கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா

 

இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்

இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்
எதையும் பறிக்காமல்
இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன
கடவுள் துகள்கள் மிதக்கின்றன
காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன
உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள்
பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது
இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்
உன்னை கனவிலிறங்கி  முத்தமிட்டவள்
இந்த வழியாக போய்க்கொண்டிருக்கிறாள் தனியாக
அவள் உதிர்க்கும் வாசனைகளில் உன் கனவின்
பிம்பங்கள் தெரிகிறது
அதில் நீயே அதிசயக்கும் படி தன் உடலின் ஒளியை
ஆயிரம் மடங்கு அதிகமாக்கி ஏற்றியிருக்கிறாள்
அவள் விரல் நகங்களில் கருங்குவளை பூக்கின்றன
பறிக்காமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்
அவளுடைய இளமை வெட்டி வைத்த
குளத்தில் நீராட போயிருக்கின்றாள்
சுகந்தமும் நிலவும் எட்டிப்பார்க்கும் குளமது
ஆடைகளை காவலுக்கு வைத்துவிட்டு நீராடுகின்றாள்
அழகு அவள் மேனி முழுவதும் உறைந்து கிடக்கிறது
அவளுக்கும் தண்ணிரீருக்குமிடையயே உன்னால் நுழைய முடிகிறதா பார்
அவளின் வசந்தத்திற்கும் பெளர்ணமிக்கும்மிடையே
அவளைக் கடக்கமுடிகிறதா பார்
அவளை மொழிபெயர்த்த கவிதைகளை
மீன்கள் படிக்கின்றன்
இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்
சூரியன் நிலவு விண்மீன் மழை மின்னல் வானவில்
எல்லாவற்றையும் தன் கண்களுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறாள்
அவளிடம் போய் எதையாவது கற்றுக்கொள்
அவள் குளிக்கும் குளம்  வீடாகிறது
கதவுகளாகி திறந்து மூடுகிறது
சன்னலாகி தன் அலைகளின் கைகளால் அசைக்கிறது
அந்த வீட்டுக்குள் நீ மட்டுமே நுழைய அனுமதி
இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்
அவனை வெளியே தள்ளி கதவைச் சாத்தியது
அவனுடைய காதல்.

என்னைத் தெரிகிறதா

என்னைத் தெரிகிறதா
உன்னைப் போலவே இருக்கின்றேன்
உனக்கும் எனக்கும் அறிமுகமில்லை
ஆனாலும் மனிதன் என்ற
பொதுப்பட்டியலில் இருக்கின்றோம்
என் மொழியை புரிந்துக்கொள்கிறீர்கள் என்பது அதிர்ஷ்டம்தான்
புரியாவிட்டாலும் பாதகமில்லை
சைகைகள் நம்மை இணைக்கும்
என்னுடைய பிரார்த்தனை போல உன்னுடையதில்லை
என்னுடைய கடவுளின் முகம் போல் உன் கடவுளின் முகமில்லை
நீ ஒரு வியாபாரியாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்கலாம்
அதனால் என்ன
ஏதோ ஒரு வரிசை இணைத்து வைக்கலாம்
புன்னகைகளை குறைவாக உற்பத்தி செய்கிறோம்
கைகுலுக்கல்களை குறைத்துக்கொள்கிறோம்
வார்த்தைகளை உடலுக்குளோ உதட்டிற்குளோ கட்டி வைக்கின்றோம்
அதை அவிழ்த்து விட்டு விடலாம்
மனசுக்குள் சில பறவைகள் அடைந்துக்கிடக்கின்றன்
கூண்டை திறந்து விடுவோம்
பாறைகளை உடைத்து பேருண்மைகளை சொல்லவில்லை
மிகச்சிறிய உண்மைதான் நீயும் நானும் மனிதனென்பது
வழியில் எங்கேனும் சந்திக்க நேரலாம்
என்னைச் சந்திக்க எல்லா மனிதர்களிடமும் பேசு
உன்னைக் கண்டுபிடிக்க நானும் பேசுகின்றேன்
ஒரு நாள் உன்னைத் தேடி அடையும் போது
எல்லா மனிதர்களும் எனக்கு அறிமுகமாகியிருக்கக்கூடும்
அதில் யாரேனும் புத்தன் இருக்கலாம்

