கோடிட்ட இடங்கள்….

Spread the love

அருணா சுப்ரமணியன்

அழகிய கவிதை 

எழுதிட விழைந்தேன்..

நீரூற்றாய் விழுந்த 

சொற்களை 

அணை கட்டி 

தடுத்தனர்…….

தடைமீறி வந்த 

தண்ணீரையும் 

தடம்மாற்றினர்…

வான்தந்த மழைநீரை 

யாரும்  தடுக்க 

முடியாததால் 

அங்கொன்றும் 

இங்கொன்றுமாய் 

சொற்களாக்கி வைத்தேன்…

விடுபட்ட வார்த்தைகளுக்காய் 

வெறும் கோடுகள் 

வரைந்து வைத்தேன்…..

வான்பொய்த்து 

நீர் வற்றி 

நிலம் பெயர்ந்து 

நீயுமற்ற 

இவ்வேளையில்

கோடிட்ட இடங்களை 

எவற்றைக் கொண்டு 

நிரப்புவேன்?

 

Series Navigationதொடுவானம் 158.சிதைந்த காதல்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்