆபாசமாய்த் தொடர்ந்த போது தயா தன் காதுகளைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள்.

“இத பாரு. இந்த நீலிக் கண்ணீர் விடுற வேலையெல்லாம் ஏங்கிட்ட வேணாம். நீ ஒரு எச்சில் பண்டம். அதனால.. .. “

“என்னையும் அவரையும் பார்க்ல பாத்தேளோல்லியோ? அதுக்கு அப்புறமும் ஏன் என்னைக் கலியணம் பண்ணிண்டேள்?”

“அதுதாண்டி ரமணி! அதுதான் ரமணி! எச்சிலோ, துப்பலோ, நான் ஆசைப்பட்டதை ஆண்டாகணும் எனக்கு. இங்க பாரு. இன்னொண்ணும் சொல்றேன், கேட்டுக்கோ. உன்னோட அந்தப் பழைய ஆளு பத்தி நான் கேக்கறப்பல்லாம், ‘அவர் இவர்’னு சொல்றே. எனக்குப் பிடிக்கல்லே. எவனுக்கோ அவர் என்னடி வேண்டியிருக்கு அவர்? இனிமே அவர்னு சொன்னியோ, பேத்துடுவேன், பேத்து!”

தயாவுக்கு ஒன்று மிகத் தெளிவாய்ப் புரிந்தது. ‘இவன் அடிக்கடி சங்கரைப் பற்றி அசிங்கம் அசிங்கமாய்க் கேள்விகள் கேட்பான். என்னைத் துன்புறுத்துவது மட்டுமே இவனது நோக்கம். முப்பதாயிரம் கொடுப்பதாய்ச் சொன்னதைச் செய்யாமல் இருப்பதற்கு இந்த என் காதல் விவகாரம் இவனுக்கு ஒரு துருப்புச் சீட்டு! இதை வைத்தே அவன் அப்பாவின் வாயை அடைத்துவிடுவான். சாம்பவிக்கும் சேர்த்து விடியப் போகிறது என்று எண்ணி அவர்கள் கட்டிய மனக்கோட்டை இடியத்தான் போகிறது. அவர்கள் வாய்களில் இப்போது மண்!’

“இப்ப கூட நீ அவனைப் பத்தித்தானே யோசிச்ட்டிருக்கே?”

அவள் காதுகளை மறுபடியும் பொத்திக்கொண்டாள்: ‘கடவுளே! இந்தச் சித்திரவதைகளிலிருந்து நான் எப்படித் தப்பப் போகிறேன்? உயிரை மாய்த்துக்கொள்ளுவது ஒன்றுதான் ஒரே வழியாக இருக்கும் போல் இருக்கிறதே?..’

“என்னடி யோசிக்கிறே?”

“ஒண்ணும் இல்லே.”

“சரி. போகட்டும். இதுதான் உனக்கு ·ப்ர்ஸ்ட் நைட்டான்னு கேட்டேன்.”

“சீ!”

“ஏய்! சீ தூன்னா நம்பிடுவேனா? .. சரி, விடு. நீ என்னிக்கும் நெஜத்தைச் சொல்லப் போறதில்லே. அப்புறம் இன்னொண்ணு. நீ யாருக்கும் கடுதாசி எழுதக்கூடாது. உங்கப்பா அம்மாவுக்கு மட்டும் வேணா எழுது. ஆனா எங்கிட்ட குடுத்துடணும். நான்தான் போஸ்ட் பண்ணுவேன். தெரிஞ்சுதா?”

“சரி.”

அவள் மனத்தை எந்த அளவுக்கு அதிகமாய்த் துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்குச் செய்துவிட்டு அவன் வாயைப் பிளந்துகொண்டு தூங்கிப் போனான். ஆனால், அவளாலோ, கண்ணைக் கொட்டக்கூட முடியவில்லை. அழுதபடியே படுத்திருந்தாள்.

சங்கரனை மணந்து கொண்டிருந்தால் இப்படியெல்லாம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டிருப்பானா என்று நினைத்தாள். கண்ணியமும் மென்மையும் அன்பும் நிறைந்த சங்கரனோடு தன் மிருகக் கணவனை ஒப்பிட்டு நினைப்பது கூடப் பாவம் என்று உடனே தன்னைத் திருத்திக் கொண்டாள். சங்கரனின் கனிவு மிக்க பெரிய விழிகளும், எப்போதும் சிரிக்கும் உதடுகளும், மென்மையான குரலும், அவளைத் தவறியும் தொட்டுப் பேசாத கண்ணியமும் அவளை வதைக்கலாயின.

‘எப்படியாவது இங்கிருந்து தப்பிவிட வேண்டும். ஆனால் அது முடியுமா? தப்ப முடிந்தாலும் எங்கே போவது? வேலையையும் விட்டாகிவிட்டது. அப்பா துரத்தி யடிப்பார். சங்கரின் எண்ணம், நிலை தெரியாமல் அங்கு போக முடியாது. சாவு ஒன்றுதான் அப்படியானால் வழியா? .. சே! எதற்குச் சாவது? தற்கொலை செய்துகொண்டாலும், எஞ்சியுள்ள ஆயுள் காலத்துகும் பேயாய் அலைவார்களாமே? அந்த அலைச்சலின் போது தாங்கள் தவிர்த்துவிட்டதாய் நினைத்துக்கொண்ட துன்பத்தைவிடவும் அதிகமான துன்பத்தை அவர்கள் மீண்டும் அனுபவிப்பார்களாமே? இது உண்மையாய் இருக்குமா, அல்லது மூட நினைப்பா? ஆனாலும், தற்கொலை என்பது சரியான தீர்வு அல்லவே!.. .. கடவுளே! நீதான் எனக்கு அப்படியெல்லாம் முடிவு செய்யாதிருக்க மன உறுதியைத் தரவேண்டும்!’

.. .. .. மறு நாள் பிற்பகலில் மாமியார் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவள் மெல்லக் கணவனின் அறைக்குச் சென்று ஒரு நோட்டம் விட்டாள். அங்கிருந்த அலமாரியில் சாவி செருகி இருந்தது. பூட்ட மறந்து போயிருக்கிறான் என்று எண்ணியவாறு, அவள் அலமாரியைத் திறந்தாள். நிறைய உள்நாட்டுக் கடிதத் தாள்கள் (inland letter cards), அஞ்சல் அட்டைகள், வெற்று உறைகள் ஆகியவை அதன் ஒரு தட்டில் கிடந்தன. பக்கத்திலேயே ஒரு சிறிய மரப் பெட்டியில் வெவ்வேறு மதிப்புகளில் அஞ்சல் பில்லைகள் இருந்தன.

அந்தப் பெரிய பங்களாவில் அவளுக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அது ஒன்றுதான் அவளுடைய நண்பன். தனிமையில், அதன் அரவணைப்பில், கதவைச் சாத்திக்கொண்டு – தாழிட்டுக்கொள்ளக் கூடாது, வெறுமேதான் சாத்திக்கொள்ளலாம் என்று ரமணி முதல் நாளே அவளிடம் சொல்லிவிட்டான் – கட்டிலில் படுத்தபடி தன் எண்ணங்களுடனும் சங்கரன் பற்றிய ஞாபகங்களிலும், முறையே போராடவும் மகிழவும் அவளுக்குக் கிடைத்திருந்த வரப் பிரசாதம் அது என்றே அதைச் சொல்லவேண்டும். அவளுக்கென்று ஒரு சிறு மர அலமாரியும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பூட்டும் வசதி யற்றது! அதனால், அவள் தன் புடைவைகள், கைப்பை, தோத்திரப் புத்தகங்கள் ஆகியவற்றை அதில் வைத்திருந்தாள். அதில் இன்னும் நிறைய இடம் இருந்தது.

ரமணியின் அண்ணன் மனைவிக்கும் அதே போன்று ஓர் அறை இருந்தது. அவளுக்கும் அதே கெடுபிடிகள்தான். அவளும் அப்பாவி போலத்தான் தெரிந்தாள். படிக்காத பெண்தான் வேண்டும் என்று அவன் தேர்ந்தெடுத்து மதுரையிலிருந்து கொண்டுவந்தானாம். அப்பா, அம்மா யாரும் இல்லாதவள். தூரத்துச் சொந்தக்கார மாமா ஒருவர்தான் மணமேடையில் அமர்ந்து அவளை மணமுடித்துக் கொடுத்தாராம். இருவரும் தங்களுக்குள் சாதாரணப் பேச்சுகளில் கூட ஈடுபட இயலாதவாறு மாமியார்க்காரி அடிக்கடி குறுக்கிட்டவாறு இருந்தாள்.

சாந்தி தனக்கு உதவுவாளா மாட்டாளா என்பது இன்னும் அவளுக்குச் சரியாகப் புரியவில்லை. கிட்டத்தட்ட ஓர் அநாதையான அவளுக்குத் திருமணம் வாழ்க்கையில் உச்சமான நோக்கமாக இருந்திருக்கக் கூடும். அவளும் பேரழகியாக இருந்தாள். தன்னைப் போல் அவள் யாரையும் காதலித் திருந்திருக்க மாட்டாள் என்று காரணம் ஏதுமின்றி தயா நினைத்தாள். காதலித்திருப்பினும், அது அவள் கணவனுக்குத் தெரியவராமல் போயிருந்திருக்கலாம்.. .. ..

கணவனின் அலமாரிக் கதவை ஓசைப்படாமல் மூடி அவள் சாவியைத் திருகிய கணத்தில் பின்னால் சன்னமான காலடி யோசை கேட்டது.

தயா வெலவெலத்துப் போனாள். திரும்புவதா வேண்டாமா என்பது கூடத் தோன்றாத மலைப்பில் அசையாமல் அப்படியே நின்று போனாள்.

– தொடரும்
jothigirija@live.com

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *