கொம்புத்தேன்

This entry is part 14 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

வே.ம. அருச்சுணன் – மலேசியா

கைபேசி ஒலி எழும்பியது! அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்!
“ஹலோ…..சிலாமாட் பாகி…..துவான் பெங்கெத்துவ!”
“சிலாமாட் பாகி இஞ்சே பாலா……!”
“அப்ப ஆல்….துவான்……பங்கில் சய பாகி…பாகி இனி?”
“அனாக் இஞ்சே, சந்துரு திடாக் அடீர் செச்கோலா செலமா சத்து மிங்கு ……தன்ப செபாப்…….!”
“சுங்கோ ஹய்ரான்……பெங்கெத்துவ! அன்ன சய சந்துரு திடா அடீர் செக்கோலா…….?”
“சய பெரிதாவு இஞ்சே சுப்பாயா……பெர்திண்டாக் செபெலூம் லம்பாட்……!”
“துவான்……சய அக்கான் பிஞ்சாங் டெங்கான் அன்னா சய…….டான் அக்கான் ஹுபோங்கி துவான் நந்தி…..தெரிமாக் காசே……!”
பள்ளி முதல்வர் துவான் ஹஜி காரிம் நல்ல மனிதர்; பண்பாளர். இனப்பாகுபாடின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துபவர்.அவர் மகனைப் பற்றி கூறிய போது நான் அதிர்ச்சியடைந்தேன்! ஒருபோதும் மகன் தனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டானே? மனம் குழம்பிப்போகிறேன்! .
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய போது மகன் சந்துரு வீட்டில் இல்லை.அது நிலைமையை மேலும் மோசமாக்கியது!
“வதனி……சந்துரு எங்கே…..?” கோபமுடன் கேட்கிறேன்.
“ஏதோ, சிறப்பு வகுப்பு இருப்பதாகக் காலையில் கூறிச் சென்றான்….!”

“கடந்த ஒரு வாரம் பள்ளிக்குப் போகலையாம்…..பள்ளி முதல்வர் காரிம் காலையில் கைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம்சொன்னார்……!”
“உண்மையாகவாச் சொல்றீங்க…..?” ஆச்சரியத்துடன் கேட்கிறார்.
“பின்னே பொய்யாச் சொல்வேன்.பள்ளி முதல்வர் மிகவும் நல்லவர்.நம்ம பையன் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றதற்காகச்……சிறப்புப் பரிசுக்கொடுத்துப் பாராட்டினாரே…..!அவரா நம்மப் பையன் மீது வீண் குற்றம் சுமத்தப் போகிறாரு…….?”
“அதானே……காரிம் நல்ல முதல்வர் ஆயிற்றே…..!”
இரவு ஏழு மணியளவில் வீடு வந்த சேருகிறான் சந்துரு.ஆத்திரமுடன் இருந்த நான், “சந்துரு……! ஒரு வாரம் ஏன் பள்ளிக்குப் போகல……?” திடுமென கேட்டவுடன் சந்துரு தடுமாறுகிறான்!
“வந்துப்பா…..! வந்துப்பா…..!” தயங்குகிறான்.
“சந்துரு…….படிவம் ஆறு கீழ்நிலை வகுப்பில் கவனமுடன் படித்தால்தான் அடுத்தாண்டு மேல் நிலை வகுப்பில் சிறப்பாகத் தேர்வு பெற முடியும்…..?”
“உங்களிடம் சொல்லாமல் பள்ளிக்கு மட்டம் போட்டதற்கு என்னை மன்னிச்சிடுங்க அப்பா…..!”
“அது சரி….ஒரு வாரமா என்னிடம் கூடச் சொல்லாமல் நீ எங்கே போயிருந்தே சந்துரு……?” ஆச்சரியமுடன் கேட்கிறேன்.
“பள்ளிக்கருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்திலிருந்து,‘மென்செஸ்டர்’ யுனைட்டட் கிளப்’ உள்ளூர் விளையாட்டாளர்களுக்குப் பயிற்சி அளித்தது. அந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளவே நான் அங்குச் சென்றிருந்தேன்……!” “படிக்கிற வயசுல……இப்படிப் பொறுப்பில்லாமல் விளையாடப் போயிருக்கிறாயே…… இன்னும் நீ சின்னப் பிள்ளையா சந்துரு…?” ஆத்திரத்தால் என் கண்கள் சிவக்கின்றன!
“டியாகோ மரடோனா, போன்று சிறந்த காற்பந்து விளையாட்டாளரா வருவதுதான் என்னுடைய வாழ்வின் குறிக்கோள்…!” அழுத்தமுடனும் நிதானமுடனும் கூறுகிறான் சந்துரு.
“பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்து வயசான காலத்தில் எங்களைக் காப்பாற்றுவேன்னு நினைச்சா எங்களோட நம்பிக்கையில மண்ணை வாரிப் போட்டிடுவ போல இருக்கு சந்துரு…!”என்று நான் அதர்ச்சியுடன் கூறுகிறேன்.
“காற்பந்து விளையாட்டாளர்கள் உலக அரங்கில் விளையாடி இன்றைக்குக் கோடிக் கோடியாய்ப் பணம் சம்பாதிக்கிறாங்கப்பா என் திறமையால நான் முன்னுக்கு வந்துக்காட்றேன் ……!” மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
“முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல இருக்கு சந்துரு…உன்னுடையா குறிக்கோள்…..! ”
“இங்குள்ள இளம் விளையாட்டளர்களுக்கு முறையானப் பயிற்சிகள் வழங்கித்…….தேர்வுப் பெறும் விளையாட்டாளர்களை அவர்கள் நாட்டிற்குச் அழைத்துச் சென்று, மேலும் நுணுக்கமானப் பயிற்சிகளைத் தொடர்ந்து, வழங்கி உலகத்தரத்திலான விளையாட்டாளர்களை உருவாக்குகிறார்கள்…….!”
“இதற்கெல்லாம் அதிஷ்டம் வேணும் சந்துரு…..!”
“நிச்சயம் நான் சாதித்துக்காட்டுவேன் அப்பா..!” உணர்ச்சியுடன் கூறுகிறான்.
“சந்துரு…..! கண்காணாத இடத்திலப்போய் விளையாடுறதைவிட முதல்ல நீ பிறந்த இந்த மண்ணுக்காக விளையாடலாமே?” “அப்பா….வாய்ப்புக் கொடுத்தா நான் விளையாட மாட்டேன் என்றா சொல்கிறேன்?” ஆதங்கத்தோடுக் கூறுகிறான். “முயற்சிப் பண்ணிப்பாரு சந்துரு….! திறமைசாலிகள் எங்கும் ஜொலிக்கலாம் இல்லையா…..!” என்கிறேன் நிதானமாக.
“திறமைக்கு மதிப்பளித்தக் காலம் நம்ம ‘சிலந்தி மனிதன்’ஆறுமுகம், சந்திரன், சந்தோக்சிங்,சோசின்ஆன்,எம்.கருத்து காலத்தோடு எல்லாம் போச்சுப்பா……!” இப்பத் திறமையைப் பார்ப்பதை விட ஆளைப் பார்க்கிறார்கள்..! திறமைமிக்க என்னைப் போன்ற விளையாட்டாளர்களுக்கு இங்கு வாய்ப்பு குறைவு…….!” கவலையுடன் கூறுகிறான்.
சந்துரு பேசுவதைப் பார்த்து வாயடைத்துப் போகிறேன்.வளரத்துடிக்கும் பயிரை முளையிலேயேக் கிள்ளப்படுவதை உணர்கிறேன்! மகனின் எதிர்காலம் அவன் கையில் இருக்கிறது. அவன் அதை மிகச் சிறப்பாகவேத் திட்டமிட்டுச் செயல் படுவதை எண்ணி வியக்கிறேன்.
அறுபதாம் ஆண்டுகளில், நாட்டு முதல் பிரதமர் துங்கு அவர்கள் தலைமையில்,மெர்டேக்கா கிண்ணம் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுக்குக்கிடையே வருடந்தோறும் தடையில்லாமல் மிகச் சீராக நடைபெற்று வந்தது.அந்த விளையாட்டில், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், லாவோஸ், போன்ற நாடுகளிலிருந்து வரும் விளையாட்டாளர்கள், தங்களின் திறமைகளைக் காட்டுவது ரசிகர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் முன்னனி ஆட்டக்காரர் தனபாலன் லாவகமாக எதிரிகளை ஏமாற்றி வெற்றிக்கோலை அடித்த போது அந்த ஸ்டேடியமே அதிர்ந்தது! நேரில் சென்று அந்த அரிய ஆட்டத்தைக் கண்டுகளித்த எனக்கு அந்தக் கோல் இன்றும் என் மனதில் ஆழப்பதிந்திருந்தது! அந்த வரலாற்று நாயகனுக்கு விடிந்தால் திருமணம் என்ற செய்தியும் காற்பந்து இரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது!
ஆறாம் படிவத்தை முடித்த போது, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பைப் பெறுகிறான் சந்துரு. அவனதுத் திறமையைக்கண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு மான்செஸ்டர் இளைஞரணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது! சந்துரு காற்பந்து விளையாட்டில் தனித்திறமைக் கொண்டிருப்பதை அறிந்து வியந்து போகிறேன்.
சந்துரு, பல மாதங்கள் இங்லாந்தில் தங்கி அங்குள்ள கிளப்புக்கு விளையாடியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.இளமையில் நானும் காற்பந்து விளையாட்டாளராக இருந்திருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் ஆரம்பத் தமிழ்ப்பள்ளியிலும் பின்னர் இடைநிலைப் பள்ளிலும் பள்ளியைப் பிரதிநிதித்து காற்பந்து விளையாடிய அனுபவம் பசுமரத்தாணி போல் இருக்கிறது!
சந்துருவைப் பல மாதங்கள் பிரிந்திருந்தது மனைவிக்கு வருத்தம் என்றாலும், உள்நாட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பினும் வெளிநாட்டில் மகன் விளையாடுவது மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சியே!
நாடு திரும்பிய மகனிடம், “சந்துரு…..நீ காற்பந்து விளையாட்டுல முழுத் திறமையைக் காட்டி விளையாடு. நம் உள்ளூர் கிளப்பிளுள்ள விளையாட்டாளர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை வழங்கி ஒரு சிறந்த குழு உருவாக உதவி செய்.நீ வழங்கப் போகும் பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்!” என்று உற்சாகப்படுத்திப் பேசியது சந்துருவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.அவன் முகம் மகிழ்ச்சியால் துள்ளியது!அவனை அவ்வாறு பாராட்டுவேன் என்று சந்துரு சிஞ்சிற்றும் எண்ணிப்பார்க்கவில்ல.
உள்ளூர் பிரமுகர், டத்தோ.தியாகன் ‘இந்தியன் ஸ்டார்’ எனும் காற்பந்து கிளப் ஒன்றை உருவாக்குகிறார்கள்.இந்திய இளைஞர்கள் வெட்டுக்குத்து, மது அருந்தி,கொலை கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்க விளையாட்டுத்துறை பக்கம் இளைஞர்கள் திருப்பும் வண்ணம்,வெளிநாட்டு பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்க முன் வருகிறார்.
தொழிலதிபரான டத்தோ தியாகன், “இளைஞர்களே…..! உங்களிடம் திறமைகளைக் கொண்டு, விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டும்.இழந்த புகழை மீண்டும் மீட்டெடுக்க நீங்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும்,மற்ற இளைஞர்களுக்கு ஈடாக விளையாட்டுத்துறையில் நமது திறமையைக் காட்ட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்..!” கூடியிருந்த இளைஞர்கள் பலத்தக் கையோலி எழுப்பி அவரது கருத்தை வரவேற்கின்றனர்!
டத்தோ தியாகன் முறையாகத் திட்டமிட்டு, ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பை நடத்துகிறார்.வெளிநாட்டிலிருந்து பயுற்றுனர்கள் வரவழைக்கப்பட்டு முறையானப் பயிற்சிகள் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது! நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் காற்பந்து போட்டிகளிலும் ‘இந்தியன் ஸ்டார்’ எல்லாம் பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது.இதைக்கண்ட பல இளைஞர் அமைப்புகள், ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பிற்கு உதவ ஆர்வமுடன் முன் வருகின்றனர்.
இந்தக் கிளப்பின் நடவடிக்கை மூலம் காற்பந்துத்துறையில் கணிசமான இளைஞர்கள் தங்களின் பங்களிப்பைத் தருகின்றனர்! மாநில அளவில் பிரபலமான முறையில் போட்டிகள் நடத்தப் படுகின்றன. அண்டை நாடுகளிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல விளையாட்டுக் கிளப்புகள் போட்டிகளில் கலந்து சிறப்பிக்கின்றன.
இந்தப் போட்டிகள் பற்றிய விரிவானச் செய்திகள் எல்லா மொழி நாளிதழ்களிலும்,வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்படுகின்றன.மற்றஇனத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் ‘இந்தியன் ஸ்டார்’ ஏற்பாடுச் செய்யும் போட்டிகளில் கலந்து கொண்டு கணிசமாக வழங்கப்பட்டப் பரிசுகளைப் பெறப் போட்டியிடுகின்றனர்!
திடீரென பொங்கியெழுந்த சுனாமி பேரலையைப்போல்,டத்தோ தியாகன் போலிசாரால் கைது செய்யப்படுகிறார்! இந்தியஇளைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் சதிச்செயல்களில் ஈடுபடுவதாக யாரோ சிலர் புகார் செய்ததன் விளைவால் சந்தேகப்பட்ட காவல் துறையினர் டத்தோ தியாகனை கைது செய்தனர்! சில அரசியல் புள்ளிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது பின்னர் தெரியவருகிறது!
கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் வழக்கறிஞர் குழுவுடன் சட்டரீதியில் சந்திக்க காவல் துறையை முற்றுகையிடுகின்றனர்! சட்டநிபுணர்கள் கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்குப் பின்னர்,டத்தோ தியாகன் ஒருநாள் சிறைவாசத்திற்குப்பின் விடுவிக்கப் படுகிறார்!
“பொதுவாழ்க்கை,என்று வந்துவிட்டல் இதெல்லாம் சகஜம்.நாம எடுத்துக் கொண்ட வேலையைப் பார்ப்போம்!” தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசியபடி தன் வேலையில் மும்முரம் காட்டுகிறார்!
அடுத்து நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்கு பெற ‘ஒரே மலேசியா’ என்ற அரசின் கொள்கையை ‘இந்தியன் ஸ்டார்’ வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டிருந்ததை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ‘மலேசியக் காற்பந்து சங்கத்தின் கவனத்திற்குச் செல்கின்றது! நாட்டிலுள்ள பிரபலமான காற்பந்து கிளப்புகள் இந்தியன் ஸ்டார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தாங்களும் பங்கு பெறவிழைகின்றன!
அன்றையக் காலைப் பொழுதில்,முதல் முறையாக ‘இங்லீஸ் பிரிமியம் லீக்’ கிண்ணத்திற்கான போட்டியில் பங்கு பெற ‘இந்தியன் ஸ்டார்’ கிளப்பைச் சேர்ந்த நமது இளம் சிங்கங்கள் இங்கிலாந்தை நோக்கிப் பறக்கின்றனர்! ‘ஏர் ஆசியா’ அதன் நிர்வாக இயக்குனர் டோனி பினாண்டஸ் அவர் செலவில் எல்லா விளையாட்டாளர்களையும் கேஎல்ஐ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வாழ்த்தி வழியனுப்புகிறார்.
நமது இரத்தங்கள் வெற்றிக்கனியைப் பெற்றுத் தரும் உணர்ச்சியுடன் கையசைத்து விடை பெறுகின்றர்! கூடியிருந்த ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் உற்சாகமுடன் கையசைத்து விடை கொடுக்கின்றனர்.
இதமான அந்தக் காலைப் பொழுதில் ஏர் ஆசியா விமானம் உறுமியாவாறு வானை நோக்கி மின்னலாய்ப் பறக்கிறது!

Series Navigationசிவதாண்டவம்வசை பாடல்
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *