சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்

Spread the love

 

பா. சிவக்குமார்,

முனைவர்பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

பாரதியார் பல்கலைக்கழகம்,

கோவை, 641 046.

 

          சங்க காலத்தில் ஏறத்தாழ  முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின்  அவைக்களப் புலவராகவும் சிறந்த நண்பராகவும் விளங்கியுள்ளமையை சங்கப்பாக்கள் வழி அறியமுடிகிறது. இருப்பினும் சங்ககாலத்தில் ஒரு பெண்கூட அரசாண்டதாக பதிவுகள் கிடைக்கப்பெற்றில. அச்சமூகத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு போதிய மதிப்பு வழங்கப்பெறவில்லை. மேலும், போரின் போது பெண்கள்மீது பலவகையான தாக்குதல்கள் நிகழ்த்பெற்றுள்ளன. அவ்வகையில் சங்ககாலப் போரில்   பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.

 பகைமன்னரின் மனைவியின் கூந்தலை மழித்தல்

         போரில் வெற்றி பெற்ற வேந்தன் பகைமன்னரின் மனைவியர்மீது உடல், உளம் சார்ந்து துன்புறுத்தும் வன்செயல்களில் ஈடுபட்டுள்ளான். பகைமன்னனின் மனைவியின் கூந்தலை மழித்து, அதனையே கயிறாகத் திரித்து, அக்கயிறு கொண்டு அப்பகைவரின் யானைகளைப் பிடித்துக் கட்டுவர். பகைமன்னரின் யானைகளைக் கட்டுவதற்கு சங்கிலி, கயிறு போன்ற பிற பொருட்கள் இருந்தும் பகைமன்னரின் உரிமை மகளிரின் அழகிய கூந்தலைக் கயிறாக்கியது அப்பெண்களின் மீது நிகழ்த்திய ஒரு வன்செயலாகும். இச்செயலினைச் சங்ககால மக்கள் கொடுமையான செயல் என்று கூறுகின்றனர். இதனை,

வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

                                                 கூந்தல் முரற்சியின் கொடிதே”                                       (நற்.270:9-10)

என்னும் பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. பகை மன்னரின் மனைவிகள் எதிரி நாட்டு மன்னனுக்கு எதிராகப் போரோ, கலகமோ செய்ததாகச் சங்கப் பனுவல்களில் பதிவு எதுவும் இல்லை எனும் பொழுது பகை மன்னனின் உரிமைமகளிர் என்ற காரணத்தாலேயே இக்கொடிய செயல் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கமுடிகிறது.

சங்க காலத்தில் கூந்தல் கணவனுக்கு மட்டுமே உரிமையுடையதாகச் போற்றப்பட்டுள்ளது. பெண்களின் அழகை வர்ணிக்கும் பொழுது பொம்மல் ஓதி, மையீர்ஓதி, அம்சில் ஓதி, நறும்பல் கூந்தல் என்று பலவாறாகக் கூந்தலின் சிறப்பினைச் சங்கப் பனுவல் போற்றிப் புகழ்கின்றன. திருமணத்திற்கு முன்பு மகளிர்தம் கூந்தலில் பூச்சூடும் வழக்கம் சங்ககாலத்தில் இல்லை என்பதையும் அறியமுடிகிறது.

கூந்தலில் பூச்சூடும் உரிமை திருமணத்திற்குப் பின்பே சங்கப் பெண்களுக்கு இருந்துள்ளது. கணவன் இறந்த பொழுது கைம்பெண்கள் தங்களின் கூந்தலினை மழித்துக் கொண்டுள்ளனர். இவற்றைக் காணும் போது கூந்தல் கணவனுக்கு மட்டுமே உரிமையுடையதாக சங்ககால மக்களிடையே நிலவியிருந்த நம்பிக்கை வெளிப்படுகின்றது. எனவே, போரில் பகை மன்னரை வென்ற அரசர்கள் அம்மன்னனுக்கு உரிமையுடையதாகக் கருதப்படுகின்ற அவன் மனைவியின் கூந்தலை மழித்து அம்மயிற்றினைக் கயிராகத் திரித்து அவனுக்கு உரிமையுடைய யானையைப் பிணித்துக் கட்டியுள்ளனர். இச்செயலானது அப்பகை மன்னரை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. பகைமன்னரை இழிவுபடுத்துவதற்காக அவனின் உரிமை மகளிரின் கூந்தலை மழிப்பது அப்பெண்களின் அழகைக் குறைப்பதுடன் அவர்கள் உள்ளத்தையும் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாக்கச் செய்யும் வன்செயலாக அமைகின்றன.

