குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

Spread the love

 

பட்டாம் பூச்சியொன்று

பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.

 

அம்மா குழந்தையை

அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க.

 

குழந்தை

முதல் நாள் விடாது அழும்.

 

இரண்டாம் நாள்

விட்டு விட்டு அழும்.

 

மூன்றாம் நாள்

மனதுக்குள்ளே கிணற்றுக்குள் அழும்.

 

இப்போதெல்லாம்

குழந்தை அழுவதில்லையாம்.

 

குழந்தை ‘ஏ, பி, சி, டி’ யெல்லாம்

சொல்லும்.

 

‘டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார்’

என்று

’ரைம்ஸ்’ எல்லாம் சொல்லும்.

 

அம்மாவின் கழிபெருங் கனவில் குழந்தை படித்து முடித்து

ஏற்கனவே ’டாலர் தேசம்’ போயிருக்கும்.

 

ஓரிரவு வானில்

சுட்டும் விரல் தொட்டு நட்சத்திரங்கள் ’பாரெ’ன்பாள் அம்மா.

 

’ஒன், டு, திரீ, என்றெல்லாம் எண்ணி ’உருவேற்ற’ வேண்டாம்

கத்தி.

 

மகிழம் பூ குழந்தை

மகிழும்.

 

கனவாய்க்

கண்ணகல் விரிய வாரிக் கொள்ளும் நட்சத்திரங்களையெல்லாம்.

 

கண் சிமிட்டி நட்சத்திரங்கள்

குழந்தையை ‘வா வா’ என்று விளையாட அழைக்கும்.

 

’படிக்கும்’ குழந்தைக்குப் பிடிக்கும்

பள்ளிக்கூடம் போகாத குட்டி நட்சத்திரங்களை.

கு.அழகர்சாமி

Series Navigationமருமகளின் மர்மம் – 6பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு