சலனமின்றி அப்படியே….

Spread the love

 

 

 

ஒளிஉயிர்க் கதிரொன்று

தன்னில் பாதியை

சினைக்குள் தேடி

புனைந்த க்ஷனம்…

 

இரவு பகல்

ஒலி வளி

ஐம்புலன் ஐம்பொறி

அனைத்தும் அடங்கி

நிசப்தமானது நித்திலம்

 

புனைவில் உதித்த

செதிலற்ற குஞ்சொன்று

ஞாலக்கடலில் வீழ்ந்தது

 

எங்கிருந்து வந்தேன்?

 

நீந்திநீந்தித் தேடியது குஞ்சு

ஓரம் தெரியவில்லை

ஒருதிசையும் தெளிவில்லை

 

மெல்ல மெல்ல

மேலே வந்து

அன்னாந்து பார்த்தபோது

 

மல்லாந்து கிடந்தது வானம்

ஓரம் தெரியவில்லை

ஒரு திசைகள் தெளிவில்லை

 

செதில்கள் செத்தன

மூழ்கிமூழ்கி

எங்கோ மறைந்தது

ஞாலக்கடலும்

வானமும்

சலனமின்றி அப்படியே…

 

அமீதாம்மாள்

 

Series Navigationதொலைந்து போன சிரிப்புகள்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்