சந்ததிகளும் ரப்பர் உறைகளும்

 

புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது.

 

ஆனால் நமது காலத்தில் புதுக் கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பின்நவீனத்துவக் கவிதை என்றும் எழுதுபவர்கள் தங்களையே நாடுகடத்திக்கொண்டு மிகவும் நீண்ட தூரம் விலகிப் போய்விட்டார்கள். அது வானம் பார்த்த பூமி. ஈரமில்லாத நிலம். அழகியல் என்பதை முனைந்து அந்தப் பிரதேசத்திலிருந்து துரத்திவிட்டார்கள்.

 

ஆனால் இந்த வகைக் கவிதை சமுதாயத்தைப் புரட்டிப்போடும் கருவி எனப் பேசப்படுகிறது. அவற்றை எழுதுபவர்கள் அந்த வடிவமே உன்னதமான வடிவம் என்பது போல அதனை உயர்த்தி வைக்கிறார்கள். அதிலுள்ள இருண்மையும் கலக்கமும் கலவரமுமே அந்தக் கவிதைகளின் வெற்றி என்றும் சொல்லப்படுகிறது. இருக்கலாம். அந்த வடிவம் பலருக்குப் பிடிக்கிறது என்பதும் தெரிகிறது. ஆனால் நான் ஒரு விரிவான வாசகன் என்ற அடிப்படையில் புதுக்கவிதை என்னை அதன் சுற்றுவட்டத்திலிருந்து துரத்தியடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

 

“சந்ததிகளும் ரப்பர் உறைகளும்” கவிதைகளையும் ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிராவிட்டால் நான் இயல்பாக விரும்பிப் படித்திருப்பேனா என்று சொல்லமுடியாது. ஆனால் படித்த பின் அது எனக்கு வெவ்வேறு வழிகளில் பிடித்துப் போயிற்று.

 

இந்தக் கவிதைகள் பலவும் அக விசாரணைகள். கவிஞர் தன்னைப் பார்த்தே பேசிக்கொள்ளும் பாவனையில்தான் அவை அமைந்திருக்கின்றன.  அதுவே ஞானிகளின் பாதை என்பதால், அது ஓர் உன்னதமான விசாரணைதான் என்று எனக்குப் பட்டது.

 

நாம் அனைவரும் உழலுகின்ற லோகாயதத்தை இந்தக் கவிஞர் நம்மைப்போல அணைத்துக் கொள்வதை விட அதனைப் புறந்தள்ளுவதே அதிகமாக இருக்கிறது. குறைந்தது அவருடைய கவிதையில் அப்படித்தான் தெரிகிறது.

“உனக்கு எதற்கு

கவிஞன் என்ற முகமூடி

ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்

உன் மனம் போலவே

கவிதையும் இருக்கும்”

 (“மனம் போல் கவிதை”)

என்னும் முதல் கவிதையிலேயே அவருடைய தனக்குத்தானே பேசிக்கொள்ளும் அகவிசாரணை தொடங்கிவிடுகிறது. “கவிதையெல்லாம் ஏன் உனக்கு? மனத்தளவில் நல்லவனாக இரு” என்று இந்தக்கவிதை சொல்வதாகவே எனக்குப் படுகிறது.

 

ஆணைப் பெண்அறிந்து கொள்ள முனைவதாக உள்ள “நாம்” என்ற கவிதையில்,

“சோதனை போடுகிறாயா

பகுதி பகுதியாக என்னை

 

கிடைக்காது

நீ தேடுவது

 

தேடப் பழகு

முதலில்

(“நாம்”)

என அவர் சொல்லும் போதும் அகக் குரலே கேட்கிறது. “தேடப் பழகு, தெரியப் பழகு, புரியப் பழகு, அப்புறம் வாழப் பழகலாம்” என நாம் அவருடைய அகக் குரலை விரித்துப் பேசவும் இடம் உள்ளது.

 

கவிதை சிறப்பாக இருக்கிறதா, உவப்பாக இருக்கிறதா என்பதை அந்தந்த வாசகர்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? அதை விட்டு விடலாம். அது கவிஞருக்கும் அவரைப் படிக்கும் வாசகனுக்கும் உள்ள அந்தரங்க உறவு. சிலருக்குப் பிடிக்காது என்பதும் சிலருக்குப் பிடிக்கும் என்பதும் எந்த இலக்கியப் படைப்புக்கும் உரிய தலைவிதிதான். எந்தத் தரப்பினரால் வாசகனின் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தது அது.