அகதிகளின் கடவுள்

அகதிகளின் கடவுள்கள் குட்டையாகவோ
ஊமையாகவோ இருக்கிறார்கள்
அவர்களால் உயரமான சுதந்திரத்தை தொடமுடியவில்லை
அல்லது அடிமைகளுக்காக  பேச முடியவில்லை
அடிமைத்தனத்தை யார் வெட்டுவார்கள்
நேற்றைக்கு வந்தவர்கள்
சுதந்திரத்தை பங்கு போட்டுக்கொண்டால்
நாளைக்கு வருகிறவர்கள் எங்கே போவார்கள்
உலகம் சுதந்திரத்திற்க்காக அழுகிறவர்களால் நிரம்பியிருக்கிறது
உள்ளிழுத்துக்கொண்ட அமைதியை
எப்போது வெளிவிடும் யுத்தம்

அகதிகள் பசிக்காக வெயிலை குடிக்கிறார்கள்
வலிகள் அவர்களின் கடவுளை விடவும்
துயரங்கள் பிரார்த்தனைகளை விடவும் நெருக்கமாகயிருக்கின்றன
துரோகம் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து
அகதிகளாக நிறுத்தியிருக்கிறது
அவர்களால் எங்கேயும் நகர முடியாது
நடந்து செல்வதும்கூட பாதுகாப்பற்றதாகிவிட்டது
முகாம்களில் இடமில்லாமல் திரிகிறது உறக்கம்
இது இன்னும் எத்தனை காலத்திற்கு
சில சொற்கள் நிறைந்த உதடுகளும்
கொஞ்சம் தேநீர் கோப்பைகளும்
அவர்களுக்கு நிவாரணம் அளித்துடுமெனில்
எங்கே இருக்கின்றன அந்த உதடுகள்
எங்கே இருக்கின்றன அந்த தேநீர் கோப்பைகள்
சமாதானத்தின் பேச்சுவார்த்தைகள்
அமைதியின் தையற்காரர்களிடம் இருக்கிறது
அமைதியின் நீள அகலங்களை தைத்துக்கொண்டிருக்கிறார்கள்
துயரங்களின் சதைகளால் மூடப்பட்ட நகரங்கள்  காத்திருக்கின்றன
அமைதியின் கனிகளை ருசிப்பதற்கு.

ஏதாவது மிச்சம் வை

உன் தட்டில் ஏதாவது மிச்சம் வை
சில உயிர்கள் வெளியே காத்திருக்கின்றன
செலவழிக்கும் அன்பில் கொஞ்சம் மிச்சம் வை
முன்பின் அறிமுகமில்லாத இதயங்களுக்காக
அதற்காக சில உயிர்கள் காத்திருக்கலாம்
உன் கோடாரியை மரங்களிடமிருந்து ஒளித்து வை
அதன் கிளைகளிடம் கை குலுக்கு
அதன் இலைகளை தடவிக்கொடு
ஒருவேளை உன் குழந்தையின் பிஞ்சுக்கரங்கள்
ஞாபகம் வந்தால்  வாய் பேசமுடியாத உயிருக்கு தகப்பனாகலாம்
உன் தந்தமையை கொஞ்சம் மிச்சம் வை
அதற்காக சில மரங்கள் காத்திருக்கலாம்
சாலையோரக் குழந்தைகளிடம் சொற்களை செலவழி
அவர்கள் பழைய தொலைத்த முகங்களை தேடலாம்
உன்னைச் சந்தித்ததை ஆயுள் முழுவதும்
அவர்கள் நினைவுக் கொள்ளலாம்
அவர்களுக்காக உன் நாட்களில்  கொஞ்சம் மிச்சம் வை
வெகு தூரம் பறந்து வந்து பறவை
உன் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கிறது
ஒரு குவளையில் நீர் வை
கொஞ்சம் தானியங்களைத் தூவு
அது முட்டையிடும் பறவையாயிருக்கலாம்
தன் குஞ்சுகளுக்கு இரைத்தேடி வந்திருக்கலாம்
அதன் சிறிய கண்களைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கு
பறவையுடன் கழித்த நிமிடங்களை சேகரி
அது உன் பேரக்குழந்தைகள் மிகவும் ரசிக்கும் கதையாகலாம்
பறவைகளுக்காக நிமிடங்களை கொஞ்சம் மிச்சம் வை
உன் ஆரம்பம்
இன்னொருவனின் மிச்சத்திலிருந்து தொடங்குகிறது
கழித்துவிடப்பட்ட உயிர்க்கருவின் மிச்சம் நீ
எஞ்சியது எதுவும் முடிவல்ல
ஏதோ ஒன்றின்  ஆரம்பம்
நீ எதை மிச்சம் வைக்கப் போகிறாய்
உன் தேசத்திற்கு
உன் தாய் மொழிக்கு
உன் பிள்ளைகளுக்கு
ஒரு நாள்  நீ இல்லாமல் போகும் இந்த உலகத்திற்கு.

என்னை உனக்குள் வர அனுமதி கொடு

சிலையிடம் கேட்டேன்
உனக்குள் வர அனுமதி கொடு
இரவை உன்னுடன் கழிக்க விரும்புகின்றேன்
யாருமற்றிருக்கும் தனிமையில் நீயும் நானும்தான்
நான் காங்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கின்றேன்
உனக்குள் எப்படி நுழைவது கண்கள் வழியாகவா
அல்லது காதுகள் வழியாகவா
இந்தக் கதவை திறந்ததைப்போல என்னை திறக்க இயலாது
எனக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன
ஆனால் இந்த உலகில் அதிகாரமற்றவன் நான்தான்
என்னால் எழக்கூட முடியாது
உனக்குள் எப்படி நுழைவது
எனக்குள் ஏன்  வர விரும்புகிறாய்
ஏனெனில் நீ எல்லா காலங்களையும் உன் கண்களால் பார்க்கின்றவன்
உன் கண்கள் வழியாக என் எதிர் காலம் பார்ப்பேன்
இதற்கு முன் எதற்குள் நுழைந்திருக்கின்றாய்
முதன் முதலாக காற்றிடம் கேட்டேன்
உடனே  அனுமதி கொடுத்தது.
அதன் சிறகு எத்தனை  மென்மையானது
சின்னஞ்சிறிய உயிர்களைக்கூட காயப்படுத்தாமல் பறந்துச் செல்கிறது
ஆனால் அது பெரிய மரங்களை சாய்த்துவிடுகிறது
மலைகளை புரட்டிவிடுகிறது
ஆனால் காற்று உன்னிடம் நுழைந்திருக்கிறது
மழையைக் கேட்டேன் சரியென்றது
ஒரு துளிதான்
அதற்குள் எல்லா உலகங்களையும் அடக்கிவிடலாம்
அதற்காக எத்தனை நாவுகள் எத்தனை நிலங்கள்
எத்தனை சிப்பிகள் காத்துக்கிடக்கின்றன
அதனோடு பயணிப்பது உற்சாகம்தான்
மழை உனக்குள் பெய்திருக்கிறதா
நிறைய தடவை
எப்போதாவது கடலுக்குள் போயிருக்கிறாயா
நன்றாக கேட்டாய் போ
கடலாக மாறியிருக்கிறேன் காதுகொடுத்து கேள்
எனக்குள் அலையடித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும்
ஒருதடவை ஒரு பெரிய பாறைக்குள் போய் படுத்துக்கொண்டேன்
என்னை காணாமல் தேடியும் கிடக்கவில்லை
பாறைதான் சொன்னது
போ உன்னைத் தேடுபவர்களை தவிக்கவிடாதே
எப்போது வேண்டுமானாலும் எனக்குள் வரலாமென்றது
உனக்குள் மலையை பார்த்திருக்கிறாயா
சில சமயங்களில் பெரிய மலைகளை சுமந்திருக்கின்றேன்
யார் சொல்லியும் கீழே இறக்கி வைக்க முடிவதில்லை
அதெல்லாம் எதற்கு
என்னை உனக்குள் வரவிடு
ஏன் உள்ளே விட மறுக்கிறாய்
ஏன்னெனில் நான் உனக்குள் வர விரும்புவதால்
உனக்குள் வருகிறேன் என்னை வெளியே அழைத்துப் போ
எப்பொழுது திரும்ப வேண்டும்
இனி திரும்பக்கூடாதென்றுதான் வருகின்றேன்
அன்றிலிருந்து கடவுளையும் சுமந்துக்கொண்டு திரிகிறேன்

இருளின் மலையை விழுங்கிய பாம்பெனும் இரவு
நகரமுடியாமல் உடலை நகர்த்திச் செல்கிறது
சிகரெட்டால்  இரவை தட்டிவிட்டவன்
சிகரெட்ட பற்றவைத்துக்கொண்டு
வேடிக்கை பார்க்கின்றான்
மெல்ல அசைக்கும் உடலைக்கண்டு
தூரத்தில் வயதான கிழ பேருந்து
கண்கள் மின்மினி பூச்சிகள்
கைகள் நிறைய உடைந்த சப்தத்தை ஏந்தி வருகிறது
இரவை சன்னலிலிருந்து எட்டிப்பார்க்கிறவர்கள்
கையிலிருந்த முலைகளை படுக்கையிலே வைத்துவிட்டு
அதன் சூட்டை கம்பியில் தேய்க்கின்றனர்
நாயின் குரைப்பை கண்டுக்கொள்ளாத இரவு
தனித்திருந்த ஒருவனின் அறைக்குள்
தன் பெருத்த உடலை அசைத்தபடி நுழைந்து
கொஞ்சம் கொஞ்சமாக தன் முழு உடலையும் இழுத்துக்கொண்டது

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்