கேரளாவின் வன்முறை அரசியல்

ஜே கோபிகிருஷ்ணன்
கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று சொன்னால், சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்பத்த்தான் விளம்பர வார்த்தைகள் நம் மனதுக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்து, ஆள ஆரம்பித்துவிடுகின்றன.  இந்த விளம்பர வாசகம், கேரளா சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமாக 15 வருடங்களுக்கு முன்னால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேரளா கேடரைச் சேர்ந்த உத்தரபிரதேச ஐஏஎஸ் ஆபீஸர். அவரது பெயர் அமிதாப்காந்த்.
மலையாளிகளான நாங்கள், எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு பெருமையையும், (அது நியாயமானதா இல்லையா என்று கருதாமல்) அள்ளிக்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், உன்னிப்பாக கவனிப்பவர்கள் விமர்சனமாக சொல்வதை நினைவில் வைத்துகொள்வதுகூட இல்லை என்பது அறிந்த விஷயம். 120 வருடங்களுக்கு முன்னால், சுவாமி விவேகானந்தர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் வழியே செல்லும்போது, இங்கே இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். சுயமாக தங்களுக்குத்தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட “மேல்ஜாதிகள்” பிற்பட்ட ஜாதிகள் மீது நடத்தும் கொடுமையை கண்டு கேரளாவுக்கு ஒரு அடைமொழி கொடுத்தார். அது எப்படியோ கேரளாவின் மீது ஒட்டிக்கொண்டது. அது “பைத்தியக்கார விடுதி” என்பது.
சுவாமி விவேகானந்தரின் விமர்சனத்தாலோ அல்லவோ, மாறுதலுக்கான ஒரு உந்துவேகம் ஆரம்பித்தது. சமூக தளத்தில் தொடர்ந்து பல மாறுதல்கள் ஆரம்பித்தன. 21ஆம் நூற்றாண்டின் பத்தாண்டுகளுக்கு பின்னர் சாதியம் இன்னும் ஒரு வலிமையான அமைப்பாக இருந்தாலும், சமூகதளத்தில் முன்காலத்தை விட மட்டுப்பட்டே இருக்கிறது. இடதுசாரிகளும், மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்டுகளும், கூறும் “முன்னேற்றம்” தொழிலாளர் சங்கங்கள் மூலமாகவும், 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்களாலும் உருவம் பெற்றது.
இருப்பினும், அரசியல் சூழ்நிலை, ஜனநாயகம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தில் உருவம் கொள்ளவே இல்லை. சாதி அரசியல், மேற்கு வங்காளத்துக்கு ஈடான வன்முறை அரசியல் ஆகியவை மலையாளிகள் தங்களுக்குத்தாங்களே கூறிகொள்ளும் முற்போக்கு மக்கள் என்ற அடைமொழியை கேலி செய்வதாகவே உள்ளன.  இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் கொண்டுவந்த “புரட்சி” என்பது அந்த வார்த்தையின் மிக அவலமான பொருளிலேயே ஊனப்பட்டது. அவர்களை பொருத்தமட்டில், “மாற்றம்” என்பது சமூகத்தின் உருவத்தையும் ஆன்மாவையும் முழுவதுமாக அழிப்பதும், அதற்கு ஈடாக எதையுமே வைக்காமல் இருப்பதும்தான்.
1990களில் வந்த தொழில்நுட்ப புரட்சி, கேரளாவின் ”சின்ன சின்ன ரகசியங்கள்” வெளிவந்து, கேரளாவின் அரசியல் சீரழிவு தேசிய அளவில் பேசப்படக்கூடியதாக ஆகிவிட்டது. 1999இல் கன்னூர் பள்ளிக்கூட ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் மாஸ்டரை அவரது மாணாக்கர்கள் முன்னிலையிலேயே கொடூரமாக கொல்லப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் சீரழிவின் ஒரு அடையாளக்கல்லாக என்றும் இருக்கும். வினோதமாக, சிபிஐஎம் இறுதிவரை கொலையாளிகளை காப்பாற்றி அவர்களுக்காக வாதாடியது.

சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.எம். மணி அவர்களது பேச்சு இந்த சீரழிவின் உச்சம். கம்யூனிஸ்டு அரசியலால் உருவான இந்த பிரகிருதி, டிவி கேமராக்கள் முன்னிலையில் அவரது கட்சி தொடர்ந்து அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டி வந்திருக்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை பற்றி ஒருமுறைகூட சிந்திக்கவில்லை. மலையாளின் பொது மனத்தின் ஒரு மூலையில் பேய்க்குணம் இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கம் கேரளாவில் ஒரு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1920களில் ஆரம்பித்த இந்த இயக்கம், தொழிலாளர் சங்கங்கள் மூலமாகவும், சாதி சங்கங்கள் மூலமாகவும் சீர்திருத்தங்கள் மூலமாகவும் தன்னை வளர்த்துகொண்டது. கம்யூனிஸ்டுகளின் கோட்டையான வட கேரளாவில் அரசியல் விழிப்புணர்வு மெல்ல மெல்ல வெவ்வேறு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. சாதி அரசியலும், மத அரசியலும், மத அடிப்படைவாதமும் கேரளாவின் மைய அரசியல் நிலையை பாதிக்கவில்லை என்றாலும், கேரளாவின் புதியதாக தோன்றியுள்ள ஜனநாயகத்தை அதை விட மோசமான பேய் தின்றுகொண்டிருக்கிறது. அது ஸ்டாலினிஸம்.
1970களிலிருந்து, கேரளாவில் கொள்கைக்காக சாகும் மக்களை பார்ப்பது சாதாரணமாகத்தான் இருந்துவருகிறது. 1970களின் மத்தியில் தோன்றிய தலைமுறையில் ஸ்டாலினிஸமும் அதன் மாற்றாக வந்த மாவோயிஸமும், பேஷனாக ஆகியிருந்தன. இந்த அகோரமான கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவே இல்லாமல், மலையாளிகள் பெங்காளிகளின் கண்ணாடி பிம்பங்களாக ஆகியிருந்தார்கள். இவர்கள் இருவருமே தாங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை காப்பியடித்துகொண்டு , அதன் விளைவாக தங்கள் சொந்த கலாச்சாரத்தை உதறியவர்களாக இருந்தார்கள்.
1949இல் கம்யூனிஸ்டு கட்சி கொண்டுவந்த “கல்கத்தா தீஸிஸ் (Calcutta thesis) வர்க்க எதிரிகளை (அரசியல் எதிரிகள் என்று படித்துகொள்ளவேண்டும்) தீர்த்துக்கட்டுவதை முக்கியமாக கொண்டது. அது வட கேரளாவில் சிபிஎம் வகுப்புகளில் புல்லரிக்கக்கூடிய கொள்கையாக எடுத்துகொள்ளப்பட்டது. கேரளாவில் கம்யூனிஸம் பிறந்த கன்னூர் மாவட்டத்தின் தலசேரியை சேர்ந்தவனான நான், இதற்கு சாட்சி அளிக்க முடியும்.  இந்த சொல்லாடலை எடுத்துகொண்ட தலைவர்கள் ரத்தவெறியில் திளைத்தார்கள். ஒவ்வொரு குற்றத்தையும் கட்சியின் பெயரால் நியாயப்படுத்தினார்கள்.
1970களில் சிபிஎம்மின் குணம் மாறியது.  “தீவிரவாத புரட்சி இயக்கங்கள்”க்கு எதிராக கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது. சிபிஎம் தலைவர்கள் தங்களது கூட்டங்கள் திடீரென்று உப்புச்சப்பு இல்லாத கூட்டங்களாக ஆயின என்று நினைவு கூருவார்கள். நகைச்சுவையும், கிண்டலும், உள்குழு கூட்டத்திலிருந்து காணாமல் போயின. எவரிடமும் சிரித்த முகமே இல்லாமல் போனது. ஆபத்தான தீவிரமான நிழல் உள்குழு கூட்டத்தின் மீது படிந்தது. சிரிக்கும் தலைவர்கள் அபூர்வமானவர்களாக ஆனார்கள்.
சிபிஎமை விட்டு வெளியேறிய  தலைவர் டி பி சந்திரசேகரனை கொலை செய்தது எந்த அளவுக்கு அழுகியிருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது. ஆகவே, மணி அதனை விளக்கியது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. 1980களில் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியதை சுட்டிக்காட்டி, ’சிபிஎம்முக்கு துரோகம் செய்த’ சந்திரசேகரனை கொன்றதை நியாயப்படுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் நடத்தும் யுடிஎஃப் அரசாங்கம் பழைய கொலைவழக்குகளை மீண்டும் திறந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருப்பதன் மூலம் தனக்கு தைரியம் இருக்கிறது என்று காட்டியிருக்கிறது. இந்த வழக்குகளை அதன் நியாயமான முடிவுக்கு எடுத்துசெல்லுமா காங்கிரஸ் அரசாங்கம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இந்த ஆர்வமும் மறைந்துவிடும் என்றே பலரும் கருதுகிறார்கள்.
மேற்குவங்காளத்தில் 20000 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டது  கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்த முப்பதாண்டு காலத்தில். கேரளாவில் 200 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.  கன்னூரில் சிபிஎம்முக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் முடிவே இல்லாமல் நடந்து வரும் பலிக்கு பலி கொலைகளால் பெரும்பான்மையான இந்த கொலைகளுக்கு காரணம்.   பல நேரங்களில் கொலை செய்பவர்களும், கொலையாகுபவர்களும் காங்கிரஸையோ அல்லது முஸ்லீம் லீகையோ சேர்ந்தவர்கள்.  ஆனால், சிபிஎம் எப்போதுமே ஒரு தரப்பில் இருக்கிறது. 13 வருடங்களாக கேரளாவில் செய்திப்பத்திரிக்கை நிருபராக  இருக்கும் நான். மணி பேசியது போன்ற பேச்சுக்களை பல மூத்த சிபிஎம் தலைவர்கள் பேசி கேட்டிருக்கிறேன்.  அதிர்ஷ்டவசமாக, எப்படியோ மணி பேசியது வெளிவந்து சட்டத்தை இந்த திசை நோக்கி நகர்த்தியிருக்கிறது.  மிகக்குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, எப்படி படித்த திறமையான, மற்றபடி உணர்வுப்பூர்வமான மனிதர்கள் கொலைகாரர்களாக மாறிவிடுகிறார்கள் என்று அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  கேரளாவிலிருந்து விலகி, வட இந்திய சூழ்நிலையில் எனது அனுபவத்தின் மூலம், மலையாளி மனத்தின் அடிப்படை குறைபாட்டை என் கண்கள் பார்க்கும்படி வைத்திருக்கிறது.
அவன் கட்சி சொல்லுவதற்கு தனது உடலையும் ஆன்மாவையும் அடிமையாக்கிகொண்டிருக்கிறான். கட்சியின் ஆணைக்கு முன்பு மனிதநேயம் கரைந்துவிடுகிறது. கூடவே, மிகவும் ஆழகாக சமூகம் அரசியல்படுத்தப்பட்டிருப்பதும். அரசாங்கத்தின் ஒவ்வொரு முகத்திலும் அரசியலே ஆணை செலுத்துவதும்.

 

ஆனால், இன்று, ஒரு வெள்ளிக்கீற்று தென்பட்டிருக்கிறது. அரசியல் சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக, முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் பகிரங்கமாக மணிக்கு எதிராக வெளிவந்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் கட்சி தலைமைக்கு இப்படிப்பட்ட செயல்களை நியாயப்படுத்தும் ஒழுக்கமுறையை கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் இரண்டாம் வாரத்தில், இதன் மீது ஏகேஜி பவனில் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் மலையாளி மனம் பைத்தியக்கார விடுதியிலேயே வாழ விரும்பினால், அது வேறு கதை.
(The writer is Special Correspondent, The Pioneer)
மேலும் படங்கள், வீடியோக்கள் பார்க்க
Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28துருக்கி பயணம்-4