சாட்சி யார் ?

 

 

சுற்றங்களின் முன்

அவமானச் சின்னமாக 

நிறுத்தப் படுகிறேன் !

கழுத்தில் இல்லாத தாலி

பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு !

நமக்குள் நடந்த 

உடன் படிக்கைக்கு

சாட்சி யார் ?

 

இருவரும் அந்த நீலவானம் 

எழில் நிலவும்

நான்கில் நின்றதோர் சாட்சி உண்டு

எங்கும் நிறைந்தோன்

மௌனியாகவே நிற்பவனாகிய 

கடவுள்

காதலர்களுக்கு புரியும் 

இம்மூன்றோர் மொழி

சுற்றி நிற்கும் தூயவருக்குப் 

புரியுமா?

 

நகைப்பினூடே பரிசீலிக்கப் படுகிறது

பெண் கற்பின் மேன்மை !

ஒருவனாக இருந்திருந்தால் தாலி ஏறியிருக்கும்

எத்தனை பேரோ…?

உன்னைக் காதலித்ததின் நிமித்தம்

இன்னும் என்ன பரிசில் தரப் போகிறாய்?

கர்ப்பிணி என்ற பட்சாதாபம் இன்றிக்

கடந்து போனவன் தானே நீ

 

ஆதராவாக சாய்த்துக் கொள்ள 

வேண்டியவன்

எங்கோ ஓடி ஒளிந்தாய்

உன் பாரா முகத்தைப் 

பரிகசிக்கத் தூண்டியது

என் வயிற்றுக் கரு !

உலகிற்கு நான் மௌனி யானேன்

பேசினேன் 

பேசிக் கொண்டே இருந்தேன் !

என் பேச்சு 

அந்த உயிர்ப் புழுவோடுதான் !

 

மசக்கை காண வில்லை நான்

வாந்தி பண்ண வயிற்றில் 

உணவொன்று மில்லை !

மாங்காய் கேட்ட திங்கள் 

ஏளனத்தில் அழுது நின்றேன் !

சாம்பல் திங்க மனமின்றிப் போனேன் !

என் விழிகள் அப்பொழுதும்

உன்னைத் தேடியது !

 

இந்தக் கணம் நீ வந்துவிட கூடும் 

என்றொரு எதிர்பார்ப்பில்

வர வில்லை நீ !

வராத நாள் அன்று

நம் காதல் மரணித்தது என்ற 

சேதியைவிட

நீ மரணித்துப் போனாய் என்றொரு 

சேதியை

எதிர்பார்த்துத் தவித்தேன்,

உன்னோடு நானும் சேர்ந்து 

இறக்கவென ! 

++++++++++++++++

Series Navigationபங்காளிகளின் குலதெய்வ வழிபாடுஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]