கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

sukirushnamoorthy

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம் ஏ ஜி மருத்துவமனையில் சந்தித்தேன். காகிதப்பொட்டலம் போல் படுக்கையில் கிடந்தார். ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாக சென்று கொண்டிருந்தது. என்னோடு மெதுவாகப்பேசினார்.
தனது பேரனின் தள்ளிப்போன திருமணம் மீண்டும் 29.09.2014 நடைபெற வேண்டும். தன் இறப்பு அதுவரை நிகழாது தள்ளிப்போகவேண்டுமே எனக்கவலையோடு இருந்தேன் . பேரனின் திருமணம் நன்கு நடந்தேறியது. அதில் எனக்கு நிம்மதி. ஆனால் என் தம்பி இச்சமயம்பார்த்து சீனா சென்றுவிட்டான் என் நேரம் அப்படி என்று குறிப்பிட்டார்..
தமிழகத்தில் இந்தித்திணிப்பு அதன் தொடர் நிகழ்வுகுறித்து த்தான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினை மனத்தை மிக வேதனை பட வைத்துவிட்டது என்றார். சோவோடும் சுஜாதவோடும் குருமூர்த்தியோடும் தன்னைச்சேர்த்து பார்ப்பனச் சாதி முத்திரை குத்திவிட்டார்கள் என்றார்.
திருக்குறளை பெங்காலியில் மொழிபெயர்த்ததற்காக ரூபாய் 15000 சாகித்ய அகாதெமியிலிருந்து வர இருப்பதாகச்சொன்னார். குறுந்தொகைக்கு இன்னும் செய்தி சாகித்ய அக்காடெமியிலிருந்து வரவேண்டும் என்றார்.
திரு. நாச்சிமுத்து அவர்களிடம் இது குறித்து டெலிபோனில் நாங்கள் பேசியும் இருந்தோம். திரு .நாச்சிமுத்துவும் அவரது மனைவியும் சுகியை மருத்துவமனைக்கே வந்து பார்த்துப்போனவர்கள்.
இன்று என் குடும்ப சூழல். அவரின் சடலத்தைப் போய்ப்பார்க்கமுடியாதபடிக்கு நான். அது சுகிக்கும் தெரிந்ததே சுகியின் மகளார்தான் தொலைபேசியில் சு.கி மறைவு குறித்து சொன்னார். எழுத்தாளர் கிருஷாங்கினி என்னோடு தொடர்புகொண்டு சுகி மறைவு குறித்துப்பேசினார்.
மும்பையிலிருந்து அம்பை சொல்லித்தான் கிருஷாங்கினிக்கு சுகி தாம்பரத்தில் இருப்பதே தெரியும். கிருஷாங்கினியின் தாயார் பூரணி குறித்து சுகி என்னிடம் பெருமையாகப்பேசியவர்..
நான் திசை எட்டும் குறிஞ்சிவேலனுக்கு சுகி மறைவுச்செய்தி சொன்னேன்.இந்து நடராஜனுக்கு உடன் செய்தி சொல்லவேண்டும்.என்றார். .
லட்சம் லட்சமாக பணத்தை ஏழைகளின் மருத்துவ செலவுக்கு என சுகி இந்து மிஷன் மருத்துவமனை- தாம்பரம் மூலம் வழங்கியவர்.
‘நான் கடந்து வந்த பாதை’ என்னும் தனது சுய சரிதையை அற்புதமாக எழுதியவர்.
திசை எட்டும் மொழி பெயர்ப்பு விருது கடலூரில் முதன் முதலாகப்பெற்றவர்.
மார்க்சீயர்கள் எப்படி வங்கத்தில் மார்க்சீயம் பயில்வதை மறந்துபோனார்கள் என்பதை சொல்லிக்கொண்டு இருந்தவர்.பாரதியைவிட கவி தாகூரின் இலக்கிய உயரம் அதிகம் என்று உரத்துக் கருத்து சொல்லியவர். உடன் சண்டைக்கு வந்த என்போன்றவர்களிடம் பெங்காலி மொழி கற்று தாகூரை ப்பயின்று பின் பாரதியைப்பேசுங்கள் என்பார்..
வங்க மொழிக்கும் தமிழுக்கும் ஒரு பாலமாக இருந்து வாழ்ந்து முடித்தவர் சுகி. குசிபா வெண்ணிலா போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு வங்கத்தில் இருந்து உதவிய பெரியவர். வங்க சரத் சந்திரரை இன்னும் தமிழுக்கு அதிகம் அறிமுகப்படுத்தவேண்டும் என விரும்பியவர். மாசுவேதாதேவியின் நெருங்கிய நண்பர்.
ஜெயமித்ராவின் ‘கொல்லப்படுகிறது, ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் ‘அமைதிப்புயல்’,சுசித்ரா பட்டாச்சர்யாவின் ‘இருட்டு வேளை’ சரத்சந்திர சட்டோபாத்யாயின் ‘ஷோடசி’ என்கிறபடி அவரின் மொழிபெயர்ப்புப்பணிகள் எத்தனையோ. இ.பா எழுதிய குருதிப்புனலை வங்காளத்தில் கொணர்ந்து சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.
அதீன் பந்தயோபாத்தியாயின்’ நீலகண்ட பறவையைத்தேடி’ தமிழில் தந்து அமரத்துவம் பெற்றவர் சுகி. மறப்போமா சுகியைத்தான்.
——————————

Series Navigation