 

ஆனால் ஒன்று நாம் உறுதியாகக் கூறலாம். இந்தக் கவிதைகளில் கவிஞரின் உள்ளம் தெரிகிறது. சில மர்மமான பின்புலங்களில், கொஞ்சம் இருள் படர்ந்த பகுதிகளில் இவர் நின்று பேசினாலும், சொற்களின் தனித்தனிப் பொருள் சரியாக விளங்காவிட்டாலும், அதன் கூட்டுப் பொருள் தெளிவாகவே இருக்கிறது. அது கவிஞரின் பொதுமை உள்ளம். சமய, இன பூகோள எல்லை வேறுபாடுகளைக்கடந்த உள்ளம். இதுவே இந்தக்கவிதைத் தொகுப்பின் தலையாய பாடுபொருளாக வெளிப்படுகிறது.

 

“வானத்தில் ஒரு பறவை

எல்லைகள் தாண்டிப் பறக்கிறது

அதன் கவிதைக் கண்களுக்கு

பூமியின் பசுமையே தெரிகிறது”

(“கனல் திண்ணை”)

என்னும் வரிகளால் கவிஞரே இதனைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

 

ஈராக் மக்களுக்காக எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. ஆயிரத்தோர் இரவுகள் கதையில் கதை சொல்லும் ஷீரசாத் என்னும் பெண்ணின் தொன்மத்தைப் பயன் படுத்திக்கொண்டு அவர் சொல்கிறார்:

அமெரிக்கக் குண்டு பாய்ந்த

இளைஞனிடம்

தனது கடைசிக் கதையை

சொல்ல முடியாமல்

தவிக்கிறாள் ஷீரசாத்.

 

தண்ணீரே இல்லாத

வனத்தில்

அனைவரும் மனிதக் குருதியில்

நனைகின்றனர்.

(“அல்லாவுக்கே சலாம்”)

 

தொன்மங்களைப் பயன்படுத்திச் சொல்ல வரும் செய்தியை வாசகனுக்கு உணர்த்துவதில் கவிஞர் வல்லவர் என்பது பல இடங்களில் தெரிகின்றது. மகாபாரதத்தின் தொன்மையைப் பயன்படுத்தி தருமத்துக்கு அடையாளமாக உள்ள யுதிஷ்ட்ரனின் கடைசி நாட்களைத் தொடும் அரிய கவிதை ஒன்று உண்டு. யுதிஷ்ட்ரன் சொர்க்கத்தின் வாசலுக்கு நடந்தே போகிறான். அவனுடைய சகோதரர்கள் ஒவ்வொருவராக உதிர்ந்து விடத் தன்னைப் பின் தொடரும் ஒரு அடையாளம் தெரியாத நாயுடன் அவன் வாசலை அடைகிறான். அங்கே அவனை நோக்கிக் கேட்கப்படும் கேள்வி:

எல்லா தர்மங்களையும்

சரியாகச் செய்திருக்கிறாயா

 

ஆமாம்

 

அனைத்தும் சரியாக

இருக்கிறதாவென

சோதித்துவிட்டு வா

மீண்டுமொரு வாய்ப்புனக்கு

 

கதவுமூடிக்கொள்ள

தருமனின் காலடியில்

பசியுடன் படுத்திருந்தது

கருப்பு நாய்.

(“எட்டப்பார்வை”)

 

பொருள் கனத்து நிற்கும் கவிதை இது. தருமனும் நாயும் சொர்க்கத்தின் கதவும் பாரதத்தில் உள்ளவை என்றாலும், நாயின் பசி கவிஞருக்குச் சொந்தமானது. பாரதத்தில் இந்த நாய் என்பது தரும தேவன் மாறுவேடத்தில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தருமத்தின் இறுதியைக் கூற வந்த கவிஞர் அதனை ஒரு பசித்த நாயாக ஆக்கி யுதிஷ்ட்ரனுக்கும் குறைபாடு உண்டு என்பதைச் சுட்டுகிறார். அந்த அபூர்வமான புனைவும் இந்தக் கவிதைக்கு இடப்பட்டுள்ள “எட்டப்பார்வை” என்னும் தலைப்பும் வாசகனின் சிந்தனையை நீளச் செய்பவை. இதுவே கவிதை வாசிப்பதன் தலைமைப் பயன்களில் ஒன்று.

 

சைபீரின் கவிதைகளும் அவரின் கவிமனமும் வாசகனின் மனத்தை உள்ளார்ந்த சிந்தனைகளுக்கு உந்துவதாக அமைகின்றன.

 

Series Navigationஎழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15