பகை மன்னரின் உரிமை மகளிரை கொள்ளையிடுதல்

போரில் தோல்வியைத் தழுவிய மன்னனின் உரிமை மகளிரை, வெற்றி பெற்ற மன்னன் கொள்ளைப் பொருளாகக் கருதி, அவர்களைக் கவர்ந்து வந்து தன்னுடைய நாட்டில் ஊரார் பலரும் நீருண்ணும் துறையில் மூழ்கிடவும், பொது அம்பலத்தினை மெழுகி விளக்கேற்றும் பணிகளைச் செய்யவும் பணிவிக்கிறான். இவ்வாறு பகை மன்னரின் உரிமைமகளிரை உள்ளூரார் பலரும் தொழுது செல்லவும் புதியராய் வந்தவர்கள் தங்கிச் செல்லும் இடமுமான பொது அம்பலத்தில் பணிவிடை செய்யுமாறு பணிவித்துள்ளமையைப் பட்டினப்.246-249 என்ற பாடலடிகள் மூலம் உணரலாம். இக்கொண்டி மகளிரே பிற்காலத்தில் பரத்தையராக மாறினர் என்பர் அறிஞர் பலர்.

விளையாடிக் கொண்டிருந்த பெண்களின் மகிழ்வைக் குலைத்தல்

அரசாதிக்கத்தின் பேரில் நடத்தப்பட்ட போர் வன்முறையின் போது பகைநாடுகளில் புகுந்த படைமறவர்கள் அங்குள்ள பெண்கள் மீதும் வன்முறையைப் கையாண்டுள்ளதை,

திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்

                                                விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற

                                                களங்கொள் யானைக் கருமான் பொறைய”        (புறம்.53:3-5)

என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது. மகிழ்ச்சியாகத் தெற்றி விளையாடிக் கொண்டிருந்த பெண்களின் மகிழ்வைக் குலைக்கும் வன்செயல்களில் பகைவரின் படைவீரர்கள் ஈடுபட்டிருந்ததையும் அப்பகைவரை பொறையன் கொன்றழித்துள்ளதையும் காணமுடிகின்றது. எனவே, போரின்போது மகளிர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகின்றது.

பெண்களின் உரிமைக்கு தடை

          சங்ககால அரசர்கள், பெண்களை ஒரு நுகர்ச்சிப் பொருளாகக் கருதியுள்ளனர். தங்களின் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் அளவிலேயே தங்கள் மனைவிக்கு மதிப்பு அளித்துள்ளனர். அரசியர் தங்கியிருக்கும் மாளிகைகள் அந்தப்புரம் எனும் பெயரால் அரசனைத் தவிர பிற ஆடவர் எவரும் உள்ளே செல்லவோ அரசப் பெண்டிரிடம் பேசவோ தடை செய்யப்பட்டிருந்தது. பெண்களின் உரிமை முழுவதும் தடைசெய்யப்பட்டு பிற ஆடவர்களுடன் பேசிப்பழகும் உரிமை தடைசெய்யப்பட்டுள்ளமையை,

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது

                                                ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்” (நெடுநல்.106-107)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

மேற்கண்ட சான்றுகளின் மூலம், சங்ககாலத்தில் அரசாதிக்கத்தின் பேரில் நடைபெற்ற போரில் பெண்களின் கூந்தலை மழித்தும் கொண்டி மகளிராக்கியும், பகை மன்னர்கள் மற்றும் அவர்களது உரிமை மகளிர் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதையும் பகைமன்னரின் படை மறவர்கள் பகைநாட்டு மகளிர் மீதும் நிகழ்த்திய வன்முறையினையும் காணமுடிகின்றது.

 

Series Navigationமெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா