சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

வைகை அனிஷ்
தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள் பயிற்றுவிக்கின்ற கல்லூரிகள் என அனைத்தையும் கழுவி விட்டு சுத்தம் செய்து பழைய பொருட்களை விலைக்கு விற்பனை செய்து பரன் மற்றும் கேட்பாரற்று கிடக்கின்ற பொருட்களை அப்புறப்படுத்தி அலங்காரம் செய்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எவ்வித பாகுபாடு அல்லாமல் தாங்கள் வைத்திருக்கும் சைக்கிளை கூட கழுவி சுத்தம் செய்து கலர் பேப்பர்களை ஒட்டி வாழை மரத்தை வாகனத்தின்முன் கட்டி பொறி, பழங்கள், பொங்கல் என தயார் செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்கின்றனர். இது ஒரு வகை தொழிலாளர்கள் திருநாள் என்று கூட பத்திரிக்கை அலுவலகங்கள் கூட தினசரி, வார, வாரமிருமுறை, மாத இதழ் பத்திரிக்கைகள் கூட ஆயுத பூஜை அன்று தங்கள் அலுவலகத்தில் உள்ள இயந்திரங்களை கழுவி சுத்தம் செய்து இயந்திரத்தை நிறுத்திவிடுகின்றனர். தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கின்றனர். தற்பொழுது கல்வி நிறுவனங்கள் கூட இதனை வியாபாரமாக்கி விஜயதசமி அன்று பள்ளியில் சேருகின்ற மாணவர்களுக்கு சிறப்புச்சலுகை, கூடுதல் சலுகை என அட்மிசன் மட்டும் நடைபெறும். ஆனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்திய சமூக அமைப்பில் தொழிலாளி-முதலாளி என்று பிரித்து பார்க்கும் பார்வை ஆங்கிலேயர்கள் காலமான கி.பி.17 ம் நூற்றாண்;டின் பிற்பகுதியில் இந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று தோன்றுகிறது. கி.பி.18 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாக இப்பார்வை கூர்மையடைந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது கல்வியின் தெய்வமான சரஸ்வதி பூஜையுடன் இணைத்து கொண்டாடப்படும் ஆயுத பூஜை விழா தொழிலாளர்களுக்கான விழாவாகத் தொடக்க காலத்தில் கருதப்படவில்லை.
நாள் நட்சத்திரம் பார்த்தல், ராகு காலம் எமகண்டம் பார்த்தல் ஆகிய நம்பிக்கைகள் மிகப்பழங்காலத்திலிருந்து ஒரு சிலரால் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றும் திருமணம், பெண்கள் பூப்படைதல், குழந்தை பிறத்தல் போன்றவைகளுக்கு பஞ்சாங்கம் பார்ப்பார்கள். இதில் நல்ல ஓரை, கெட்ட ஓரை என கூறுவார்கள். ஓரை என்ற சொல் காலத்தை வழிநடத்தும் கடவுளாக கிரேக்கர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஹோரா என்பது காலக்கணக்கீடு தொடர்பாக கிரேக்கச் சொல்லாகும். ஆங்கிலத்தில் அவர் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ஓரை என்ற சொல் பிறந்ததாக கூறுவர்.
இத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் அஷ்;டமி, நவமி, திதிகள் பற்றியது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் நவக்கிரகங்கள் என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கும் உரியன என்றும் பிரித்து வைத்துள்ளனர். சில கோயில்கள்களிலும், குடுமியான் மலை உள்ளிட்ட பல இடங்களில் 9 கிரகங்களைப்பற்றி கல்வெட்டுக்களை பொறித்துள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாக குற்றாலம் கோயிலுள்ள கி.பி.1754 ஆம் ஆண்டைச்சேர்ந்த தென்காசிப் பாண்டியர் ஆட்சியில் இறுதியாண்டுக் காலச் செப்புப் பட்டயங்களில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகிறபேர் என்றும் பொதுமக்கள் குடிபடை செய் தொழிலாளிகளன் என்றும் குறிப்பிடும் படி கல்வெட்டுக்கள் அமைந்துள்ளது.
கிரகங்களின் அடிப்படையில் எட்டு என்பது சனிக்கிரகத்துக்கும் ஒன்பது என்பது செவ்வாய் கிரகத்திற்கும் உரியது என்றும் சோதிட இயல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சனிக்கிரகம் உடலுக்கு ஏற்படும் உட்காயங்கள், இரத்தக்கட்டு, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்குக் காரணம் என்றும் செவ்வாய்க்கிரகம் வெட்டு-குத்து காயங்கள், தீக்காயங்கள், இரத்தக்கொதிப்பு ஆகியவற்றுக்குக் காரணம் என்பது ஜோதிட இயல் தொடர்பான நம்பிக்கைகளாகும். அஷ்டமி, நவமி ஆகியன முறையே சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்குரிய திதிகளாதலால் இந்நாளில் ஒரு செயலைச் செய்யும் போது இக்கிரகங்களின் காரகத்துவத்தால் நோய்களோ ஊறுபாடுகளோ ஏற்பட்டுவிடக்கூடும் என்ற பயத்தில் அஷ்டமி, நவமி திதிகள் நல்ல செயல் அல்ல என ஜோதிடர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்பது ஓர் ஆண்டின் ஆறாவது மாதமாகும். அதாவது முதல் ராசியில் சூரியன் நிற்பதாகக் கருதப்படும் சித்திரை மாதம் தொடங்கி, ஆறாவது வீடாகிய கன்னி ராசியில் சூரியன் நிற்பதாகக் கருதப்படும் மாதமே புரட்டாசி மாதமாகும். இம்மாதத்தில் ஆறாவது வீடாக அமைவது கன்னி மாதமாகும். இம்மாதத்தின் வளர்பிறைப் பட்சத்தில் வரும் அஷ்டமி, நவமி திதிகளில் போர்க்கருவிகளைப் போருக்கோ பயிற்சிக்கோ பயன்படுத்தாமல் அவற்றால் தீங்கு நேராமல் காத்துக் கொள்வதற்காக அவற்றை நீராட்டி அலங்கரித்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. போர்க்கலைப்பயிற்சி என்பது பண்டைக்காலத்தில் கட்டயமாக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி காலம் முடிந்த பின்னர் வரும் தசமி திதியை விஜயதசமி என்ற பெயரில் விரதம் முடித்துப் புதிதாகப் போர்க்கலைப் பயிற்சி தொடங்கும் நாளாக வெற்றிக் கருவிகளையும் கருதியுள்ளார்கள். ஆயுதங்கள் முதலான கருவிகளையும் உருவாக்கும் கம்மாளர் குலத்தவர் புரட்டாசி மாதத்தின் இறுதி நாளன்று தமது தெய்வமான விஸ்வகர்மாவுக்கு ஓய்வு நாள் என்று கருதி தமது தொழிற்கருவிகளுக்கு அன்று ஓய்வளிப்பர். விஜயதமசிக்கு முதல் நாளான ஆயுத பூஜை நாளினை மகா நவமி என அழைப்பர்.
கி.பி.15-16 ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியப் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர அரசின் தலைநகரான ஹம்பியில் மகாநவமியன்று அரசர்க்குரிய குதிரைகளின் அபிஷேகம் நடைபெற்றது என்றும், மகாநவமி திப்பா என்ற அரங்கில் அரசர் ஆயுதங்களுக்கு வழிபாடு செய்தார் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. விஜயநகர வீழ்ச்சிக்குப் பின்னர் மைசூர் உடையார் அரச மரபினர் மகாநவமி விழாவினை விமர்ச்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இவ்விழாவில் அரசர் தமது படைக்கலன்கள், படைக்கலக் கொட்டில்களில் உள்ள ஆயுதங்களை அலங்கரித்துப் பட்டாடை மலர் மாலைகள் சூட்டி வழிபடுவதும், விஜயதசமியன்று படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளன. மைசூர் தசரா அதாவது பத்து இரவுகள் என்ற பெயரில் அணிவகுப்பு ஊர்வலமும் அம்பு போடுவதும் தற்போதும் வழக்கில் உள்ளன.
அரசன் மற்றும் அரச குலப் பெண்கள் மட்டுமின்றி மேல்தட்டு வர்க்கங்களைப் சேர்ந்த அனைத்துப் பெண்களும் தங்கள் இல்லத்தில் கொலுமண்டபம், அணிவகுப்பு ஆகியவற்றின் அடையாளமாக கொலு பொம்மைகள் வைத்தும் வழிபடும் வழக்கம் உருவாயிற்று. கொலுவுடன் தங்களது தொழிற்கருவிகளையும் கொலுவுடன் குடிபடை செய்தொழிலாளி யரின் வழிபாடாகப் பரிணமா வளர்ச்சியடைந்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தவும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஒரே விதமான தொழில்நுட்ப அறிவினைப் பெருமாறு இந்தியர்களுக்கு அறைகூவல் விடுக்கவும் எழுச்சிய+ட்டவும் இவ்விழா அடையாளச் சின்னமாக மாறியது. ஆயுதங்கள் செய்வோம். காகிதங்கள் செய்வோம். ஆலைகள் அமைப்போம். கல்விச்சாலைகள் அமைப்போம் என்றான் பாரதி. அதே பாரதி கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று ஆயுதங்களின் தெய்வத்தையும், பிரம்மதேவன் கலையிங்கு நீரே என்று அத்தெய்வங்களின் தொண்டர்களாகிய தொழிலாளர்-முதலாளிகளையும் பாடியுள்ளார். இன்று இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பூஜையாக ஆயுதப்பூஜை கொண்டாடப்படுவது வேற்றுமையில் ஒற்றுமை மிகுந்த நாடு என்பது இது ஒரு எடுத்துக்காட்டு.

Series Navigationநிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி