சாம்பல்

 

 

 

அந்த வீட்டின் பெயரே

கோழிக்குஞ்சு வீடுதான்

வீடு நிறைய கோழிகள்

 

பஞ்சுக்குஞ்சுகள் பின்தொடர

இதோ சாம்பல்நிறக் கோழி

எல்லாக் கோழிக்குமே

தாய்க்கோழி சாம்பல்தான்

 

குஞ்சுக் காலங்களில்

சாம்பலின் முதுகு பல்லக்கு

றெக்கைகள் குடைகள்

மிதிகள் ஒத்தடங்கள்

 

குஞ்சுகளுக்காகவே

குப்பை கிளறும் சாம்பல்

பொறுக்கும் குஞ்சுகள்

பொறுமை காத்து

பொறுக்கும் சாம்பல்

 

சோளம் சோறு

பயறு பருப்பு

கறி மீன் கழிவு

சோற்றுக்கஞ்சித் தவிடு

பிள்ளைகள் முடித்ததும்

இருந்தால் உண்ணும் சாம்பல்

 

சகோதரங்களைக் கொத்திவிரட்டும்

திமிர்பிடித்த அந்த கறுப்புக்கோழியை

பருந்தின் கிடுக்குப்பிடியிலிருந்து

காப்பாற்றியது சாம்பல்தான்

 

வெருகுப்பூனை கீரி

அரவம் கேட்டால்

கேவி விரட்டும் சாம்பல்

சாகத்துணியும் சாம்பல்

 

இன்று

 

சாம்பல் கிழடாகிவிட்டது

அடையும் நேரம் அதிகம்

மேயும் நேரம் கொஞ்சம்

அதன் தாய்மை, பொறுமை

தியாகம் கருணை எல்லாம்

மறக்கப்பட்டுவிட்டன

 

உயிர்த்தாய் சாம்பல்

உபரியாகிப் போனது

சாம்பலாகு முன்னேயே

சாம்பலாகிவிட்டது

சாம்பல்நிறக்கோழி

 

அமீதாம்மாள்

Series Navigationஓர் இரவில்புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்