சாயப்பட்டறை

தெற்குச் சீமையின்
வற்றிப் போன மாரை
சப்பிச் சுவைத்து கடித்து
சுரக்கும் எச்சிலில்
பசியைத் தணித்துக்
கொண்ட வரலாற்றை
முதுகில் சுமந்து
கொண்டு அகதியாய்
புலம் பெயர்ந்த நகரமிது.

கால்கடுக்க நின்று
பட்டன் தைக்கும்
பணியாளாக-நிறைமாத
கர்ப்பிணி மனைவியை
அனுப்பி வைத்தும்
வயதிற்கு வந்தத்
தங்கையைக் கம்பெனி
வேனில் ஏற்றி விட்டு
போனவள் போனவளாகத்
திரும்ப வேண்டுமெனும்
வயிற்று நெருப்பை
அணைக்க வழியில்லாதும்
சாவை பார்த்துக் கிடக்கும்
சீக்காளி அம்மாவிற்கு
மருந்து வாங்கக்
காசில்லாதும் வாழ
வந்த வக்கத்தவன்.

நாளத்தின் குருதியை
கத்தரிக்கோல் தையல்
எந்திர ஊசி வழி
துணிக்குள் செலுத்தும்
வேதனையைச் சுமந்து
சேர்த்த காசுகளில்
இன்னும் வாங்கிய கடனின்
வட்டியே குறைந்தபாடில்லை.

தன்மார்புக் காம்பை நீட்டி
அனைவருக்கும் பால்
சுரந்து வயிறு குளிர்வித்து
கோமாதாவாகக் காட்சியளித்த
நகரத்தாயின் காம்புகளில்
நஞ்சு சுரப்பதாய் இன்று
துரத்தப்படுகிறேன்.

உள்ளூர்க்கடன்
தங்கைத்திருமணம்
சொந்தவீடு
உழைப்புக்கேற்றகூலி
கையில்நாலு காசு
எனக் கட்டி வைத்த
மனக் கோட்டைகளை
உடைத்தெறிந்து தாயகம்
திரும்பச் சொல்லி வந்த
மரணஓலையைச் சுமந்து
கொண்டு நிற்கிறேன்.

என் கிராமத்தில் நஞ்சைக்
கடனாய் பெற மிச்சப்பட்டவன்
என எவனுமில்லை.
இங்கு நஞ்சு பாய்ச்சி ஓடும்
சாக்கடை நீரில் ஒரு
குவளை அள்ளிப் பருக
அனுமதியுங்கள்-பசிஅமர்த்தி
என் தேசம் திரும்புகிறேன்
ஒரு சவமாக.

-சோமா

Series Navigationஇறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறதுமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24